சினிமா செய்திகள்

மேக்னாவுக்கு ராணுவத்தின் பாராட்டு + "||" + To Magna Army's appreciation

மேக்னாவுக்கு ராணுவத்தின் பாராட்டு

மேக்னாவுக்கு ராணுவத்தின் பாராட்டு
இந்தி திரை உலகின் பிரபலமான பெண் டைரக்டர் மேக்னா குல்சார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட ராஸி படத்தை இயக்கியவர்.
ந்தி திரை உலகின் பிரபலமான பெண் டைரக்டர் மேக்னா குல்சார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட ராஸி படத்தை இயக்கியவர். இது சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். முன்பு இவர் இயக்கியிருந்த தல்வார் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப் படங்களை இயக்குவது குறித்தும், சினிமா உலகத்திற்குள் நுழைந்ததற்கான காரணம் பற்றியும் மேக்னா குல்சார் மனம் திறக்கிறார்.

சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்பது உங்கள் லட்சியமாக இருந்ததா?

எனக்கு அப்படி எந்த லட்சியமும் இருந்ததில்லை. கதை, வசனம், கவிதை எழுதும் ஆற்றல் என் அப்பாவிடமிருந்து வந்தது. அவருடைய படைப்புகளை படித்து வளர்ந்தவள் நான். அந்த தாக்கம்தான் என்னை டைரக்டராக்கியிருக்கிறது.

உங்கள் அம்மா ராக்கி சிறந்த நடிகை. அவரது தாக்கம் எதுவும் உங்களிடம் இல்லையா?

அம்மாவின் தாக்கம் இருந்தாலும் எனது ஆர்வத்தை பொறுத்துதான் நான் செய்யும் தொழில் அமையும். நம்மிடம் ஒரு திறமை உருவாக பெரும் முயற்சி தேவை. கற்பனைவளம் சிறுவயதிலேயே எனக்குள் இருந்திருக்கிறது. புதிய படைப்புகளை உருவாக்குவது எனது ஆசையாக இருந்தது.

உங்கள் தந்தை குல்சாருடன் இணைந்து புதிய படங்களை இயக்குவீர்களா?

அது முடியாது. மாறுபட்ட கருத்துகள் எங்களிடையே அதிகம். அவர் அந்தகால சினிமா டைரக்டர். என்னோடு ஒத்துபோவது அவருக்கு இயலாத காரியம். ஆனால் எனது படைப்புகளுக்கு அவர் பக்கபலமாக இருக்கிறார்.

சினிமாவில் பிசியாக இருக்கும் உங்களால் குடும்ப நிர்வாகத்தை எப்படி கவனித்துக்கொள்ள முடிகிறது?

என் கணவரின் உதவி எனக்கு நிறைய கிடைக்கிறது. நான் இல்லாத நேரத்தில் எங்கள் மகனை நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல், தொழிலில் கவனத்தை செலுத்த முடிகிறது.

ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் செல்வீர்களா?

வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். நான் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருடன் படப் பிடிப்பு தளத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கே பல விஷயங்களை நேரில் பார்த்து கற்றிருக்கிறேன். அதெல்லாம் எனக்கு இப்போது உதவுகிறது. என் மகனையும் காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவனை எங்கும் வெளியில் அழைத்துச் செல்ல முடியவில்லை. அவனுக்கு என் மேல் கோபம். படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் மாத விடுமுறையில் மீண்டும் காஷ்மீருக்கு குடும்பத்தோடு சென்றேன். எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்து புத்தாண்டையும் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.

அம்மா ராக்கி உங்களுக்கு எப்படி உதவுகிறார்?

அம்மாவுக்கு என் மகன் மீது பாசம் அதிகம். எப்போதும் அவனோடு சேர்ந்திருக்க விரும்புவார். நான் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும்போது அவர்தான் என் கணவரையும் மகனையும் கவனித்துக்கொள்கிறார். அதனால் நான் இல்லாத குறை என் மகனுக்கு தெரியாது.

உங்கள் தந்தை செல்போன் பயன்படுத்துவ தில்லையாமே?

அவருக்கு நவீன சாதனங்கள் எதுவும் பிடிப்பதில்லை. அதனால் எப்போதும் செல்போனை கையில் வைத்திருப்பதில்லை. கூடுமானவரை மனிதர்களை நேருக்கு நேர் பார்த்து பேசவேண்டும் என்று விரும்புவார். வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற எதுவும் அவருக்கு பிடிக்காது.

ராஸி படத்தில் இந்திய ராணுவத்தை காண்பித்திருக்கிறீர்கள். அதற்கான அனுமதி எப்படி கிடைத்தது?

முறையாக ராணுவத்திடம் அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடந்தது. கதை, வசனம் உள்பட அனைத்தும் முதலிலே அவர்களிடம் காண்பிக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் ராணுவ பகுதியில்தான் படமாக்கப்பட்டது. படம் முழுமையடைந்ததும் முதலில் அவர்களுக்குத்தான் திரையிட்டுக்காட்டினோம். என் மாமனார் ராணுவ அதிகாரி. அவருடைய ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதேபோன்ற கதாபாத்திரத்தை கதையில் கொண்டு வந்தேன். என் படத்தைப் பார்த்த ராணுவ அதிகாரிகள் இதைப் போன்ற படங்கள் அடிக்கடி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.