சினிமா செய்திகள்

ஜெயலலிதாவுக்கு குருவாக திகழ்ந்த சோ + "||" + Cho Ramasamy is Jalalaitha's Guru

ஜெயலலிதாவுக்கு குருவாக திகழ்ந்த சோ

ஜெயலலிதாவுக்கு குருவாக திகழ்ந்த சோ
சோ அவர்களை, தங்கள் கல்லூரியில் நடைபெறும் விழா விற்கு அழைத்த கல்லூரி நிர்வாகம், பின்னர் வேண்டாம் என்று கூறியதைப் பற்றி கடந்த வாரம் சொன்னேன் அல்லவா.
அப்படி அந்த கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டதற்கு, ஆளும் கட்சியினரின் அச்சுறுத்தல் தான் காரணம் என்று சோ சாருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு பயந்து, பின்வாங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்க நினைத்த சோ, ஒரு சேலையை வாங்கி கல்லூரி நிர்வாக விலாசத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.


நாட்டையும் நாட்டு மக்களையும் திருத்துவதற்கு சோ சார் எவ்வளவோ பாடுபட்டார். தனது பத்திரிகையில் ஆளும் கட்சியினரைத் தாக்கி எவ்வளவோ கட்டுரைகள் எழுதினார். எமர்ஜென்ஸி நேரத்தில் இந்திரா காந்தியையும், அவர் செய்த செயல்களையும், கொடுமைகளையும் கடுமையாகத் தாக்கினார். அவரைவிட யாரும் அந்த நேரத்தில் இந்திராகாந்தியைக் கடுமையாகத் தாக்கவில்லை. எதற்கும் பயப்படாமல் தனது பத்திரிகையில் எழுதினார்.

அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட அடுத்த நாளில், கலைஞரை அவரது வீட்டில் சந்தித்தார். கொள்கை கோட்பாடுகளில் சோவும், கலைஞரும் வேறுபட்டாலும், கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் கலைஞரோடு நல்ல நட்புறவு வைத்திருந்தார்.

விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்தார். அதற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது. நிறைய மிரட்டல்கள் அவருக்கு வந்தன. அரசு தரப்பில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றார்கள். அவர் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அந்த மனத்துணிவை பாராட்டியே தீரவேண்டும்.

1984-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த சமயம் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காதவர்கள், ‘எம்.ஜி.ஆர். இனி வரமாட்டார், அவர் உயிர் பிழைப்பது கடினம்’ என்று பலவிதமாகப் பேசினார்கள். அதுபோன்ற கருத்துகளை சிலர் பத்திரிகைகளில் கூட எழுதினார்கள்.

அந்த நேரத்தில் தனது பத்திரிகையில் ‘எம்.ஜி.ஆர். நலமுடன் வருவார்’ என்று ஆணித்தரமாக எழுதியிருந்தார் சோ. அதுவும் கட்டம் போட்டு முக்கியச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே எம்.ஜி.ஆர். நலமுடன் சென்னை திரும்பினார். அதன்பிறகு ஒருநாள் நான் சோ சாரை சந்திக்கும்போது, ‘எப்படி சார் அவ்வளவு உறுதியாக எம்.ஜி.ஆர். நலமுடன் வருவார் என்று எழுதினீர்கள். ஜோதிடக் கணிப்பா அல்லது மருத்துவர்கள் யாரும் சொன்னார்களா?’ என்றேன்.

அதற்கு அவர், ‘எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கையும், அவருடைய துணிவும் எனக்குத் தெரியும். அதை வைத்துதான் எழுதினேன்’ என்றார்.

ஒருமுறை வேடிக்கையாக ‘சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்’ என்று பொன்மொழிகளாக எழுதினார். அதைப் படித்த வாசகர்கள், சாணக்கியரின் அறிவைப் பாராட்டிப் பேசினார்கள். பலர் சோ சாரைப் பாராட்டி கடிதங்களும் எழுதினார்கள். நானும் ஒருநாள் அவரைச் சந்தித்த வேளையில் இதுதொடர்பாக அவரைப் பாராட்டினேன்.

அதைக்கேட்ட சோ, ‘என்ன ராஜேஷ்! நீங்களே பாராட்டுகிறீர்கள். அதை சாணக்கியர் எழுதவில்லை, நான்தான் கற்பனையாக சிந்தித்து எழுதினேன்’ என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்சரியம்.‘சார்.. நான் அர்த்த சாஸ்திரம் படித்திருக்கிறேன். சாணக்கியர் எழுதியது போலவே இருந்தது. ஆனால் நீங்கள் எழுதியதை வைத்து, நான் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை’ என்றேன்.

சோ சார்.. அவரது மகளின் திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார்; சென்றிருந்தேன். அவருடைய மனைவியையும் குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் அவருடைய மகனின் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை. நான் கைப்பேசியில் தொடர்பு கொண்டு ‘ஏன் சார் என்னை அழைக்கவில்லை. பத்திரிகையும் வரவில்லை. என்னை மறந்து விட்டீர்களா?’ என்று உரிமையுடன் கேட்டேன்.

அதற்கு அவர் ‘அதிகமாக யாரையும் அழைக்கவில்லை. அதுதான் காரணம். இன்று உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறேன், வந்து விடுங்கள்’ என்றார். அழைப்பிதழை மிகவும் எளிமையாக அடித்திருந்தார்.

நான் அவருடைய மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கலைஞர் திருமணத்திற்கு வந்தார். கலைஞரிடம் என்னை ‘இவர் நடிகர் ராஜேஷ்’ என்று அறிமுகம் செய்து வைத்தார்.

கலைஞர் ‘அப்படியா?’ என்று சிரித்தார். அந்த சிரிப்புக்கு அர்த்தம் ‘ராஜேஷின் குடும்பம் எனக்கு 1944-ம் ஆண்டில் இருந்து தெரியும். ராஜேஷையும் 1971-ம் ஆண்டில் இருந்து தெரியும்’ என்பதுதான்.

1996-ம் ஆண்டு என்பது எனது நினைவு.. ஜெயலலிதா தான் முதலமைச்சர். அப்பொழுது நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் தலைமையில் கலைஞருக்குப் பாராட்டு விழா ஒன்று எடுக்கப்பட்டது. அந்தப் பாராட்டு விழா, கடற்கரை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த நேரம் சோ சார், கலைஞரை அதிகம் ஆதரித்தார். அன்று கடற்கரையில் நடந்த விழாவிற்கு வருகின்றவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் சோ சார் ஈடுபட்டார். போலீஸ்காரர்கள் வைத்திருக்கும் கம்புபோல் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினார்.

இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் சோ சாரைத் தெரியும். அவர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். பேட்டி எடுத்து துக்ளக் இதழில் எழுதியிருக்கிறார். அந்த அளவு நாட்டில் உயர்ந்த இடத்தில் இருந்த சோ அவர்களின் அன்றைய செயல்பாடு, மிகவும் எளிமையாகவும், ஒரு தி.மு.க. தொண்டனைப் போலவும் இருந்தது வியப்புக்குரியது.

ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் பழக்கமுள்ளவர் சோ சார். ஏறக்குறைய ஜெயலலிதா அம்மாவுக்கு, குரு மாதிரி இருந்தார். 1980-களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா அம்மா நிறைய படிப்பவர் என்பதால், துக்ளக் பத்திரிகையில் அவரை எழுதச் சொன்னார் சோ. ஜெயலலிதாவும் ‘எண்ணங்கள் சில’ என்கிற தலைப் பில் தான் படித்ததில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக எழுதினார். நான் அவருடைய கட்டுரைகளை விடாமல் படித்திருக்கிறேன். எல்லாக் கட்டுரைகளும் நன்றாக இருந்தன.

ஜெயலலிதா அம்மாவிற்கும், சோ சாருக்கும் எவ்வளவு தான் நட்பு இருந்தாலும், முரண்பாடுகள் வருவதும் இயற்கை தானே. அதனால்தான் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்து துக்ளக் இதழில் எழுதினார், சோ. ஜெயலலிதாவும், சசிகலாவும் நகைகளுடன் இருந்த புகைப்படத்தை அட்டையில் போட்டிருந்தார். அடுத்த தேர்தலில் கலைஞரை ஆதரிப்பதற்காக, மூப்பனார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்களை சந்தித்து, ஜெயலலிதா அம்மாவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கினார். அந்த தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

இருவருக்குள் என்னதான் முரண்பாடுகள் மோதல்கள் வந்தாலும், கடைசித் தேர்தலை சந்திப்பதற்கு முன்பாக, சோ தம்பதிகளிடம் போய் ஆசி வாங்கிக்கொண்ட பண்பாடு ஜெயலலிதாவிடம் இருந்தது. பொதுவாகவே குரு மறைந்த பிறகு சிஷியர்கள் மறைவது என்பதுதான் இயற்கை. ஆனால் குருவிற்கு முன்பாக சிஷியர்கள் மறைவது என்பது அரிதான ஒன்றாகும். அது சோ மற்றும் ஜெயலலிதா வாழ்க்கையில் நடந்தது. ஜெயலலிதா மறைந்தது 5-12-2016. சோ சார் மறைந்தது 7-12-2016.

சோ சாருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே முரண் சுவையான விஷயம் ஒன்று உண்டு. ‘பெண்களிடம் அதிக அதிகாரம் இருக்கக்கூடாது’ என்பது சோ சாரின் கொள்கை. அதை வெளிப் படையாக பலமுறை சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஜெயலலிதா அம்மாவிற்கு தொடர்ந்து உதவி செய்திருக்கிறார்.

எனக்கும், சோ சாருக்கும் தெரிந்த நண்பர் மை.போ.நாராயணன். அவரிடம் சோ சார் உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும்பொழுது நான் பார்க்கவேண்டும் என்று கேட்டேன். ‘என்னுடைய விருப்பத்தை சோ சாரிடம் கூறுங்கள்’ என்றேன்.

‘அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை’ என்று மை.போ.நாராயணன் கூறினார்.

பிறகு அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட சோ சார், அதிக நாட்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்பொழுதும் கேட்டேன், பார்க்க முடியவில்லை. ஒருமுறை நான் கோவையில் இருக்கும்பொழுது அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் சோ சாருடன் கைப்பேசியில் தொடர்பு கொண்டேன். என்னுடைய எண்ணைப் பார்த்தவுடன் பேசினார். கடுமையான இருமலால் அவரால் பேச முடியவில்லை. இருந்தாலும் பேச முயன்றார்.

நான்தான் தொடர்ந்து பேச விரும்பாமல், ‘நீங்கள் நலம் பெற்று வீடு வந்தவுடன் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டேன். அதுதான் அவருடன் நான் கடைசியாகப் பேசுவது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. கலைஞர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் அப்பல்லோவிற்கு சென்று சோ சாரைப் பார்த்தார்கள். பாரதப்பிரதமர் மோடி, சோ சாரின் வீட்டிற்குச் சென்று உடல்நலம் விசாரித்தார்.

நான் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் என்னுடைய கைப் பேசியை உபயோகிக்க ஆரம்பித்துவிடுவேன். 7-12-2016-ந் தேதி காலை 6 மணிக்கு தந்தி டி.வி.யில் இருந்து எனக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது. ‘சோ சார் மரணமடைந்து விட்டார்’ என்று குறிப்பிட்டு விட்டு, ‘அவருடன் உங்களுடைய அனுபவத்தைக் கூறுங்கள்’ என்றார்கள். இந்தக் கட்டுரையின் சுருக்கத்தைக் கூறினேன்.

பிறகு ‘தந்தி டி.வி.க்கு காலையிலேயே வந்துவிடுங்கள். நீங்கள் தான் சோ சாரைப் பற்றி பேச வேண்டும்’ என்றார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்கு வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பேசினார். அதுபோல் நமக்கு சோ சாருக்கு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைத்தபடி ஒப்புக்கொண்டேன்.

முதலில் சோ சாரின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்தேன். அங்கு இயக்குனர் மகேந்திரனை சந்தித்தேன். அவரிடம், ‘உங்களைப் பற்றி தான் தந்தி டி.வி.யில் குறிப்பிடப்போகிறேன்’ என்று சொல்லி விட்டு தந்தி டி.வி.க்குச் சென்றேன். வெகு நேரம் வரை தந்தி டி.வி.யில் பேசினேன்.

நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதையாசிரியர், வசனக்கர்த்தா, சினிமா இயக்குனர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் இப்படி பன்முகங்களைக் கொண்டவர் சோ ராமசாமி.

நடிகர் சோவை, காலம் மறக்கடிக்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் எழுதிய ‘வால்மீகி ராமாயணம்’, ‘மகாபாரதம் பேசுகிறது’ என்ற இரண்டு நூல்களும் தமிழகம் உள்ள வரை சோ சாரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.

-தொடரும்.

கழுகுப் பார்வை

ஒருமுறை நடிகர் சங்கம் தொடர்பான ஒரு கூட்டம் கமல் சார் தலைமையில் நடைபெற்றது. பல நடிகர்களுடன், அன்று அஜீத்தும் வந்திருந்தார். கமல் சார் சட்டம் சம்பந்தமாகவும், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக சோ சாரையும் அழைத்திருந்தார். இருவரும் அது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அப்படி விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் சுமார் நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தார்கள். நாங்கள் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே சோ சார் ‘அந்த நபர்கள் யார்? இந்தக் கூட்டத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று கேட்டு வெளியே போகச் சொல்லுங்கள்’ என்றார்.

அவர் சொன்னபடி விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் வெளியாட்கள் தான் என்பது தெரியவந்தது. பிறகு அவர்களை வெளியேற்றினோம். அப்பொழுது அவருடைய புத்திக்கூர்மையை எண்ணி வியந்தேன். பிறகுதான் அவரைக் கவனித்தேன். வாசல் பக்கம் பார்வையை வைத்து உட்கார்ந்திருந்தார். உளவுத் துறையிலும், நேரடி அரசியலிலும் ஈடுபட மிகவும் தகுதியானவர் என்பதை உணர்ந்தேன்.

வெளிநாட்டு புகையிலை

பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலைப் போல் ‘பைப்’ வைத்து, அதில் விலையுயர்ந்த புகையிலையைப் போட்டு புகைக்கும் பழக்கம் கொண்டவர் சோ சார். ஒருமுறை வெளிநாட்டிலிருந்து, அவர் புகைக்கும் புகையிலையை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அதை அன்புடன் வாங்கிக் கொண்டார்.

‘கேப்டன் பிளாக்’ என்ற பெயருடைய புகையிலையில் நான்கு வகை உண்டு. 1. கோல்டு, 2. ஒயிட், 3. டார்க் புளூ, 4. லைட் புளூ. இந்த நான்கிலும் சோ சார் விரும்பிப் புகைப்பது ‘லைட் புளூ’தான். அதைத்தான் நான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பொழுது வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். இந்தக் குறிப்பிட்ட லைட் புளூ புகையிலையை சோ சார் வழக்கமாக எங்கு வாங்குவார் என்பது எனக்குத் தெரியும். அந்தக் கடை முதலாளியிடம் சென்று, எந்த வகை புகையிலையை சோ சார் வாங்குவார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.

தன்னைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்தவர்களுக்கு, நம்முடைய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக பரிசுகள் கொடுக்க வேண்டும் என்பார்கள். அந்த முறையில் தான் என்னுடைய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக சோ சாருக்கு புகையிலையைக் கொடுத்தேன்.

குடை ஏற்படுத்திய குழப்பம்

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் தலைமையில், கடற்கரையில் கலைஞருக்கு பாராட்டு விழா நடந்தது. கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிறிது நேரம் மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க சிலர் குடைப்பிடித்தனர். உடனே அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் வெகுண்டெழுந்து, குடை பிடிப்பவர்களை, குடையை மடக்கச் சொல்லி எச்சரித்தனர். இன்னும் சில தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களை தாக்கவும் முயற்சி செய்தனர்.

‘மழை பெய்தால் குடை பிடிப்பது சாதாரண விஷயம் தானே. இதற்கு எதற்கு தி.மு.க. தொண்டர்கள் ஆவேசப்பட வேண்டும்’ என்ற குழப்பம் ஏற்படுகிறதல்லவா..  அன்று கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் கூட இதே குழப்பத்தில் தான் இருந்தனர்.

ஆனால் இந்த குழப்பத்திற்குக் காரணம் வைகோ. ஆம்.. அந்த நேரத்தில் தான் தி.மு.க.வை விட்டு விலகி, தனிக் கட்சி தொடங்கியிருந்தார் வைகோ. அவர்களுடைய தேர்தல் சின்னம் ‘குடை’. அவர்களுடைய தேர்தல் சின்னத்தை இங்கே பிடிக்கக் கூடாது என்று தான் தி.மு.க. தொண்டர்கள் ஆவேசத்துடன் நடந்து கொண்டனர். ஆனால் இந்த உண்மை தெரியாத பொதுமக்கள் பலரும் குழம்பினர். விஷயம் தெரிந்த பலர் சிரித்தனர்.. ரசித்தனர்.