சினிமா செய்திகள்

பா.விஜய்யின் சொந்த பட அனுபவம்‘‘படத்தை திரைக்கு கொண்டு வருவது சவாலாக இருக்கிறது’’ + "||" + Pa.Vijay's own film experience

பா.விஜய்யின் சொந்த பட அனுபவம்‘‘படத்தை திரைக்கு கொண்டு வருவது சவாலாக இருக்கிறது’’

பா.விஜய்யின் சொந்த பட அனுபவம்‘‘படத்தை திரைக்கு கொண்டு வருவது சவாலாக இருக்கிறது’’
படத்தை திரைக்கு கொண்டுவருவது பெரிய சவாலாக இருக்கிறது என்று தனது சொந்த பட அனுபவம் பற்றி பா.விஜய் கூறினார்.
சினிமா பாடல் ஆசிரியர் பா.விஜய், ‘ஞாபகங்கள்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். தொடர்ந்து ‘இளைஞன்,’ ‘நையப்புடை,’ ‘ஸ்ட்ராபெர்ரி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது, ‘ஆருத்ரா’ என்ற படத்தில், அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரும் அவரே. இது, ஒரு குற்றப்பின்னணியில் நடக்கும் திகில் படம். படத்தை பற்றி அவர் கூறியதாவது:–

‘‘இந்த படத்தில், நான் சிற்பியாக நடித்து இருக்கிறேன். டைரக்டர் கே.பாக்யராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவருடனும் கூட்டணி அமைத்து, படத்தை கலகலப்பாக இயக்கியிருக்கிறேன். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜோமல்லூரி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தக்ஷிதா, மேகாலி, சோனி ஆகிய 3 மும்பை அழகிகள் கதாநாயகிகளாக வருகிறார்கள்.

பாக்யராஜ், துப்பறியும் நிபுணராக வருகிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சனாசிங் நடித்து இருக்கிறார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.’’

இவ்வாறு பா.விஜய் கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு பா.விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– பாடல் ஆசிரியர், கதாநாயகன், டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய 4 பொறுப்புகளை சுமந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:– பாடல் எழுதுவது, நடிப்பது, இயக்குவது ஆகிய பணிகளில் சிரமம் எதுவும் இல்லை. படத்தை தயாரித்ததில்தான் நிறைய சிரமங்கள் இருந்தது. அதைவிட, படத்தை திரைக்கு கொண்டுவருவது பெரிய சவாலாக இருக்கிறது.

கேள்வி:– தொடர்ந்து படங்களை தயாரித்து, டைரக்டு செய்வீர்களா?

பதில்:– அடுத்ததாக ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறேன். அதில் ஒரு பெரிய கதாநாயகன் நடிப்பார். படத்தை தயாரிப்பது பற்றி முடிவு செய்யவில்லை.’’