சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்யும் புதிய படத்தின் கதாநாயகி யார்? (பி.விக்ரம்சிங், சென்னை–1)

அந்த படத்தின் கதாநாயகி யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க 3 பிரபல கதாநாயகிகள் முயற்சி செய்து வருகிறார்கள்!


***

திரிஷாவை திரையில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே...அவர் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார்? (எம்.சுந்தர பாண்டியன், மதுரை)

திரிஷா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘மோகினி.’ அந்த படத்தை மாதேஷ் டைரக்டு செய்து இருக்கிறார்!

***

குருவியாரே, மணிரத்னம் டைரக்டு செய்து வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படம் எந்த நிலையில் உள்ளது? (எஸ்.தேனப்பன், பாலக்காடு)

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படம் பாதிக்கும் மேல் வளர்ந்து விட்டதாக தகவல்!

***

பருமனாக இருந்த லட்சுமி மேனன் மீண்டும் ‘மார்க்கெட்’ பிடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். அப்படியிருந்தும் இழந்த ‘மார்க்கெட்’டை அவரால் பிடிக்க முடியவில்லையே...? (இரா.தங்கராஜ், வாடிப்பட்டி)

ஒல்லியாகி விட்ட லட்சுமி மேனனை விட, பருமனாக இருந்த லட்சுமி மேனனே பரவாயில்லை என்று சொல்கிற அளவுக்கு அவர் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிப்பது, அவ்வளவு சுலபம் அல்ல!

***

குருவியாரே, நயன்தாராவின் காதல் பார்வை எப்போதுமே டைரக்டர்களை நோக்கியே இருக்கிறதே...அதன் ரகசியம் என்ன? (கோ.சாமிநாதன், நாகர்கோவில்)

டைரக்டர்களால்தானே கதை சொல்ல முடியும்..? (நயன்தாராவுக்கு கதை கேட்க ரொம்ப பிடிக்குமாம்!)

***

அஞ்சலி மறுபடியும் ஐதராபாத்திலேயே தங்க ஆரம்பித்து விட்டாரே...அவர் சென்னையை மறந்தது ஏனோ? (ஜே.அரவிந்த், திருச்செங்கோடு)

முதலில் சித்திக்காக சென்னையை மறந்த அஞ்சலி, அப்புறம் ஒரு டைரக்டருக்காக சென்னைக்கு ‘குட்பை’ சொன்னார். இப்போது, ஒரு நடிகருக்காக சென்னையை புறக்கணித்து ஐதராபாத்திலேயே தங்கி விட்டார்!

***

குருவியாரே, அர்ஜுன்–வடிவேல், பார்த்திபன்–வடிவேல்...இவர்களில் எந்த ஜோடி ‘சூப்பர் காமெடி?’ (ரவீந்திரன், கடையநல்லூர்)

இரண்டு ஜோடியும் ஒன்றுக்கு ஒன்று குறைந்தது அல்ல. ‘‘சொல்லுங்க முதலாளி’’ என்று அர்ஜுன் கையை கட்டிக்கொண்டு வடிவேல் முன்பு பம்முவதும், ‘‘வந்துட்டான்யா’’ என்று பார்த்திபனைப் பார்த்து வடிவேல் பயப்படுவதும், நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடி காட்சிகள்!

***

சினிமா ஸ்டூடியோக்களிலேயே நடைபெற்று வந்த படப்பிடிப்புகள், எப்போது வெளியே நடைபெற தொடங்கியது? (எஸ்.ராஜேந்திரன், பணகுடி)

1980–ம் ஆண்டுக்கு பின்னால் சினிமா, ஸ்டூடியோக்களில் இருந்து வெளியே வந்து விட்டது. நகரம், கிராமம் என்று பொருத்தமான இடங்களை தேடிப்போய் படப்பிடிப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள்!

***

குருவியாரே, ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் என்ன வயது ஆகிறது? இருவருமே திருமணத்தை தள்ளிப் போடுவது ஏன்? (டி.செபாஸ்டியன், திருவாரூர்)

ஆர்யாவும், விஷாலும் முப்பத்தைந்து வயதை தாண்டிய முதிர் கண்ணன்கள். இரண்டு பேருக்குமே திருமணத்தை விட, தொழிலில் ஆர்வம் அதிகம்!

***

தமிழ் பட கதாநாயகிகளில் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் அழகு. சிரிப்புக்கு சினேகா. ஆட்டத்துக்கு அனுஷ்கா. ஓரப்பார்வைக்கு ஓவியா என்றால்–ஒல்லியான உடற்கட்டுக்கு யார்? (சி.அருண்குமார், தேனி)

ஒல்லியான உடற்கட்டுக்கு திரிஷாதான்!

***

குருவியாரே, குஷ்பு–கவுதமி ஆகிய இருவரில் திரையுலகை பொருத்தவரை யார் சீனியர், யார் ஜூனியர்? (எம்.மணிகண்டன், புதுச்சேரி)

கவுதமி சீனியர்; குஷ்பு ஜூனியர். குஷ்புவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதும், கவுதமிக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன!

***

விஜய் மில்டன் இயக்கியிருக்கும் ‘கோலி சோடா–2’ படம் எப்போது திரைக்கு வரும்? (மா.தியாகு, வேலூர்)

‘கோலி சோடா–2’ படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, ‘நான் ஈ,’ ‘பாகுபலி,’ ‘பாகுபலி–2’ ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி, அடுத்து இயக்கும் படம் எது? அதில் நடிப்பவர்கள் யார்–யார்? (ஏ.பாஸ்கரன், பூந்தமல்லி)

ராஜமவுலி, ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து வருகிறார். பெயர் சூட்டப்படாத அந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்!

***

‘தெறி’ படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார்? (ஆர்.ஜெய், பண்ருட்டி)

நைனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா? (கே.ஜார்ஜ், அரக்கோணம்)

இன்னும் முடியவில்லை. டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பும் இன்னும் முடிவடையவில்லை. அது முடிவடைந்ததும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

அமலாபால் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறாரே...அது எதற்காக? (எஸ்.தாமஸ், குரோம்பேட்டை)

‘பொதுச்சேவை’ செய்வதற்காக...!

***

குருவியாரே, ‘‘நான் உன்னை அழைக்கவில்லை...என் உயிரை அழைக்கிறேன்’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? (கே.குருராஜ், போரூர்)

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் இடம் பெற்ற பாடல், அது!

***

சரத்குமார் தமிழ் படங்களில் மட்டும்தான் நடித்து இருக்கிறாரா? (வி.கவுதம், திருச்சி)

சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். இப்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, பி.ஆர்.விஜயலட்சுமி டைரக்டு செய்திருக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தின் கதையை கூற முடியுமா? (கே.ஆனந்த், கொண்டலாம்பட்டி)

‘அபியும் அனுவும்,’ அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்!

***

‘காலா’ படத்தில், இந்தி நடிகர் நானா பட்டேல் என்ன வேடத்தில் நடித்து இருக்கிறார்.? (எம்.சசிகுமார், பெங்களூரு)

வில்லனாக நடித்து இருக்கிறார்!

***