திலீப் விவகாரம்: மலையாள நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது


திலீப் விவகாரம்: மலையாள நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது
x
தினத்தந்தி 29 Jun 2018 10:00 PM GMT (Updated: 29 Jun 2018 6:38 PM GMT)

மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதால் அவர் நீக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப்பை சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து முன்னணி நடிகைகளான ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகையும் விலகினார். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் தலைவராக இருக்கும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு அமைப்பும், கேரள மகளிர் ஆணையமும் திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்தன.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு வலுத்ததால் மோகன்லாலுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் சேர மாட்டேன் என்று அறிவித்தார். இதுகுறித்து அம்மா அமைப்புக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ‘‘நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க முடிவு செய்ததை அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் சங்கத்தில் இருந்து வெளியேற்றியதை சங்கம் ரத்து செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கி இருக்கிறேன். நான் நிரபராதி என்று விடுதலையாகும்வரை நடிகர் சங்கத்தில் சேர விரும்பவில்லை’’ என்று கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு, ‘‘நடிகர் சங்கத்தின் செயற்குழு விரைவில் கூட்டப்படும் என்றும், அதில் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும்’’ என்றும் கூறினார். 

Next Story