படத்தின் தலைப்பை மாற்றும் அளவுக்கு பயப்படுவது ஏன்? விஷால் கேள்வி


படத்தின் தலைப்பை மாற்றும் அளவுக்கு பயப்படுவது ஏன்? விஷால் கேள்வி
x
தினத்தந்தி 22 May 2018 11:44 PM GMT (Updated: 22 May 2018 11:44 PM GMT)

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படம் தயாராகி இருந்தது. தணிக்கை குழு எதிர்ப்பால் படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றி உள்ளனர். படத்தின் தலைப்பை மாற்றும் அளவுக்கு பயப்படுவது ஏன் விஷால் கேள்விஎழுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படம் தயாராகி இருந்தது. தணிக்கை குழு எதிர்ப்பால் படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றி உள்ளனர். ரமேஷ் செல்வன் டைரக்டு செய்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது.

“எல்லா படங்களும் ஜெயிக்க வேண்டும். அதற்காகவே அனைத்து பட விழாக்களிலும் கலந்துகொள்கிறேன். சுவாதி கொலை வழக்கு என்று இருந்த படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என மாற்றி உள்ளனர். தலைப்பை மாற்ற வேண்டிய அளவுக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை.

உண்மையான சம்பவத்தை இயக்குனரோ, தயாரிப்பாளரோ சமுதாயத்துக்கு சொல்லும்போது எதற்காக தடைகள் வருகின்றன என்று தெரியவில்லை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை படமும் எதிர்ப்பினால் இதுவரை திரைக்கு வரவில்லை. நடந்த சம்பவத்தை இயக்குனர் படமாக்கும்போது எதிர்ப்பது முறையல்ல.

உண்மை சம்பவ படங்களை பார்க்க ரசிகர்களும் ஆர்வப்படுகின்றனர். இதுபோன்ற படங்களுக்கு தடை ஏற்பட்டாலும் அதை உடைத்து வெளியே வரும்போது வெற்றிபெறுகின்றன. எனது படத்துக்கும் டிஜிட்டல் இந்தியா, ஆதார்டு கார்டு பிரச்சினைகள் இருந்ததாக எதிர்த்தனர். 2 காட்சிகளையும் நிறுத்தினார்கள். அதையும் மீறி மக்கள் வரவேற்றுள்ளனர். அதுபோல் சுவாதி கொலை வழக்கு படத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.” இவ்வாறு விஷால் பேசினார்.

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடலாசிரியர் சினேகன் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Next Story