நட்சத்திரங்களின் சுவாரசியமான பழக்கங்கள்


நட்சத்திரங்களின் சுவாரசியமான பழக்கங்கள்
x
தினத்தந்தி 25 March 2018 6:19 AM GMT (Updated: 25 March 2018 6:19 AM GMT)

பிரபலமான இந்தி சினிமா நட்சத்திரங்களின் மறுபக்கம் பல சுவாரசியங்களை உள்ளடக்கியது. அவர்களில் சிலரது மறுபக்கத்தை புரட்டிப்பார்ப்போம்!

பிரபலமான இந்தி சினிமா நட்சத்திரங்களின் மறுபக்கம் பல சுவாரசியங்களை உள்ளடக்கியது. அவர்களில் சிலரது மறுபக்கத்தை புரட்டிப்பார்ப்போம்!

பிரியங்கா சோப்ரா
(நாள் முழுக்க நாய்களோடு விளையாடுவார்)


விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர், பிரியங்கா சோப்ரா, இவருக்கு சாதனை படைத்த மனிதர்களின் சுய சரிதைகளை படிப்பது ரொம்ப பிடிக்கும். சிறுகதை மற்றும் கவிதைகள் எழுதும் பழக்கமும் கொண்டவர். இவருடைய தந்தை ராணுவ அதிகாரி. மும்பை, லக்னோ, ரேபரேலி போன்ற பல இடங்களில் இவருடைய படிப்பு தொடர்ந்தது. மென்பொருள் பொறியாளராக ஆக வேண்டும் என்பதுதான் பிரியங்கா சோப்ராவின் ஆசையாக இருந்திருக்கிறது. எதிர்பாராதவிதமாக மாடலிங் உலகுக்குள் புகுந்து மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட் போன்ற பட்டங்களை வென்று சினிமா நட்சத்திரமாகி விட்டார். மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது பெண் இவர். நாய்களோடு விளையாடுவது இவருடைய பிரதான பொழுதுபோக்கு. நாள் முழுக்க நாய்களோடு விளையாடினால்கூட இவருக்கு போரடிப்பதில்லை.

ரண்வீர் சிங்
(கார் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம்)


ரண்வீர் சிங் மேல்சட்டை அணியாமல் எந்த படத்திலாவது நடித்தால் அது வெற்றியடையாது என்பது அவரது அம்மாவின் கணிப்பு. அதேபோவே அவர் மேல் சட்டை அணியாமல் எந்த வேலை செய்தாலும் அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டுவிடுமாம். அப்படி பலமுறை நடந்திருக்கிறதாம். ஒரு குளிர்பான விளம்பரத்திற்கு நடிக்க துணை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். ரண்வீர் ஆர்வத்துடன் சென்று நடித்தார். ‘திரையில் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பதற்காகவே நடிக்க சென்றேன்’ என்று கூறினார். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அவருக்கு 100 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதுதான் அவர் பெற்ற முதல் சம்பளம். ரண்வீருக்கு டிரைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரது அம்மா அதை விரும்ப மாட்டார். எப்போதும் டிரைவர் தான் ரண்வீரை அழைத்து செல்வார். ஆனால் பாதிவழியில் டிரைவரை பின் சீட்டில் உட்கார சொல்லி விட்டு இவர் கார் ஓட்டிச் செல்வார். இவர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். அவர் நடித்த ‘ராஜா பாபு’ படத்தை 64 முறை பார்த்திருக்கிறார்.

தீபிகா படுகோன்
(சாப்பிடுவதில் ஆனந்தம்)


மாடலிங் உலகில் பிரபலமானவர் தீபிகா. அங்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுவிட்டார். குறுகிய காலத்தில் புகழ் பெற்ற நடிகையான இவர், ஷாருக்கானுடைய ரசிகை. இந்தி திரை உலகில் அடியெடுத்து வைத்ததும் முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நிஹார் பாண்டேவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தார். அவருடன் சேர்ந்து நிறைய போட்டோக்களும் எடுத்துக் கொண்டார். அவர் நடிகையாகிவிட்டதும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ‘தம் மாரோ தம்’ படத்தின் டைட்டில் பாட்டிற்கு தீபிகா உதட்டை அசைக்க மறுத்து விட்டார். காரணம், ‘அந்தப் பாடலில் வரும் சில தவறான வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறிவிட்டார். தீபிகாவின் கட்டுக்கோப்பான உடல்வாகை பார்ப்பவர்கள் அவர் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதாக கருதுவார்கள். ஆனால் அவர் உணவுக்கட்டுப்பாடு எதையும் மேற்கொள்ளாமல், இஷ்டத்துக்கும் சாப்பிடுவார். ஆனால் நன்றாக உடற்பயிற்சியும் மேற்கொள்வார்.

ரித்திக் ரோஷன்
(ஜோதிடரின் தவறான கணிப்பால் நடிகரானவர்)


இவருடைய முதல் படம் ‘கஹோ நா ப்யார் ஹை’. அதில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். அந்த படம் 102 விருதுகளை பெற்று, லிம்கா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டிலும் இடம் பிடித்தது. ரித்திக் ரோஷன் 6 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். பாலிவுட்டில் இவருடைய நடனத்திற்கு தனி மவுசு உண்டு. தான் சிறந்த டான்சராக இரண்டு பேர் காரணம் என்பார். ‘சின்ன வயதில் எனக்கு முதுகு தண்டுவட பிரச்சினை இருந்தது. தம்பி நீ டான்ஸ் ஆடவே கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். போதாதற்கு என் வீட்டிற்கு வந்த ஜோசியக்காரர் தம்பி நீ டான்ஸ் ஆடவே முடியாது. அந்த ஆசையை விட்டு விடு என்றார். உண்மையில் என்னை சிறந்த டான்சர் ஆக்கியவர்கள் அந்த இரண்டு பேரும் தான். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல நீ நடிகனாகவே முடியாது. அந்த ஆசையை விட்டு விட்டு வேறு பொழப்பை பாரு என்றும் சொன்னார் அந்த ஜோசியக்காரர். எனக்கு சிறுவயதில் கொஞ்சம் திக்குவாய் பிரச்சினையும் இருந்தது. அதனால் ஸ்பீச் தெரபி பயிற்சி பெற்றேன்’ என்கிறார். அதன் தாக்கமாக தற்போது பேச்சுப் பயிற்சிக்கான மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘பேச்சு சரியாக வராத குழந்தைகள் மனம் தளர்ந்து விடக் கூடாது. அதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு’ என்கிறார்.

கேத்ரீனா கைப்
(தீவுகளில் தன்னந்தனியாக சுற்றித்திரிபவர்)


சிறு வயதில் அம்மா, அப்பாவின் விவாகரத்து கேத்ரீனாவை மிகவும் பாதித்தது. அம்மா தன்னந்தனியாக உழைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றிய விதம் இவரை வருத்தியது. கேத்ரீனாவுடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள். ஆண்துணையின்றி தன்னந்தனியாக தாயார் கஷ்டப்பட்டு தங்களை ஆளாக்கிய விதம் கேத்ரீனாவுக்குள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. ‘தான் நிறைய சம்பாதித்து குடும்பத்தை வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று விரும்பினார். சம்பாதிப்பதற்காக மாடலிங் செய்ய தொடங்கினார். அதேவேளையில் என்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டு அதற்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

கேத்ரீனாவுக்கு மாலத்தீவுகள் மிகவும் பிடிக்கும். அங்குள்ள கடற்கரையோரம் தன்னந்தனியாக சுற்றித்திரிவார். அது எனக்கு சொர்க்கத்திற்கு இணையானது என்கிறார்.

Next Story