சினிமா செய்திகள்

“ரஜினியுடன் நடிக்கும்போது ஜூனியர்-சீனியர் வித்தியாசம் தெரியவில்லை”நடிகை திரிஷா பேட்டி + "||" + Actress Trisha interviewed

“ரஜினியுடன் நடிக்கும்போது ஜூனியர்-சீனியர் வித்தியாசம் தெரியவில்லை”நடிகை திரிஷா பேட்டி

“ரஜினியுடன் நடிக்கும்போது ஜூனியர்-சீனியர் வித்தியாசம் தெரியவில்லை”நடிகை திரிஷா பேட்டி
“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார்.
சென்னை,

திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது திரிஷாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:- சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.

கேள்வி:- அவருடன் நடித்தபோது உங்களுக்கு ‘ஜூனியர்-சீனியர்’ என்ற வித்தியாசம் தெரியவில்லையா?

பதில்:- எனக்கும் சரி, அவருக்கும் சரி, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் கதாபாத்திரங்களாக இருந்தோம். நடிப்பில், அவருடன் போட்டி போட முடியாது. ஒரே டேக்கில் நடித்து விட்டு போய் விடுகிறார். அவருக்கு சமமாக நடிப்பது, சிரமமாக இருந்தது.

இன்னொரு ரவுண்டு

கேள்வி:- ரஜினிகாந்துடன் நடிப்பதை ஒரு லட்சியமாக வைத்து இருந்தீர்கள். அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அடுத்து...?

பதில்:- இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி:- திருமணம் பற்றி என்ன முடிவு செய்து இருக்கிறீர்கள்?

பதில்:- என்னை திருமணம் செய்துகொள்கிற மாதிரி யாராவது இருக்கிறார்களா?

பெண்களுக்கு மரியாதை

கேள்வி:- சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. சந்தோஷமாக இருக்கிறது.

‘பாய் பிரண்ட்’

கேள்வி:- விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறீர்கள். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறீர்களா?

பதில்:- ‘விக்ரம் வேதா’ படத்தை இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்.

கேள்வி:- உங்களுக்கு ‘பாய் பிரண்ட்’ யாராவது இருக்கிறார்களா?

பதில்:- எனக்கு ‘பாய் பிரண்ட்’ கிடையாது. எனக்கு 19, 20 வயதானபோது, பையன்களை கண்டாலே வெறுத்து ஒதுங்கினேன்.

காதல்

கேள்வி:- சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- இதுவரை எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை. என்றாலும், எனக்கு காதல் படங்கள் ரொம்ப பிடிக்கும்.

கேள்வி:- அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?

பதில்:- அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

கேள்வி:- யாருடைய வேடத்தில் நடிக்க ஆசை?

பதில்:- ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை. ஆனால், அவருடைய வேடத்தில் வேறு யாரோ நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.”

இவ்வாறு திரிஷா பதில் அளித்தார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்திருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- என் அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை அல்ல. வருமான கணக்கு சரி பார்த்தல் என்று சொல்லலாம். என் ஆடிட்டர் கணக்கு தாக்கல் செய்யாததால் நிகழ்ந்த சம்பவம், அது. என் முகம் கொஞ்சம் பிரபலமாகி விட்டதால், நிறைய பணம் வைத்து இருப்பேன் என்று வருமான வரி அதிகாரிகள் நினைத்து விட்டார்கள். எனது அலுவலகத்தில் நடந்தது போல், என் அண்ணன், தம்பி வீடுகளிலும் வருமான கணக்கை சரிபார்த்தார்கள்.

திரிஷாவுடன்...

கேள்வி:- திரிஷாவுடன் ஜோடியாக நடித்தது பற்றி...?

பதில்:- நான் திரிஷாவின் ரசிகனாக இருந்தேன். அவருடைய முதல் படமான ‘லேசா லேசா’ ரிலீஸ் ஆனபோது, நான் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது சினிமா நடிகர் ஆவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. திரிஷா ஜோடியாக நடிப்போம் என்றும் நினைக்கவில்லை.

கேள்வி:- மற்ற கதாநாயகிகளுக்கும், திரிஷாவுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தீர்களா?

பதில்:- திரிஷா, தமன்னா, நயன்தாரா ஆகிய மூன்று பேருமே வேலையில் மிக கவனமாக இருப்பார்கள். அதனால்தான் இத்தனை வருடங்களாக அந்த மூன்று பேரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரிஷா நாகரீக உடைகளில் அழகாக இருப்பது போல், புடவையிலும் அழகாக இருப்பார்.

காதல்

கேள்வி:- உங்களுக்கு எத்தனை முறை காதல் வந்து இருக்கிறது?

பதில்:- 32 முறை காதல் வந்து இருக்கிறது.

கேள்வி:- சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து?

பதில்:- அந்த தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள்.”

மேற்கண்டவாறு விஜய் சேதுபதி பதில் அளித்தார்.