மதத்தின் பெயரால் அரங்கேறும் அராஜகம் ‘டே ஆப் ராத்’


மதத்தின் பெயரால் அரங்கேறும் அராஜகம் ‘டே ஆப் ராத்’
x
தினத்தந்தி 15 Sep 2018 7:58 AM GMT (Updated: 15 Sep 2018 7:58 AM GMT)

தோல்விகளை எதிர்கொள்ள முடியாத போது, மனிதன் கோபத்தை வெளிக்காட்டுகிறான். கோபம் என்பதே இயலாமையின் வடிவம் தானே. இவ்வகையான கோபம், வெகுசுலபமாக ஒருவனை அநீதி நோக்கி இட்டுச்செல்கிறது.

 மதத்தின் பெயரால் கொடுக்கப்படும் தண்டனைகளுக்கு பின்னால், யாரோ சிலரின் இயலாமையும், குரூரமும் தான் ஒளிந்து கிடக்கிறது. அறிவியலை அறிவால் எதிர்கொள்ள முடியாத போது, மதம் வன்முறையை பிரயோகிக்கிறது. ‘உலகம் உருண்டை’ என்று சொன்னவனை அது கல்லால் அடித்தது.

1943-ல் வெளிவந்த ‘டே ஆப் ராத்’ (Day of wrath) என்ற டானிஷ் மொழித் திரைப்படம், மதவாதிகளின் வக்ர முகத்தை பதிவு செய்திருக்கிறது. ‘டே ஆப் ராத்’ என்பதற்கு ‘தண்டனையின் நாள்’ என்று பொருள்.

உலக சினிமாவின் பிதாமகன் என்று அறியப்படும் இயக்குனர் கார்ல் தியோடர் டிரையர், இந்தப் படத்தை உருவாக்கிய போது, டென்மார்க்கானது ஜெர்மனி நாஜி படைகளின் ஆளுகைக்கு கீழ் இருந்தது.

1600-களில் டென்மார்க்கில் ஒரு சிறிய குக்கிராமத்தில் நடக்கும் கதையாக இதை படமாக்கியிருக்கும் இயக்குனர், இப்படத்தில் மதத்தின் பெயரைச் சொல்லி வழங்கப்பட்ட மோசமான தண்டனை மற்றும் பிற்போக்கு மதவாதிகளின் கள்ளத்தனமான சுயநலம் பற்றி பேசுகிறார்.

அந்த காலகட்டத்தில் ‘சாத்தானோடு தொடர்புடையவர்கள்’ என குற்றம் சாட்டப்பட்டு, அப்பாவிகள் பலர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

வயதான பாதிரியார் அப்சலான், தனக்கு இரண்டாவது மனைவியாக ‘ஆன்’ என்ற இளம்பெண்ணை மணந்திருந்தார். அப்சலானுக்கு மூத்த மனைவியின் மூலம் பிறந்த மகன் ‘மார்ட்டின்’ ஊர் திரும்புகிறான். அவன் தனது புதிய சித்தியான ‘ஆன்’ வயதை ஒத்தவன்.

அவ்வூரில் மார்ட்டே என்ற வயதான பெண், ‘சாத்தானுடன் தொடர்புடைய சூனியக்காரி’ என குற்றம் சாட்டப்படுகிறாள். உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, மார்ட்டே அவ்வூரில் பல இடங்களில் ஒளிந்து வாழ்கிறாள். உண்மையில் மார்ட்டே, உள்ளூர் மருத்துவச்சி. அவளுக்கு ‘ஆன்’ சில சமயம் அடைக்கலம் கொடுத்து வந்தாள்.

மருத்துவச்சிகள் பிரசவம் பார்க்கும் போது, குழந்தையை ரத்தத்தோடு கையில் எடுப்பது சாத்தானின் வேலை தான் என்றெல்லாம் நம்பப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஸ்டெதஸ்கோப் பயன்பாட்டிற்கு முன்பு, விலங்குகளின் எலும்புகள் ஸ்டெதஸ்கோப்பாக பயன்பாட்டில் இருந்தது. கி.பி 1300-ம் ஆண்டு முதலே நவீன மருத்துவ மானது, மத நம்பிக்கைகளோடு போராடியே முன்னேறி இருக்கிறது. இதற்கு சாட்சியாக... முதன் முத லில் உடற்கூராய்வு மேற்கொண்ட இத்தாலியை சேர்ந்த கிலியானி என்ற 19 வயது பெண் குடும்பத் துடன் மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட வரலாறும் உண்டு.

இத்திரைப்படத்தில் மருத்து வச்சி மார்டே எவ்வளவு நாட்கள் ஒரு சிறிய கிராமத்தில் மறைந்து வாழ முடியும். அவளை பாதிரியார் கள் பிடித்துச்சென்று, கிறிஸ்தவ பேராலயம் அருகில் ஒரு பெரிய தீ ஜூவாலை உண்டாக்கி, ஏணி போன்ற ஒன்றில் அவளைக் கட்டி உயிருடன் எரித்துக் கொல்கிறார்கள். மார்ட்டே எவ்வளவோ கெஞ்சியும் விடாமல், நெருப்பு அவளை தின்று செரித்தது. இக்காட்சி நமக்குள் ஏற்படுத்தும் பதை பதைப்பு, படத்தின் கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பை கூட்டுவதோடு, குற்ற உணர்ச்சியிலும் நம்மை உலுக்கி எடுக்கிறது.

பாதிரியார் அப்சலானின் மனைவியான ஆன், தனக்கு மகன் முறையில் இருக்கும் மார்ட்டினுடன் காதல் கொள்கிறாள். தனது வெறுமையான வாழ்க்கையில் இருந்து விடுதலையை அவனிடம் தேடுகிறாள். இளமை எரியும் தன் வறண்ட நாட்களை, அவனது காதல் கொண்டு ஈரம் செய்கிறாள். ஒரு கட்டத்தில் மார்ட்டினுடனான தனது காதலை, வயதான கணவன் அப்சலானிடம் போட்டு உடைக்கிறாள். அப்சலான் அதிர்ச்சியில் கீழே விழுந்து உயிர்விடுகிறார்.

‘ஆன் ஒரு சூனியக்காரி’ என மதவாதிகளால் குற்றம் சாட்டப்படுகிறது. அவளை தீயிலிட்டு எரிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.



இறுதிகாட்சியில் ‘அப்சலா’னின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் சவப்பெட்டி அருகே, நிராதரவாக அமர்ந்திருக்கும் ஆன், பாடல்ஒன்றை பாடுகிறாள். அந்த பாடல், நம்முள் இறக்கிவைக்க இயலாத பாரத்தை சுமத்தி விடுகிறது. ஆனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையை, பார்வையாளனுக்கு கடத்துகிறது.

படத்தின் இயக்குனர் கார்ல் தியோடர் டிரையர், மத நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு இல்லாதவர். அவருடைய படைப்புகளை எல்லாம், பெரிய சர்ச்சைகளுக்கு பின்னரே திரைக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனாலும் தன் கருத்துக்களை நீர்த்துப் போகவிடாமல் ஒவ்வொரு முறையும் பொறுமை காத்து போராடியே முன் நகர்ந்தார். அதனால் தான் அவர் திரைமொழியின் பிதாமகன் என அழைக்கப்படுகிறார்.

1908-ம் வருடம் ‘ஹான்ஸ் விய்ர்ஸ்-ஜென்ச்சன்’ என்ற நார்வே நாட்டு நாடக ஆசிரியர் ‘அன்னே பெடரர்ஸ்டோட்டர்’ என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் 1590-ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட படம் தான் ‘டே ஆப் ராத்’

1948-ம் வருடம் அமெரிக்காவின் நேஷனல் போர்ட் ஆப் ரிவ்வியூ விருது மற்றும் 1959-ம் வருடம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான, இட்டாலியன் நேஷனல் சிண்டிகேட் ஆப் பிலிம் ஜெர்னலிஸ்ட் விருது ஆகியவற்றை இப்படம் வென்றிருக்கிறது.

கார்ல் தியோடர் டிரையர் தனது படைப்புகள் வழியே, தொடர்ந்து மதங்கள் மீதும்.. கடவுள் மீதும் கேள்விகள் எழுப்பினார். ஆனால் இவர் தனது படங்களில் நடிக்கும் நடிகர்களை, மிகுந்த சித்திரவதை செய்து நடிக்கவைத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இந்தக் குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த இயக்குனர், ‘நான் எனது நடிகர்களை இசைக்கருவிகள் போல பயன்படுத்துகிறேன். நல்ல இசையை பெற அவர்களை அழுத்துகிறேன்’ என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

‘டே ஆப் ராத்’ படத்தின் பிரதான இடங்களில், கதாபாத்திரங்களுடன் பார்வையாளனின் நெருக்கத்தை அதிகரிப்பதற்காக, குளோஸ் அப் காட்சிகளை அதிகமாக பயன்படுத்தியிருப்பார் இயக்குனர். குறிப்பாக தன் கண் முன்னேயே தனது இளமை கரைந்து கொண்டிருப்பதை, கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் ஆன் கதாபாத்திரத்தின் மன ஓட்டத்தை பதிவு செய்ய, இவ்வகை அண்மைக் காட்சிகள் பெரிதும் உதவியிருக்கிறது.

ஆன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை லிஸ்பிச் மூவின், 1917-ல் டென்மார்க்கில் பிறந்தார். நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை தந்து புகழ்பெற்ற இவர் 2011-ம் வருடம் தனது 94-வது வயதில் காலமானார்.

1600-களில் நடந்த இந்த பிற்போக்கு மதவாதிகளின் கதையில் இருந்து, இன்றைய நவீன மனித சமூகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது? இன்றும் அம்மை நோய்க்கு மருத்துவமனை செல்லத் தயங்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மதங்கள் என்பது.. மனித குல வளர்ச்சிக்கு, குறிப்பாக பெண்களின் முன்நகர்விற்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். மதத்தை பின்புலமாக வைத்துக் கொண்டு, போலியாக வலம் வரும் மதத் துறவிகளை விட, மதத்தை துறப்பவர்களே நேர்மையானவர்கள்.

-தொடரும் 

Next Story