ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: இம்சை அரசனில் நடிக்க வடிவேலு சம்மதம்?


ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: இம்சை அரசனில் நடிக்க வடிவேலு சம்மதம்?
x
தினத்தந்தி 26 Jun 2018 11:15 PM GMT (Updated: 26 Jun 2018 8:32 PM GMT)

‌ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. சிம்பு தேவன் இயக்கி இருந்தார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24–ம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க ‌ஷங்கர் முடிவு செய்து வடிவேலுவையே கதாநாயகனாகவும் ஒப்பந்தம் செய்தார்.

சென்னையில் ரூ.7 கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். 10 நாட்கள் இதில் கலந்து கொண்டு வடிவேலு நடித்தார். அதன்பிறகு இயக்குனர் சிம்பு தேவனுக்கும் வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று வடிவேலு விலகி விட்டார்.

அவரை மீண்டும் நடிக்க வைக்க நடந்த சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‌ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டபோதும் படத்தில் நடிக்க முடியாது என்றே பதில் அனுப்பினார்.

இதனால் வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு வாங்கித்தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடரவும் முயற்சிகள் நடந்தன. இதனால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

 இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பட வேலைகள் மீண்டும் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனை வைத்து ‌ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story