கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம்


கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 May 2018 11:15 PM GMT (Updated: 11 May 2018 8:15 PM GMT)

அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிடுவதை திடீரென்று நிறுத்தி விட்டனர்.

மம்முட்டி, நயன்தாரா நடித்து மலையாளத்தில் 2015-ல் வெளிவந்து ரூ.25 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை தமிழில் அரவிந்தசாமி-அமலாபாலை ஜோடியாக வைத்து எடுத்துள்ளனர். இந்த படம் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்குக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் நிதி நெருக்கடியால் தாமதமானதாக கூறப்பட்டது.

அரவிந்தசாமி சம்பளத்தை விட்டு கொடுத்து படம் வெளிவர உதவியதாக தகவல் கசிந்தது. திரைப்படங்கள் வெளியீடுகளை ஒழுங்குபடுத்தியுள்ள பட அதிபர்கள் சங்கம் விஷாலின் இரும்புத்திரை, கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம், இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய 4 படங்களை நேற்று திரைக்கு கொண்டுவர அனுமதி அளித்து இருந்தது. அரவிந்தசாமியும் அமலாபாலும் சில நாட்களாக படத்தை விளம்பரப்படுத்துவதில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைசி நேரத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிடுவதை தயாரிப்பாளர் தரப்பில் திடீரென்று நிறுத்தி விட்டனர். இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கியதால் தள்ளிவைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தை நிறுத்தியதற்கு அரவிந்தசாமி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, “டிக்கெட் முன்பதிவு நடந்த நிலையில் படத்தை தள்ளிவைத்தது வருத்தம் அளிக்கிறது. இதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. படம் தயாராக தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருந்துள்ளேன். இனிமேல் படம் வெளியாகும் தேதியை பதிவிட மாட்டேன்” என்று கூறியுள்ளார். 

Next Story