‘ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு


‘ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 9:30 PM GMT (Updated: 11 Sep 2018 5:22 PM GMT)

‘ஹோட்டல் மும்பை’ என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகி உள்ளது.

2008–ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் ஊடுருவி ரெயில் நிலையம், தி ஓபராய் ஓட்டல், தாஜ் பேலஸ், டவர், லியோ போஸ்ட் கபே உள்பட 8 இடங்களில் ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் தாக்குதல் நடத்தியதையும் இதில் 164 பேர் கொல்லப்பட்டதையும் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்தோணி மராஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் தேவ்படேல், ஆர்மி ஹாமர், அனுபம் கேர், ஜேசன் ஐசாக்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இரு தினங்களுக்கு முன்பு டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்து உள்ளனர். படத்தை வெளியிட எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. 

பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற தகவல் எதுவும் படத்தில் இல்லை என்றும் உண்மை தன்மை இல்லாமல் படத்தை எடுத்துள்ளனர் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறினர். தாக்குதல் நடந்தபோது ஓட்டலில் சிக்கியவர்களை மட்டுமே படத்தில் குறிப்பிட்டு உள்ளனர். வெளியில் நடந்த தாக்குதல் சம்பவங்களை சேர்க்கவில்லை என்றும் குறை சொல்லி உள்ளனர். 

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவின் இயக்குனர் அசீம் சப்ரா டுவிட்டரில் ‘‘மும்பையில் நடந்த சோக நிகழ்வை கேளிக்கையாக்கி உள்ளனர். படத்தில் எந்த இடத்திலும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை. இது வெட்கக்கேடானது. ஆனால் படத்தில் பயங்கரவாதிகள் உருது மொழியில் பேசுகிறார்கள். இது உண்மைத்தன்மை உள்ள படமாக இல்லை’’ என்று கண்டித்துள்ளார்.

Next Story