எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு, நடிகர் சித்தார்த்-நடிகை கஸ்தூரி எதிர்ப்பு


எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு, நடிகர் சித்தார்த்-நடிகை கஸ்தூரி எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 1:05 AM GMT (Updated: 18 Sep 2018 1:05 AM GMT)

காவல்துறையினருடன் பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், “ஜெயிலுக்குள் பயங்கரவாதிகளுக்கு 19 கலர் டி.வி. வெட்கமில்லையா உங்களுக்கு? காக்கி சட்டை அணிவதற்கு வெட்கமாய் இல்லை. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த காவல்துறையுமே ஊழல் மயமாகிவிட்டது. உங்களுக்கு லஞ்சம் தேவை என்றால் என்னிடம் கேளுங்கள். நான் தருகிறேன். எல்லோருமே லஞ்சப்பேர்வழிகள்” என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி இது ஐகோர்ட்டு உத்தரவு சார் என்று கூற கோர்ட்டையும் சாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எச்.ராஜா பேசியதை நடிகர் சித்தார்த்தும், நடிகை கஸ்தூரியும் கண்டித்துள்ளனர்.

சித்தார்த் டுவிட்டரில், “உயர்நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர், இந்து மதம் என்று அனைத்தையும் எச்.ராஜா இழிவாக பேசுவதை போராட்டம் நடத்தியவர்களை சுட்டுக்கொன்ற தமிழ்நாடு காவல்துறை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதில் அவர்களது சார்பு நிலை தெரிகிறது. எச்.ராஜாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவருக்கு கண்ணியமில்லை. அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்த தமிழிசை இதனை சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “எவ்வளவு கோபம் வந்தாலும் பொதுவெளியில் பேசும் முறை தவறக்கூடாது. நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையால் திட்டுவது, போலீசுக்கு லஞ்சம் தருகிறேன் என்று சொல்வது, மலிவாக பேசுவதில் எச்.ராஜாவுக்கு இது புதிய மைல் கல். விமானத்தில் தவறாக செயல்பட்டவர் மீது போலீசில் புகார் அளித்த தலைவி தன் கட்சிக்காரரின் நடத்தைக்கு என்ன செய்யப்போகிறார்? நீதிமன்றமும், போலீசும் வேடிக்கைப்பார்க்க போகிறதா?” என்று கூறியுள்ளார்.

Next Story