சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer! : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
அஜித்குமாருக்கு பொருத்தமான கதாநாயகி யார், எப்படி? (அரவிந்த், குடியாத்தம்)

ஷாலினி. இவர் பொருந்திய அளவுக்கு வேறு எந்த கதாநாயகியும் அஜித்குமாருக்கு பொருந்தவில்லை!

***

‘வனமகன்,’ ‘ஜுங்கா,’ ‘கடைக்குட்டி சிங்கம்,’ ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்த சாயிஷா, தமிழ் பட உலகில் ஒரு ‘ரவுண்டு’ வருவாரா? (இரா.பொன் பழனியப்பன், உசிலம்பட்டி)


ஒரு ரவுண்டு அல்ல, பல ரவுண்டு வரவேண்டும் என்று சாயிஷாவுக்கு ஆசை. அதற்காகவே அவர் சமீபத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறார்!

***

குருவியாரே, ஜோதிகா, நயன்தாரா ஆகிய இருவரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? தொகை எவ்வளவு? (ஜெய் கணபதி, சென்னை–1)

ஜோதிகாவை விட நயன்தாரா நான்கு மடங்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அவருடைய சம்பளம் இப்போது ரூ.4 கோடி! இது, தென்னிந்திய சினிமாவில் எந்த கதாநாயகியும் வாங்காத சம்பளம்!

***

இயக்குனர்–நடிகர் சுந்தர் சி. திரைப்படம் எதுவும் தயாரிப்பதில்லை. நடிப்பதும் இல்லை. அவர் என்னதான் செய்கிறார்? (குலசேகர ராஜா, திருச்செந்தூர்)

சுந்தர் சி. தற்போது, ‘சின்னத்திரை’ தொடர்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அவர் தயாரித்து வரும் 2 தொடர்களும் ரசிகர்–ரசிகைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன!

***


விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றதே... அங்கு என்ன காட்சியை படமாக்கினார்கள்? (வெற்றிவேல், சேலம்-2)

விஜய்யின் அறிமுக பாடல் காட்சியை அமெரிக்காவில் படமாக்கி இருக்கிறார்கள்!

***

குருவியாரே, 15 வருடங்களாக திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகியாக திரிஷா நீடித்து வருவது எப்படி? அவருடைய நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கிறதா? (கே.செல்வசிங், கோவை)

அவருடைய ஒல்லியான உடற்கட்டும், ஈர்ப்பை ஏற்படுத்தும் முக தோற்றமும்தான் அந்த ரகசியங்கள். ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்பது அவருடைய நிறைவேறாத ஆசையாக இருந்தது. அதுவும், கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்து வரும் புதிய படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது!

***

குருவியாரே, வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் கெட்டிக்கார கதாநாயகன் யார்? (எபனேசர், சாயர்புரம்)

விஜய் சேதுபதி! எது மாதிரி கதைகளும், கதாபாத்திரங்களும் ஜெயிக்கும்? என்பதை கணிப்பதில், இவருக்கு இணை இவர்தான்!

***

1990-களில் பிரபல கதா நாயகியாக இருந்த சுகன்யா, இப்போது என்ன செய்கிறார்? (எஸ்.ராம், தேனி)

சுகன்யா, ஒரு பரத நாட்டிய கலைஞர். பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்கிறதாம்!

***

குருவியாரே, சத்யராஜ், சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் உறவினர்களா, நண்பர்களா? (வி.எஸ்.மூர்த்தி ஜோதி, திண்டுக்கல்)

நண்பர்கள் போல் பழகும் நெருங்கிய உறவினர்கள்! சத்யராஜ் சினிமாவில் அறிமுகமாவதற்கு உதவியவர், நடிகர் சிவகுமார்தான். அந்த நன்றியை மறக்காதவர், சத்யராஜ். அதனால்தான் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் எப்போது அழைத்தாலும், ஓடிப்போய் நடிக் கிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்த படங்களில், வெள்ளி விழா கொண்டாடிய 3 படங்களை கூற முடியுமா? (கவிதைப்பிரியன், திருச்சி)

பட்டிக்காடா பட்டணமா, தெய்வ மகன், சவாலே சமாளி!

***

குருவியாரே, காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை..? (என்.சுதாகரன், பேரா வூரணி)

இரண்டு பேருக்கும் உடன் பிறந்த சகோதரிகள் இருக்கிறார்கள். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் ஒன்றிரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியின் அக்காள் சஞ்சனா கல்ராணியும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, அதர்வாவுக்கும், பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக பேசப்பட்டதே...அந்த காதல் என்ன ஆனது? (எம்.சூர்யபிரகாஷ், மதுராந்தகம்)

இருவருக்கும் இடையே இன்னொரு ஹீரோ குறுக்கே பாய்ந்ததால், இவர்களின் காதல் முறிந்து போனதாக கூறப்படுகிறது!

***

குருவியாரே, பிரஷாந்த் நடித்த புதிய படமான ‘ஜானி’யில் கதாநாயகி யார், டைரக்டர் யார், தயாரிப்பாளர் யார்? (ராஜேஷ், பொன்மலைப்பட்டி)

‘ஜானி’ படத்தின் கதாநாயகி, சஞ்சிதா ஷெட்டி. டைரக்டர்: வெற்றிச்செல்வன். தயாரிப்பாளர்: நடிகர் தியாகராஜன்!

***

அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? (சி.மகேஷ், பொள்ளாச்சி)

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து அஜித், வினோத் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதையடுத்து, ‘மங்காத்தா-2’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பேசப்படுகிறது!

***

‘சுப்பிரமணியபுரம்’ பட புகழ் சுவாதி என்ன ஆனார்? வெள்ளித்திரையில் அவரை பார்க்க முடியவில்லையே...? (ஏ.பரத், நெய்வேலி)

சுவாதி, திருமணத்துக்கு தயாராகி விட்டார். மணமகன் பெயர், விகாஷ். விமானம் ஓட்டும் ‘பைலட்!’

***

குருவியாரே, ‘சண்டக்கோழி-2’ படத்தில் விஷாலுக்கு ஜோடி யார்? கீர்த்தி சுரேசா, வரலட்சுமி சரத்குமாரா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அந்த படத்தில், விஷாலுக்கு 2 ஜோடிகள். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவருமே விஷால் ஜோடிகள்தான்!

***

ஓவியா, கடை திறப்பு விழாவுக்கு வருவாரா? (எம்.லோகநாதன், திருவண்ணாமலை)

கவனிப்பு ‘கனமாக’ இருந்தால், நிச்சயமாக வருவாராம்!

***

குருவியாரே, ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவின் நகைச்சுவை நடிப்பு எப்படியிருந்தது? (ரபீ அஹமத், சிதம்பரம்)

ரசிக்கும்படி இருந்தது!

***

அமலாபால், இந்தி பட உலகில் தாக்குப் பிடிப்பாரா? (எம்.அந்தோணிராஜ், வாலாஜாப்பேட்டை)

தாக்குப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் அமலாபால், இந்தி பட உலகுக்கு போய் இருக் கிறார்!

***