ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை


ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 5:11 PM GMT)

ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

ரம்யா நம்பீசன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கவின் கதாநாயகனாக வருகிறார். ஷிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் வருகிற 27–ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை எதிர்த்து திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

‘‘நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். 

ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’’

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வருகிற 30–ந் தேதிவரை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

Next Story