சினிமா செய்திகள்

நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி சென்னை திரும்பினார் + "||" + Karthi returned to Chennai after landing in the landslide

நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி சென்னை திரும்பினார்

நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி சென்னை திரும்பினார்
குலுமனாலியில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி, சென்னை திரும்பினார்.
படப்பிடிப்புக்காக இமாசல பிரதேச மாநிலம் குலுமனாலி சென்ற நடிகர் கார்த்தி, நிலச்சரிவில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அங்கே ஏற்பட்ட பயங்கர அனுபவம் பற்றி, ‘தினத்தந்தி’ நிருபரிடம் அவர் கூறியதாவது:–

‘‘நானும், ரகுல் பிரீத்சிங்கும் ஜோடியாக நடிக்கும் ‘தேவ்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை குலுமனாலியில் நடத்த திட்டமிட்டார்கள். லைட் மேன்கள், உதவியாளர்கள் உள்பட 140 பேர்களை கொண்ட படப்பிடிப்பு குழுவினர் முன்கூட்டியே அங்கு சென்று விட்டார்கள். மறுநாள் நான் டெல்லி வரை விமானத்தில் போய், அங்கிருந்து சண்டிகார் வழியாக குலுமனாலிக்கு காரில் புறப்பட்டேன்.

அப்போது, வழிநெடுக கனமழை பெய்து கொண்டிருந்தது. 23 வருடங்களுக்குப்பின், அங்கே இதுபோல் கனமழை பெய்வதாக கார் டிரைவர் சொன்னார். நாங்கள் காரில் போய்க் கொண்டிருந்தபோது ரோடே தெரியாத அளவுக்கு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. அவற்றை தவிர்த்து காரில் போய்க் கொண்டிருந்தோம். ரோடு அபாயகரமாக இருப்பதாக சிலர் கொடிகளை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்கள். 

குலுமனாலிக்கு 400 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். 100 கிலோ மீட்டரை தாண்டுவதற்கு 8 மணி நேரம் ஆனது. பிலாஸ்பூர் அருகில் உள்ள மண்டி என்ற இடத்தை அடைந்தபோது, மேற்கொண்டு போக முடியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. மழை–வெள்ளத்தில் ரோடு பல இடங்களில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். 

இதற்கு மேல் பயணம் செய்வது ஆபத்தானது என்று டிரைவர் கூறினார். அதனால், மண்டி என்ற அந்த சின்ன ஊரில் என்னை தங்கவைத்தார்கள்.

மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டு இருந்தது. இரவு முழுவதும் அந்த கிராமத்தில் நான் தங்கியிருந்தேன். குலுமனாலியில் பேய் மழை பெய்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 140 பேர்களும் எப்படி இருப்பார்களோ? என்ற பயம் ஏற்பட்டது. நல்ல வேளை, யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை.

நான், நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். குலுமனாலியில் மழை நின்று விட்டதாக சொன்னார்கள். படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்த 140 பேர்களும் பாதுகாப்பாக சென்னை திரும்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.’’

இவ்வாறு கார்த்தி கூறினார்.