பெண்களுக்கு எதிரான “பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி


பெண்களுக்கு எதிரான “பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி
x
தினத்தந்தி 28 April 2018 11:45 PM GMT (Updated: 28 April 2018 7:24 PM GMT)

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

சென்னை,

1960-ல் இருந்து 70 வரை தமிழ் பட உலகில் பிரபலமாக இருந்தவர், நடிகை சாவித்ரி. கதாநாயகியாக, தயாரிப்பாளராக, டைரக்டராக புகழ் பெற்று விளங்கினார். இவருடைய வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் படமாகி இருக்கிறது.

அதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகையாளராக சமந்தா நடித்து இருக்கிறார். நாக் அஸ்வின் டைரக்டு செய்து இருக்கிறார். பிரியங்காதத் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

பேட்டி

‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்திருப்பது பற்றி கீர்த்தி சுரேஷ், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“இந்த படத்துக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் என்னை அணுகியபோது, சாவித்ரி வேடத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. நம்மால் நடிக்க முடியுமா? என்று சந்தேகப்பட்டேன். டைரக்டரும், தயாரிப்பாளரும் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். அதன்பிறகுதான் நடிக்க சம்மதித்தேன். சாவித்ரியாக நடிப்பதற்காக அவர் நடித்த படங்களை பார்த்தேன். அவருடைய மகள் விஜயசாமுண்டீஸ்வரியை சந்தித்து, நிறைய தகவல்களை சேகரித்தேன். அவருடைய பழக்க வழக்கங்கள், நடை- உடை-பாவனைகளை தெரிந்து கொண்டேன்.

4 மணி நேரம் ‘மேக்கப்’

சாவித்ரியின் குழந்தைப்பருவம் முதல் புகழ் பெற்ற நடிகையாக, தயாரிப்பாளராக, குடிப்பழக்கம் உள்ளவராக, வறுமையில் வாடுபவராக, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தது வரை, கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. சின்ன வயதில் அவர் ஒல்லியாக இருந்திருக்கிறார். பிற்காலத்தில் குண்டாகி இருக்கிறார். இதற்காக நான் குண்டாகி விட்டதாக சில தகவல்கள் பரவின. அது உண்மை அல்ல. குண்டு உடம்புக்காக, ‘பேட்’ வைத்து நடித்தேன். படத்துக்காக, நான் ஒல்லியானதுதான் நிஜம்.

தினமும் ‘மேக்கப்’ போடுவதற்கு 4 மணி நேரம் ஆனது. அதன் பிறகு 7 அல்லது 8 மணி நேரம் நடித்தேன். படத்தில், 120 உடைகள் அணிந்திருக்கிறேன். ‘மேக்கப்’ போட்டால், சாப்பிட முடியாது. திரவ உணவைத்தான் சாப்பிட முடியும். இந்த படத்தில் நடித்து முடிப்பதற்கு ஒரு வருடம் ஆனது. அந்த ஒரு வருடமாக நிறைய சிரமப்பட்டேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

ஜமுனாவின் கருத்து

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சாவித்ரி வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் அல்ல என்று பழைய நடிகை ஜமுனா கூறியிருந்தாரே...அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். மரியாதைக்காக அவரை நான் சந்தித்து பேச முயற்சி செய்தேன். முடியவில்லை. ‘நடிகையர் திலகம்’ படத்தில், நான் 80 சதவீதம் சாவித்ரியாக மாறியிருப்பதாகவும், 20 சதவீதம்தான் கீர்த்தி சுரேஷ் தெரிகிறார் என்றும் படக்குழுவினர் என்னை பாராட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலியல் குற்றங்கள்

கேள்வி:- சமீபகாலமாக சிறுமி கற்பழிப்பு, நடிகையை கடத்தி பலவந்தம், படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்பு என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகிறதே...இதுபற்றி ஒரு பெண்ணாக-பிரபல நடிகையாக உங்கள் கருத்து என்ன?

பதில்:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை அவர்கள் குற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.”

மேற்கண்டவாறு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் அளித்தார். 

Next Story