தியேட்டர்களில் வசூல் குறைந்தது; காட்சிகள் ரத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுகின்றன


தியேட்டர்களில் வசூல் குறைந்தது; காட்சிகள் ரத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுகின்றன
x
தினத்தந்தி 4 March 2018 8:30 PM GMT (Updated: 4 March 2018 7:15 PM GMT)

திரையரங்குகளில் படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரையரங்குகளில் படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் புதிய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. இந்த மாதம் 20 தமிழ் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்ததால் தியேட்டர் அதிபர்களால் புதிய படங்களை திரையிட முடியவில்லை. ஏற்கனவே ஒடிய படங்களையே தொடர்ந்து திரையிட்டனர். இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. 400 பேர் அமரும் தியேட்டர்களில் 15 பேர், 20 பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்ப்பதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார்.

இதனால் பல தியேட்டர்களில் காலை, பகல் மற்றும் இரவு காட்சிகளை ரத்து செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். புறநகர் பகுதிகளில் பல தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. வசூலும் 10 சதவீதமாக குறைந்துள்ளது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் கூட்டம் இல்லை.

சில தியேட்டர் அதிபர்கள் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், எங்கவீட்டு பிள்ளை, நினைத்ததை முடிப்பவன், சிவாஜி கணேசனின் அவன்தான் மனிதன், வசந்த மாளிகை உள்ளிட்ட பழைய படங்களை திரையிட்டு வருகின்றனர். விஜய் நடித்த மெர்சல், அஜித்குமார் நடித்துள்ள வேதாளம் படங்களும் மீண்டும் திரையிடப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடாததால் வசூல் குறைந்துள்ளது. கூட்டமும் இல்லை. இதனால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Next Story