சினிமா செய்திகள்

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைதணிக்கை குழு நடவடிக்கை + "||" + Siva Manasula Pushpa film banned

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைதணிக்கை குழு நடவடிக்கை

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைதணிக்கை குழு நடவடிக்கை
சிவா மனசுல புஷ்பா படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தணிக்கை குழு தடை விதித்துள்ளது.
ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘சிவா மனசுல புஷ்பா.’ வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தின் ‘டைட்டில்’ அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, தணிக்கை சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த ‘டைட்டிலாலேயே’ பிரச்சினை உருவாகி இருக்கிறது.

இதுபற்றி நடிகரும், டைரக்டருமான வாராகி கூறியதாவது:–

‘‘கடந்த ஜூலை 16–ந் தேதி, ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்தவர்கள், சில அரசியல் வசனங்கள், கவர்ச்சியான காட்சிகள், சில அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். 

தணிக்கை குழுவில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு படம் பார்த்தால், அவர்களுக்கு எப்படி எங்களின் வலி தெரியும்? என்று தணிக்கை அதிகாரிகளுடன் நான் விவாதத்தில் ஈடுபட்டேன். இவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு டெல்லியில் உள்ள கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

டெல்லியில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சியாக தணிக்கையில் நீக்க சொன்ன வி‌ஷயங்களுடன் படத்தின் ‘டைட்டிலை’யும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவும் சேர்ந்து வந்தது. அதுமட்டுமல்ல... அதிரடி அரசியல் வசனங்களை ‘மியூட்’ பண்ண சொல்லி, அதையே காரணம் காட்டி, ‘‘இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளாமல், டெல்லியில் ‘அப்பீல்’ பண்ணி இருக்கிறோம். படத்தை பொறுத்தவரை நாங்கள் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. நிகழ்கால சம்பவங்களைத்தான் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறோம். அப்படியே இந்த படத்தை பார்த்துவிட்டு, அதில் உள்ள கதாபாத்திரம் நாமாகத்தான் இருக்குமோ என யாருக்காவது தோன்றினால், அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் நாங்கள் யாரையோ குறிப்பிட்டு சொல்கிற மாதிரி தணிக்கை குழு நினைக்கிறது. 

இந்த பிரச்சினையின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. காரணம், இதைவிட மோசமான சில படங்களுக்கும், சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்படும் படங்களுக்கும் எப்படி உடனே சான்றிதழ் கிடைக்கிறது.?

எத்தனையோ பொதுநல வழக்குகளை நான் பார்த்துள்ளேன். இந்த பிரச்சினையையும் முறைப்படி சந்தித்து படத்தை வெளியிடுவேன்.  அதற்காக மறு தணிக்கை குழுவினரிடம் செல்லவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று எங்களுக்கான நியாயத்தை பெற்று அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வரவும் தயங்கமாட்டேன்’’ என்கிறார், வாராகி.