சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ராதா மோகன் டைரக்‌ஷனில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி,’ எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம்? (பி.கணபதி ராஜா, சென்னை–27)

‘காற்றின் மொழி,’ ஒரு குடும்ப கதை. ஜோதிகாவை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைந்து இருக்கிறது!

***

திருமணம் ஆன பிறகும் சமந்தா, இன்னொரு நாயகனுடன் முத்த காட்சியில் நடித்து இருப்பதாக பேசப்படுகிறதே...அது உண்மையா? (ஆர்.வேல்முருகன், பெரியநாயக்கன் பாளையம்)

உண்மைதான். அந்த முத்த காட்சி ஒரு தெலுங்கு படத்துக்காக படமாக்கப்பட்டு இருக்கிறது. சமந்தாவுடன் நடித்த நாயகன், ராம்சரண். இவருக்கு அவர் கன்னத்தில்தான் முத்தம் கொடுத்தாராம். அது, ‘கிராபிக்ஸ்’ உதவியுடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தது போல் மாற்றப்பட்டு இருக்கிறதாம். சமந்தா சொன்ன விளக்கம், இது!

***

குருவியாரே, 1970–ல் இருந்து 1980–வரை தமிழ் படங்களில் திரையிசை எந்த அளவில் இருந்தது? (உமாதேவி, அருப்புக்கோட்டை)

1970–ல் இருந்து 1980–வரை தமிழ் திரைப்பட உலகில், இந்தி படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால் ஆகிய இந்தி பட இசையமைப்பாளர்களின் கட்டுப்பாட்டில்தான் தமிழ் திரையிசை இருந்தது. இந்தி பாடல்களையே பெரும்பாலானவர்களின் வாய் முணுமுணுத்தது. அந்த மோகத்தை முறியடித்த பெருமை இளையராஜாவையே சேரும்!

***

தமிழ் பட கதாநாயகிகளில் அதிக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர் யார்? அவர் போகாத நாடு எது? (எஸ்.சுரேந்திரன், கோவை)

தமிழ் பட நாயகிகளில் அதிக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர், திரிஷா. அவர் போகாத நாடு, பூமியில் எதுவும் இல்லை. நிலாவையோ அல்லது செவ்வாய்கிரகத்தையோ சுற்றிப்பார்க்க வழியிருந்தால், அங்கும் பறந்திருப்பார்!

***

குருவியாரே, நயன்தாரா சொந்த படம் தயாரிப்பது மேலும் பணம் சம்பாதிக்கவா அல்லது செலவு கணக்கு காட்டவா? (ஜி.தமிழ்செல்வன், தஞ்சை)

காதலர் விக்னேஷ் சிவனை கதாநாயகன் ஆக்குவதற்காக...! இப்படி ஒரு பரந்த மனசு யாருக்கு வரும்? நயன்தாராவை தவிர..! (கே.பாஸ்கரன், தாரமங்கலம்)

***

தனுஷ், சிம்பு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால், இரண்டு பேருக்கும் என்ன வேடம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்? (கே.செல்வகுமார், பெரியகுளம்)

ஒருவரை காதலில் வெற்றி பெற்றவர் போலவும், மற்றொருவரை காதலில் தோல்வி அடைந்தவர் போலவும் காட்டினால், பொருத்தமாக இருக்கும்!

***

டாக்டர் ராஜசேகர்–ஜீவிதா தம்பதிக்கு எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள்? (ஜி.பரணிதரன், மேட்டூர்)

ராஜசேகர்–ஜீவிதா தம்பதிக்கு மகன்கள் இல்லை. 2 மகள்கள் மட்டும் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் தற்போது முன்னணியில் உள்ள கதாநாயகிகள் எத்தனை பேர்? (எம்.ரங்கநாதன், பேராவூரணி)

தமிழ் பட உலகில் 12 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இவர்களில் முன்னணி கதாநாயகியாக தேறி இருப்பவர்கள்: நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 5 பேரும்தான். மற்றவர்கள் ஒரு படம் அல்லது 2 படங்களுடன் காணாமல் போய் விட்டதாக தகவல்!

***

மற்ற கதாநாயகர்களிடம் இருந்து ராகவா லாரன்ஸ் எப்படி மாறுபடுகிறார்? (டி.ஜேக்கப், முசிறி)

ராகவா லாரன்ஸ் ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆக இருந்து கதாநாயகன் ஆனவர். இவர், சென்னை அசோக்நகரில் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இல்லம் நடத்தி வருகிறார். ஆவடியில், ராகவேந்திர சாமிகளுக்கும், அம்மாவுக்கும் கோவில் கட்டியிருக்கிறார்!

***

குருவியாரே, ‘காலா’ படத்தில் ஈஸ்வரிராவுக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? (ஏ.ரியாஸ்கான், ஆற்காடு)

‘காலா’ படத்தில், ரஜினிகாந்த் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்து இருக்கிறார்!

***

ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தில், வில்லனாக நடித்து இருப்பவர் யார்? (கா.விஜயகுமார், பண்ருட்டி)

வின்சென்ட் அசோகன்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். படங்களில் முதன் முதலாக அதிக வசூல் செய்த படம் எது? (எம்.சூர்யபிரகாஷ், சென்னை–20)

‘நாடோடி மன்னன்!’

***

மறைந்த டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் டைரக்‌ஷனில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜா,’ ‘நீதி’ ஆகிய படங்களின் மூலம் எது? (சி.செந்தில், கடலூர்)

‘ராஜா’ படத்தின் மூலம், ‘ஜானி மேரா நாம்’ என்ற இந்தி படம். ‘நீதி’ படத்தின் மூலம், ‘துஷ்மன்’ என்ற இந்தி படம்!

***

குருவியாரே, ஸ்ரீகாந்த் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? புது படங்கள் எதையும் ஒப்புக்கொண்டிருக்கிறாரா? (மா.குருமூர்த்தி, சேலம்)

ஸ்ரீகாந்த் இதுவரை 30 படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது, 3 புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்!

***

ஜீவா தற்போது எத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்? அவரை இயக்கும் டைரக்டர்கள் யார்–யார்? (ப.காளிதாசன், வேட்டனூர்)

ஜீவா தற்போது, ‘கொரில்லா’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர், ராஜுமுருகன் டைரக்‌ஷனில், ‘ஜிப்ஸி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவரின் பெயர் என்ன? தற்போது அவர் எங்கிருக்கிறார்? (இசக்கி பாண்டியன், சாலிகிராமம்)

‘இதயக்கனி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் பெயர், ராதாசலுஜா! பிரபல இந்தி நடிகையான இவர், மும்பையில் வசித்து வருகிறார்!

***

பார்த்திபன்–சீதா தம்பதியின் 2 மகள்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? (ஜெ.கிறிஸ்டோபர், புதுச்சேரி)

மூத்த மகள் அபிநயா படித்து முடித்து விட்டு, அவருடைய அம்மா சீதாவுடன் வசித்து வருகிறார். இளைய மகள் கீர்த்தனா, டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக இருக்கிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

***

‘‘சக்கரகட்டி ராஜாத்தி...உன் மனச வச்சுக்கோ காப்பாத்தி’’ என்ற எம்.ஜி.ஆர். பாடல் இடம் பெற்ற படம் எது? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் இடம் பெற்ற பாடல், அது!

***

குருவியாரே, ‘அறம்’ படத்தில், மாவட்ட கலெக்டர் வேடத்தில் மிக திறமையாக நடித்ததற்காக தேசிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் நயன்தாராவுக்கு உண்டா? (கி.பிரசன்னகுமார், மதுராந்தகம்)

தேசிய விருதை விட, உங்களை போன்ற ரசிகர்களின் பாராட்டையே பெரிய விருதாக கருதுகிறாராம், நயன்தாரா! அதனால் வருத்தம் எதுவும் இல்லை என்கிறார், அவர்!

***

சமந்தா தனது சிகையலங்காரத்தை (கிராப் தலை) மாற்றியிருக்கிறாரே... ஏன்? (என்.உதயா, காஞ்சீபுரம்)

ஒரே மாதிரியாக இருந்தால், அவருடைய கணவர் நாக சைதன்யாவுக்கு பிடிக்காதாம்!

***