சினிமா செய்திகள்

சினிமா கேள்வி - பதில்! : குருவியார் + "||" + Cinema question and Answer : Kuruviyar

சினிமா கேள்வி - பதில்! : குருவியார்

சினிமா கேள்வி - பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
விஜய் சேதுபதிக்கு பொருத்தமான கதாநாயகி யார்? (ஆர்.ஜான் கென்னடி, தூத்துக்குடி)

இப்போதைக்கு ரம்யா நம்பீசன்!

***

குருவியாரே, கலெக்டராக நடித்த நயன்தாரா, டாக்டர் வேடத்தில் நடித்து இருக்கிறாரா? (சாய் வினய், சென்னை–1)


நயன்தாரா இதுவரை, ‘டாக்டர்’ வேடத்தில் நடிக்கவில்லை. (‘கஜினி’ படத்தில் மருத்துவ கல்லூரி மாணவியாக மட்டும் நடித்து இருந்தார்.) ஏழை-எளியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் டாக்டர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட கால ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் அவர் காத்திருக்கிறார்!

***

குருவியாரே, கவுதம் கார்த்திக் முன்னணி கதாநாயகனாக பிரகாசிக்க முடியவில்லையே, ஏன்? (எல்.மாதேஷ், மேட்டூர்)

அவர் நடித்த ஒரு படம் கூட, பெரிய வெற்றியை பெறவில்லை. அவர் முன்னணி கதாநாயகனாக பிரகாசிக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்!

***

குருவியாரே, நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் திடீர் என்று சந்தித்துக் கொள்கிறார்கள். திடீர் என்று பிரிந்து விடுகிறார்கள்...ஏன் அப்படி? (ஜே.ஜவகர், புதுச்சேரி)

ஜெய்-அஞ்சலி இருவரும், ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற கொள்கையில் உடன்பாடு கொண்டவர்களாம்!

***

குருவியாரே, விஜய், விஷால் ஆகிய இருவரும் அரசியலுக்கு வர தகுந்த நேரம் பார்த்து தயாராக இருக்கிறார்கள் என்று பேச்சு அடிபடுகிறதே...இவர்களை தொடர்ந்து கார்த்தியும் அரசியலுக்கு வருவார் என்கிறார்களே...? (எம்.ஜெயராமன், விருத்தாசலம்)

விஜய், விஷால் ஆகிய இருவரும் அரசியலுக்கு வரப்போவது, உறுதி. மற்ற கதாநாயகர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து முடிவு செய்வார்களாம்!

***

பழைய கதாநாயகிகள் எல்லோருமே ‘அம்மா’ வேடத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே...என்ன காரணம்? (ரவிபிரகாஷ், ஊட்டி)

வீட்டில் சும்மா இருப்பதை விட, வேலை செய்வது மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கிறதாம். ஒரு பழைய கதாநாயகி சொன்ன பதில், இது!

***

குருவியாரே, அமலாபாலை விவாகரத்து செய்த டைரக்டர் விஜய், இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

டைரக்டர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காக மணப்பெண் வேட்டை தீவிரமாக நடக்கிறது!

***

நடிகை, தயாரிப்பாளர், டைரக்டர் ஆகிய மூன்று பொறுப்புகளிலும் திறமை காட்டிய ஜெயசித்ரா, இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (பி.ஆனந்த், வேலூர்)

ஜெயசித்ரா இதுவரை 100 படங்களை தாண்டி நடித்து இருக்கிறார்!

***

திரையுலகை முழுமையாக நம்பாமல் சில டைரக்டர்கள் வேறு ‘சைடு பிசினஸ்’சில் ஈடுபடுகிறார்களாமே...அப்படி வேறு தொழில் செய்து வரும் சமீபகால டைரக்டர் யார்? (எஸ்.துரைப்பாண்டி, கோவில்பட்டி)

டைரக்டர் திருமலை! இவர், மீஞ்சூரில் கோழிப்பண்ணை நடத்தி வரு கிறார்!

***

நடிகை தேவயானி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? (எஸ்.ராணி, சென்னை-13)

அவருடைய தந்தை ஒரு மாநிலம்...தாயார் வேறு மாநிலம். தேவயானியை பொருத்தவரை, தமிழ்நாடுதான் அவருடைய சொந்த மாநிலம்!

***

குருவியாரே, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் என்ன பிரச்சினை? (எம்.லோகநாதன், திருவண்ணாமலை)

‘கோல மாவு’ என்பது, போதை மாவை குறிக்கிறதாம். பிரச்சினையே அதுதான்!

***

மறைந்த நடிகர்-பட அதிபர் கே.பாலாஜி தயாரிப்பில், அதிக படங்களில் நடித்த கதாநாயகன் யார்? (சு.ராம்குமார், திருவிடை மருதூர்)

கே.பாலாஜி தயாரிப்பில், அதிக படங்களில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

‘தமிழ் படம்-2’ வெற்றி படமா, தோல்வி படமா? (சி.கஸ்தூரி, மதுராந்தகம்)

நிச்சயமாக தோல்வி படம் அல்ல. படத்தை வாங்கி திரையிட்டவர்களின் கையை கடிக்காததால், அது வெற்றி படமே!

***

குருவியாரே, சதா நடித்துள்ள ‘டார்ச் லைட்’ படத்துக்கு தணிக்கை குழு அனுமதி கொடுக்க தயங்கியது ஏன்? (கே.பொன்ராஜ், மும்பை)

டார்ச் லைட், நெடுஞ்சாலைகளில் நின்று கொண்டு விபசாரத்துக்கு அழைக்கும் விலை மாதுகளை பற்றிய படம். விலை மாதுவாக சதா நடித்து இருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள விபசாரம் தொடர்பான காட்சிகளும், வசனங்களும் ஆபாசமாக இருப்பதாக கூறி, தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். தயாரிப்பு-தணிக்கை குழு இடையே விவாதம் நடைபெற்றபின், ஒருவழியாக ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்!

***

பிரபு சாலமன் டைரக்‌ஷனில் உருவாகும் ‘கும்கி-2’ படத்தில் கதாநாயகன்-கதாநாயகி யார்? (எஸ்.அறிவழகன், சேலம்)

‘கும்கி-2’ படத்தில், கதாநாயகன்-கதாநாயகி இருவருமே புதுமுகங்கள்.

***

குருவியாரே, ஓவியா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? அவருடைய தாய்மொழி எது? தமிழில் அவர் எந்த படத்தின் மூலம் பிரபலமானார்? (ஆர்.குண சேகரன், சேத்துமடை)

ஓவியா, கேரளாவை சேர்ந்தவர். அவருடைய தாய்மொழி, மலையாளம். அவர் அறிமுகமான ‘களவாணி’ படமே வெற்றிகரமாக ஓடி, ஓவியாவை பிரபலமாக்கி விட்டது!

***

35 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்கா அழகாக இருக்கிறாரே...எப்படி? (கே.சார்லஸ், கடலூர்)

‘யோகா’வின் உபயம் அது! அனுஷ்கா, ஒரு யோகா மாஸ்டர்!

***

குருவியாரே, ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்தவர் யார்? இதற்கு முன்பு அவர் தமிழ் படத்தில் நடித்து இருக்கிறாரா? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘காலா’ படத்தில் வில்லனாக நடித்தவர், நானா படேகர். இவர், இந்தி பட உலகின் பிரபல நடிகர். இதற்கு முன்பு அவர், பாரதிராஜா டைரக்‌ஷனில், ‘பொம்மலாட்டம்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்!

***

நடிகைகள் பிரமிளா, அபிராமி இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? இருவரும் படங்களில் நடிப்பதில்லையா? (பி.சசிகலா, பி.கொமாரபாளையம்)

பிரமிளா, அபிராமி ஆகிய இருவரும் வெளிநாடுகளில் குடியேறி விட்டார்கள். இருவருமே பட உலகை விட்டு விலகி விட்டார்கள்!

***