தூத்துக்குடி துப்பாக்கி சூடு: டைரக்டர்கள் சங்கம் கண்டனம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு: டைரக்டர்கள் சங்கம் கண்டனம்
x
தினத்தந்தி 24 May 2018 6:39 PM GMT (Updated: 24 May 2018 6:39 PM GMT)

துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சென்னை, 

தமிழ்நாடு திரைப்பட டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

 இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story