காவிரி பிரச்சினையில் “சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் ரஜினி-கமலுக்கு இல்லை” -கன்னட நடிகர் அனந்த்நாக்


காவிரி பிரச்சினையில் “சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் ரஜினி-கமலுக்கு இல்லை” -கன்னட நடிகர் அனந்த்நாக்
x
தினத்தந்தி 11 April 2018 10:43 PM GMT (Updated: 11 April 2018 10:43 PM GMT)

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்கு காவிரி பிரச்சினையை பயன்படுத்துகின்றனர் என்று கன்னட நடிகர் அனந்த்நாக் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் நடிகர்கள் நடத்திய கண்டன அமைதி போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தை நடிகர் சிம்பு புறக்கணித்து காவிரி விவகாரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக் கூறியதாவது:-

“ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்கு காவிரி பிரச்சினையை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் இங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் இப்போதைக்கு தேர்தல் இல்லை. எனவே கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இருவரும் காவிரி பிரச்சனையை கிளப்பி போராடி இருக்கலாம்.

ரஜினியும், கமலும் அவர்களுடைய அரசியலுக்கு காவிரி பிரச்சினையை பகடை காயாக்கி குளிர்காய பார்க்கின்றனர். இந்த பிரச்சினையில் இளம் நடிகர் சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் மூத்த நடிகர்களான ரஜினி, கமலுக்கு இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல்வாதிகள் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமில்லாமல் பெரிதுபடுத்துகின்றனர்.

காவிரி, கர்நாடகத்தில் உற்பத்தியானாலும் தமிழகத்துக்கே அதிக நீர் கிடைக்கிறது. கன்னடர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். இதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story