சினிமா கேள்வி-பதில் ! : குருவியார்


சினிமா கேள்வி-பதில் ! : குருவியார்
x
தினத்தந்தி 4 March 2018 7:20 AM GMT (Updated: 4 March 2018 7:20 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்வது, எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம்? (ப.கணபதி ராம், சென்னை-1)

ரஜினிகாந்தின் வீர தீர சாகசங்களுடன், குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படம், அது!

***

நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்குப்பின் அறிமுகமான இளம் கதாநாயகிகளில், ஒளிமயமான எதிர்காலம் யாருக்கு காத்திருக்கிறது? (கே.ஆனந்த், திருச்சி)

‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சாயிஷா ஒரு ரவுண்டு வருவார் போல் தெரிகிறது. சாயிஷாவுக்கு சிரித்த முகம். நன்றாக நடிக்கவும் தெரிந்திருப்பதால், அவருக்கு புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன!

***

குருவியாரே, சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகமா? கார்த்திக்கு ரசிகர்கள் அதிகமா? (எஸ்.பாலசிங், தூத்துக்குடி)

சூர்யா திரையுலகுக்கு வந்து 21 வருடங்கள் ஆகின்றன. அந்த வகையில், அவருக்கே ரசிகர்கள் அதிகம். மிக குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை சம்பாதித்தவர், கார்த்தி!

***

குருவியாரே, ‘கடலோர கவிதைகள்’ ரேகா தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? (ஏ.அமீர் கம்ஸா, கடையநல்லூர்)

‘‘திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன்’’ என்று கூறும் நடிகைகளில் இருந்து மாறுபட்டவர், ரேகா. இவர் நடிக்க மாட்டேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. சமீபத்தில் திரைக்கு வந்த ‘கேணி’ படத்தில், நீதிபதியாக அவர் நடித்து இருந்தார். தொடர்ந்து சில படங்களில், முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்!

***

சரண்யா பொன்வண்ணன் அறிமுகமான படம் எது, அவர் இதுவரை எந்தெந்த மொழிகளில் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? அவற்றில் அவருக்கு மிக நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் எது? (எஸ்.சத்யா, டி.கல்லுப்பட்டி)

சரண்யா பொன்வண்ணன் அறிமுகமான படம், ‘நாயகன்.’ முதல் படத்திலேயே அவர் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார். அவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில், 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அவற்றில் அவருக்கு மிக நல்ல பெயரை வாங்கி கொடுத்ததுடன், தேசிய விருதையும் பெற்று கொடுத்த படம், ‘தென்மேற்கு பருவ காற்று!’

***

குருவியாரே, ஜெயம் ரவி, இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் எது, அதன் கதை என்ன என்று கூற முடியுமா? (ஏ.ஜார்ஜ், திண்டுக்கல்)

ஜெயம் ரவி இதுவரை 23 படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘டிக் டிக் டிக்.’ இது, ஒரு விண்வெளி பயண கதை!

***

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான அமலாபால் படுகவர்ச்சியாக நடித்தது தமிழ் படத்திலா, மலையாள படத்திலா? (ஆர்.செல்வகுமார், சேலம்)

‘சிந்து சமவெளி’ என்ற தமிழ் படத்தை அமலாபாலால் மறக்க முடியாது. அவருடைய ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். மற்ற கதாநாயகிகள் எல்லோரும் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில்-மாமனாரின் இன்பவெறிக்கு பலியான மருமகளாக-துணிச்சலுடன்-படுகவர்ச்சியாக அவர் நடித்து இருந்தார்!

***

“மன்னிக்க வேண்டு கிறேன்...உந்தன் ஆசையை தூண்டுகிறேன்” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (ஆர்.கோதண்டராமன், வேலூர்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘இரு மலர்கள்.’ பாடல் காட்சியில் நடித்தவர்கள்: ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன், பத்மினி!

***

குருவியாரே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை, படமாக எடுக்க இருப்பதாக பேசப்படுகிறதே...அவர் வேடத்தில் நடிப்பது யார்? (ஜி.மைக்கேல், ஈரோடு)

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க சில முன்னணி கதாநாயகிகள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற இளம் கதாநாயகியும் விருப்பம் தெரிவித்துள்ளார்!

***

பழைய கதாநாயகிகள் சரோஜாதேவி, விஜயகுமாரி, புஷ்பலதா, கே.ஆர்.விஜயா ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? (ஆர்.தனபால், சென்னை-63)

4 பேரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

***

குருவியாரே, வசதியான குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், இன்னும் எத்தனை வருடங்கள் திரையுலகில் நடித்துக் கொண்டிருப்பார்? (என்.பத்மநாபன், நெய்வேலி)

எல்லா கதாநாயகிகளும் தங்கள் மார்க்கெட் சரியும்போது, திருமணம் செய்து கொள்வார்கள். “இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என்றும் கூறுவார்கள். அதற்கு கீர்த்தி சுரேசும் விதிவிலக்காக இருக்க மாட்டார்!

***

குருவியாரே, கமல்ஹாசனும், பிரபுதேவாவும் ஒரு படத்தில் மீண்டும் இணைவார்களா? (ஏ.லாரன்ஸ், மாங்காடு)

பிரபுதேவா டைரக்‌ஷனில், கமல்ஹாசனை நடிக்க வைக்க ஒரு முயற்சி நடைபெறு கிறது. அந்த படத்தில் நடிப்பது பற்றி கமல்ஹாசன் இன்னும் உறுதி செய்யவில்லை!

***

‘ஆதிபராசக்தி’ படத்தை டைரக்டு செய்தவர் யார்? (பி.அருண், கோத்தகிரி)

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். நடித்த ‘நம் நாடு,’ சிவாஜி நடித்த ‘சிவந்த மண்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்கிறார்களே...அது என்ன ஒற்றுமை? (சி.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்)

‘நம் நாடு,’ ‘சிவந்த மண்’ ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தன!

***

ராதிகா ஆப்தே தினமும் தன் உடம்பு முழுவதும் தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்கிறாராமே..? என்ன காரணத்துகாக? (மீரா வாசுதேவன், பணகுடி)

எதிரிகள் மற்றும் பகைவர்களிடம் இருந்து தப்பிக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறதாம். (எறும்புகள் கடிக்காதவரை பிரச்சினை இல்லை!)

***

ரம்யா நம்பீசன் மிக குறைந்த சம்பளம் வாங்கி வருகிறாராமே...என்ன விஷயம்? (கோ.குண சீலன், நாகர்கோவில்)

அவருக்கு பெரிய அளவில் கோடி கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை இல்லையாம்!

***

15 வருடங்கள் ஆன நிலையில், திரிஷாவின் உடம்பு இன்னமும் ஒல்லியாகவே இருக்கிறதே..? (எஸ்.மகாதேவன், குமாரபாளையம்)

திரிஷா குண்டு போடுவதற்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

***

குருவியாரே, சென்னையை அடுத்து ஒரு கிராமத்தில், அர்ஜுன் ஒரு ஆஞ்சநேயர் கோவில் கட்டி வந்தாரே...இப்போது அந்த கோவில் பணிகள் எந்த அளவில் உள்ளது? (கே.சிதம்பரநாதன், கோவில்பட்டி)

கோவிலை சுற்றிலும் மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி நிறைவடைந்ததும், பொதுமக்களுக்காக திறந்து விடப்படும்!

•••

Next Story