சினிமா செய்திகள்

சினிமா பட அதிபர் பட்டியல் சேகர் மரணம் + "||" + Cine film chairman pattial sekar death

சினிமா பட அதிபர் பட்டியல் சேகர் மரணம்

சினிமா பட அதிபர் பட்டியல் சேகர் மரணம்
சென்னையில் சினிமா பட அதிபர் பட்டியல் சேகர் மரணம் அடைந்தார்.
சினிமா பட அதிபர் ‘பட்டியல்’ சேகர், சென்னையில் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.

‘அறிந்தும் அறியாமலும்,’ ‘பட்டியல்,’ ‘கழுகு,’ ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை தயாரித்தவர், சேகர். ‘பட்டியல்’ படத்தை தயாரித்ததால், ‘பட்டியல்’ சேகர் என்று அழைக்கப்பட்டார்.


இவர் இருதய கோளாறு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு, ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 7.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். உடனடியாக அவருடைய உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவர் உடலுக்கு பட அதிபர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 4.30 மணிக்கு அவருடைய உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த ‘பட்டியல்’ சேகரின் சொந்த பெயர், சேகர் என்கிற குலசேகரன். அவருடைய மனைவி பெயர், மதுபாலா. இவர்களுக்கு விஷ்ணுவர்தன், கிருஷ்ணா ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவர்தன், பட்டியல், அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம், சர்வம் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். கிருஷ்ணா, வானவராயன் வல்லவராயன், யாக்கை, பண்டிகை, வீரா உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.