சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, சூர்யாவின் 37–வது படத்தின் பெயர் என்ன, அந்த படத்தை இயக்குபவர் யார், அதில் சூர்யா எத்தனை வேடங்களில் நடிக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

சூர்யாவின் 37–வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தை இயக்குபவர், கே.வி.ஆனந்த். அந்த படத்தில் சூர்யா 4 வேடங்களில் நடிக்கிறார்!


***

‘குயின்’ (இந்தி) படத்தை தமிழில் எடுக்கிறார்களே...அந்த படத்துக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள்? இந்தி படத்தில் கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் தமிழில் நடிப்பவர் யார்? (கே.ஞானசேகர், தூத்துக்குடி)

தமிழில் உருவாகும் ‘குயின்’ படத்துக்கு, ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் தமிழில், காஜல் அகர்வால் நடிக்கிறார்!

***

‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த ஹூமாகுரோஷியிடம் உள்ள (மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத) கூடுதல் அம்சங்கள் என்னென்ன? (இரா.பன்னீர்செல்வம், அன்னதானப்பட்டி)

அவருடைய உயரமும், நிறமும்...!

***

குருவியாரே, விஜய் சேதுபதி இன்னும் உயரத்துக்கு போவாரா? தேசிய விருது உள்பட பல விருதுகளை வாங்குவாரா? (பி.சுரேந்தர், மதுரவாயல்)

அடக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இயல்பான நடிப்பு திறமையும் கொண்டவர், விஜய் சேதுபதி. அதனால் அவர் இன்னும் பெரிய உயரத்துக்கு போவார்...பல விருதுகளை வாங்குவார் என்று கோடம்பாக்கம் ஜோதிடர்கள் கணித்து இருக்கிறார்கள்!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகிய 4 பேரில் விஜய்க்கு பொருத்தமான ஜோடி யார்? (எஸ்.லோகேஷ், வேலூர்)

நயன்தாராவை விட திரிஷாவும், அனுஷ்காவை விட காஜல் அகர்வாலும் விஜய்க்கு பொருத்தமான ஜோடியாக தெரிந்தார்களாம்!

***

‘நடிகையர் திலகம்’ படத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அந்த படத்தின் ரிலீசுக்கு அப்புறம் எவ்வளவு வாங்குகிறார்? (ஏ.நூர்முகமது, ஆற்காடு)

‘நடிகையர் திலகம்’ படத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். அந்த படத்தின் ரிலீசுக்கு அப்புறம் அவர் தனது சம்பளத்தை (ரசிகர்கள் உதவியுடன்) ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்!

***

குருவியாரே, ரீமாசென், சதா ஆகிய இருவரும் என்ன ஆனார்கள், படங்களில் பார்க்க முடியல்லையே...? (வி.ரகுராம், திருச்சி)

ரீமாசென், திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் அவர் நடிப்பதில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். சதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழி பட உலகிலும் வாய்ப்புகள் இல்லை. அதனால் அவர் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற படத்தில் ஜெமினி கணேசுடன் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகி யார்? (கே.சின்னதுரை, பொள்ளாச்சி)

அஞ்சலிதேவி!

***

குருவியாரே, ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களில் முதியோரும் இருக்கிறார்களா? இதுதவிர அவர் செய்து வரும் சமூக நற்பணிகள் என்னென்ன? (எம்.சுதர்சன், கோவை)

ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில், 90 பேர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவற்றவர்கள். மற்றவர்கள் உடல் ஊனமுற்றவர்கள். இது தவிர, படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்கள் 300 பேர்களை (சத்தமே இல்லாமல்) ராகவா லாரன்ஸ் படிக்க வைத்து வருகிறார்.

***

டைரக்டர் விக்ரமன் இதுவரை எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்? எந்த படத்திலாவது அவர் நடித்து இருக்கிறாரா? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

புதுவசந்தம், பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூர்யவம்சம், பிரியமான தோழி, வானத்தைப்போல ஆகிய படங்களை விக்ரமன் இயக்கியிருக்கிறார். அவர் இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. கேமராவுக்கு பின்னால் இருப்பதையே விக்ரமன் விரும்புகிறார்!

***

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த படங்களில் அதிக நாட்கள் ஓடி, அதிக வசூல் செய்த 2 படங்களை கூற முடியுமா? (பி.சண்முகராஜா, மதுராந்தகம்)

‘எங்க வீட்டு பிள்ளை,’ ‘உலகம் சுற்றும் வாலிபன்!’

***

குருவியாரே, விக்ரம் பிரபு நடித்து அடுத்து வெளிவரும் படம் எது? அந்த படத்தின் தயாரிப்பாளர் யார்? (பா.தமீம் அன்சாரி, தூத்துக்குடி-2)

விக்ரம் பிரபு நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘துப்பாக்கி முனை.’ இந்த படத்தின் தயாரிப்பாளர், எஸ்.தாணு!

***

நயன்தாரா தமிழ் படங்களின் படப்பிடிப்புக்காக சென்னை வந்தால், அவர் எங்கே தங்குகிறார்? ஓட்டலிலா, வீட்டிலா? (கே.ஆர். ராஜ்குமார், புதுச்சேரி)

நயன்தாரா, சென்னை எழும்பூரில் பூலோக சொர்க்கம் போன்ற நவீன வசதிகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில், 2 வீடுகளை வாங்கியிருக்கிறார். சமீபகாலமாக, சென்னை வந்தால், அவர் தங்குவது அந்த பூலோக சொர்க்கத்தில்தான்!

***

குருவியாரே, இந்தி நடிகை தீபிகா படுகோனே திருமணத்துக்கு தயாராகி விட்டாராமே...? (டி.ஆர்.இன்பராஜ், ஊட்டி)

வாலிபம் தாண்டினால் திருமணம் செய்து பயன் இல்லை என்ற உண்மையை உணர்ந்தவராம், தீபிகா படுகோனே!

***

ஸ்ரீதிவ்யா, ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவாரா? (கோ.வித்யாசாகர், நங்கநல்லூர்)

இன்னும் கொஞ்ச நாட்கள் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிற அளவுக்கு ஸ்ரீதிவ்யா இறங்கி வந்து விடுவார்!

***

குருவியாரே, சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் ஆகியோரை பற்றி...? (டி.சிற்றரசு, திருநாவலூர்)

அந்த நான்கு பேருமே மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல பாடம்!

***

நித்யா மேனன் மீது எனக்கு காதல். அதை அவரிடம் போய் சொன்னால், என் காதலை ஏற்றுக் கொள்வாரா? (சி.மதனகோபால், தேனி)

காதல் மீதும் கல்யாணம் மீதும் அவருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையாம். அது வந்ததும் சொல்கிறேன் என்கிறார், நித்யா மேனன்!

•••