“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -சமந்தா, கீர்த்தி சுரேஷ்


“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -சமந்தா, கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 2 May 2018 11:00 PM GMT (Updated: 2 May 2018 9:12 PM GMT)

சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை என சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கூறினர்.


சாவித்திரியின் வாழ்க்கை, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-

“பெண் என்பவள் பலம் பொருந்தியவள் என்பதற்கும், நினைத்ததை சாதித்து காட்டுவாள் என்பதற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா? என்று தயங்கினேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் உற்சாகம் அளித்ததால் ஒப்புக்கொண்டேன்.

சாவித்திரி சம்பந்தமான புத்தகங்களை படித்தும், அவரது மகள் சாமுண்டீஸ்வரியிடம் விவரங்கள் சேகரித்தும் பல விஷயங்களை தெரிந்துகொண்டு இந்த படத்தில் நடித்தேன். சாவித்திரியாக நடித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்துகொள்ள பதற்றமாக இருக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை சமந்தா பேசும்போது, “சாவித்திரி பட உலகில் இமாலய சாதனைகள் நிகழ்த்தியவர். அவர் இருந்த சினிமாவில் நானும் இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது வாழ்க்கை கதை படத்தில் நடித்தது பெருமை” என்றார். நடிகை ஜூனியர் என்.டி.ஆர்., துல்கர் சல்மான் ஆகியோரும் பேசினார்கள்.

Next Story