தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி


தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:21 AM GMT (Updated: 13 Oct 2018 7:58 AM GMT)

நான் 11 வயது மாணவனாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில், டி.ஆர்.ராஜகுமாரியைப் பற்றி வயதான ஆண்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருக்கிறேன்.

அதனால் டி.ஆர்.ராஜகுமாரி என்பவர் யார்?, அந்த நடிகை எந்தப்படத்தில் நடித்திருக்கிறார்? என்று அறிய சிலரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மனோகரா படத்தைப் போய் பார், அந்தப் படத்தில் வசந்தசேனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்’ என்றார்கள்.

அவர்கள் சொல்லி சில நாட்களிலேயே ‘மனோகரா’ படம் எங்க ஊர் தியேட்டருக்கு வந்தது. படம் வெளியாகி 6 ஆண்டு கழித்து தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். படம் வந்தது 1954. நான் பார்த்தது 1960-ம் ஆண்டு.

‘மனோகரா’ படத்தைப் பார்த்ததும், டி.ஆர்.ராஜகுமாரி மீது எனக்குக் கோபம்தான் வந்தது. ஏனோ பிரியம் வரவில்லை. அதற்குக் காரணம் அவர் ஏற்று நடித்த வசந்தசேனா என்ற கதாபாத்திரம். மன்னரின் ஆசை நாயகியாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வசந்தசேனா வரும் காட்சிகளில் ஒரே சத்தமும், வசைப்பாடுகளும் தியேட்டரில் கேட்டது.

அதன்பிறகு ராஜகுமாரி நடித்த ‘வானம்பாடி’, ‘பாசம்’ போன்ற படங்களைப் பார்த்தேன். அந்தப் படங்களிலும் அவர் என்னைக் கவரவில்லை. கடைசியாக ஜெமினி தயாரிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படம் பார்த்தேன். அந்தப் படத்தில் சர்க்கஸில் ‘பார்’ விளையாடும் பெண்ணாக, கவர்ச்சி உடையில் வருவார். என்னுடைய தேடலுக்கான விடை அந்தப் படத்தில் தான் கிடைத்தது. உண்மையிலேயே மிகவும் கவர்ச்சியாக இருந்தார். வயதானவர்கள் ஏங்கியது உண்மையே என்பதை உணர்ந்தேன்.

அந்தக் காலத்தில் ‘ஹரிதாஸ்’, ‘சந்திரலேகா’ போன்ற படங்களைப் பார்த்த ஆண்கள், குறிப்பாக வயதான ஆண்களில் பெரும்பாலானோர் டி.ஆர்.ராஜகுமாரி மீது பைத்தியமாகவே இருந்தனர். ‘டி.ஆர்.ராஜகுமாரியை வாழ்க்கையில் ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், வாழ்ந்த வாழ்க்கையில் நான் திருப்தி கொள்வேன்’ என்று சிலரும், ‘அவரது கையைத் தொட்டால்கூட போதும், மறுகணமே நான் மரணமடையக்கூட தயார்’ என்று சிலரும் பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

பின்னொரு நாளில் அவரது வயதை அறிந்தேன். என் தாயாரைவிட 4 ஆண்டுகள் மூத்தவர். அதனால் இனிமேல் அவரைப் பற்றி விமர்சிக்கக்கூடாது, நினைக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

கவியரசு கண்ணதாசன் புத்தகங்களிலும், பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரியைப் பற்றி மிகப்பெருமையாகவும், புகழ்ந்தும் கூறியுள்ளார். ஒரு புத்தகத்தில், ‘மறுபிறவி ஒன்று இருந்தால் அதில் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரராகப் பிறக்க விரும்புகிறேன். நடிகைகளில் கையெடுத்து வணங்கத்தக்க ஒரு சிலரில் டி.ஆர்.ராஜகுமாரியும் ஒருவர்’ என்று எழுதியிருந்தார்.

இதையெல்லாம் படித்தபிறகு அவர் மீது ஒரு தனி மரியாதையே எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக, ‘எப்படியாவது வாழ்க்கையில் ஒருநாள் நாம் டி.ஆர்.ராஜகுமாரியைப் பார்த்துவிடவேண்டும்’ என்கிற குறிக்கோளுடன் இருந்தேன்.

1960-களின் பிற்பகுதியில் இருந்து அவர் யாரையுமே பார்ப்பதில்லை, எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை, அப்படியே ஒரு சில விழாக்களில் கலந்து கொள்ளவேண்டியக் கட்டாயம் இருந்தால்கூட, யாருக்கும் தெரியாமல் வந்து கலந்துகொண்டு சென்று விடுகிறார் என்கிற செய்தியை பின் நாட்களில் தெரிந்து கொண்டேன். அதனால் என்னுடைய குறிக்கோள் தீவிரமாக மாறியது.

என்னுடைய முதல் படம் வெளிவந்த பிறகு, அதாவது 1979-ம் ஆண்டில் இருந்து 1984-ம் ஆண்டு வரை எப்பொழுதெல்லாம் அவருடைய வீட்டிற்கு அருகில் செல்லுகின்ற வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம், அவரைப் பார்ப்பதற்காகச் செல்வேன். ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்தைச் சொல்லி, வீட்டில் உள்ளவர்கள் தட்டிக்கழிப்பார்கள்.

ஒரு நாள் ‘என்ன விஷயமாகப் பார்க்கவேண்டும்’ என்று கேட்டார்கள்.

‘நான் அவருடைய மிகப்பெரிய விசிறி. ஒரே ஒருமுறை அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். வேறு எந்தவிதமான தொந்தரவும் அவருக்கு நான் கொடுக்க மாட்டேன்’ என்றேன்.

எப்படிப்பட்ட காரணங்களைக் கூறினாலும், கடைசிவரை எனக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. இருந்தாலும் என்றாவது ஒருநாள் அவரைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் என்னுடைய ஆழ்மனதில் உறுதியாக இருந்தது.

1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ், இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் சொந்த நிறுவனமாகும். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வேறு யாரும் அல்ல. டி.ஆர்.ராஜகுமாரியின் உடன்பிறந்த தம்பி. பல வித்தியாசமான படங்களையும், வெற்றிப் படங்களையும் இயக்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையும் இணைத்து ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தை எடுத்தவர். எனவே அவருடைய கம்பெனியில் இருந்து வந்தவரை அதிக ஆவலுடன் வரவேற்றேன்.

வந்தவர், ‘அண்ணா.. இலங்கேஸ்வரன் என்னும் மனோகர் நடத்தும் நாடகத்தைப் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதில் நீங்கள் ராவணனாக நடிக்க வேண்டும். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்; நான் போய் அண்ணாவிடம் சொல்லுகிறேன். பிறகு நீங்கள் அலுவலகத்திற்கு வந்து, மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றார். (ராமண்ணாவை அண்ணா என்று தான் சொல்லுவார்கள்)

‘கூண்டுக்கிளி’ படத்தில் இருந்து ராமண்ணா சார் இயக்கிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். கண்டிப்பாக நடிக்கிறேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றேன்.

‘என்ன உதவி செய்யவேண்டும்’ என்றார், வந்தவர்.

‘நான் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை பார்க்க வேண்டும், அவரோடு பேச வேண்டும்’ என்று கூறினேன்.

நான் சொன்னதைக் கேட்டவுடன் அவர் சிரித்துவிட்டார். ‘இது ஒரு பெரிய விஷயமே இல்லை; சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

‘இலங்கேஸ்வரன்’ படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலெல்லாம், நான் அவரிடம் கேட்கும் கேள்வி ‘எப்பொழுது ராஜகுமாரி அம்மாவைப் பார்ப்பது?’ என்பது தான். படப்பிடிப்பின் கடைசிநாள் வந்தது.

‘இன்று அம்மாவைப் பார்க்கலாம்’ என்றார்.

எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஷூட்டிங் முடிந்து மேக்கப்பையெல்லாம் கலைத்து விட்டு, என்னுடைய காரில் எழும்பூரில் உள்ள ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் உட்காரச் சொன்னார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் மேல் தளத்திலிருந்து கீழே வருவதற்காக சுழல் மாடிப் படிக்கட்டுகள் இருந்தன.

ராஜகுமாரி அம்மா இப்பொழுது எப்படி இருப்பார்? என்கிற கற்பனையில் நான் ஆவலோடு உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக ஒரு அம்மா மாடிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கி வந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.

‘என்ன தம்பி, எப்படி இருக்கிறாய்?’ என்றார்.

நான் ‘நன்றாக இருக்கிறேன் அம்மா’ என்றேன்.

பதிலுக்கு நானும் நலம் விசாரித்தேன். ‘எனக்கென்ன தம்பி! என்னை ராமண்ணா தம்பி நன்றாகவே வைத்திருக்கிறது’ என்றார்.

நான் அன்று அவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வயது 63. என்னால் அவரை சிறிதுகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கிராமத்தில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியை போல மிகவும் சாதாரணமாக இருந்தார். நான் அவரிடம் ஆசி வாங்கினேன்.

பிறகு ராஜகுமாரி அம்மா என்னிடம் பேசினார். ‘உன்னுடைய முதல் படத்தை நான் பார்த்தேன் தம்பி’ என்றார்.

‘அப்படியாம்மா?’ என்று கேட்டேன்.

‘நான் படத்தைப் பார்த்து விட்டு ராமண்ணா தம்பியிடம் “இந்த பையன் கணேசன் மாதிரி இருக்கிறான். நன்றாக நடிக்கிறான்” என்று சொன்னேன் தம்பி’ என்றார்.

கூண்டுக்கிளி படத்தில் சிவாஜி அண்ணனை நடிக்க வைத்த குடும்பத்தில் உள்ளவர்களின் வாயால் நான் பார்ப்பதற்கு சிவாஜி அண்ணன் மாதிரி இருக்கிறேன் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

சாண்டோ சின்னப்பதேவர், குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தது, தயாரிப்பாளர் பூர்ண சுந்தர்ராவ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆரம்பகால படங்களின் செங்கல்பட்டு விநியோகத்தை வாங்க வந்தது போன்ற பழைய கால விஷயங்களையெல்லாம் என்னிடம் கூறினார்.

பிறகு என்னைப் பார்த்து, ‘ஏன் தம்பி, என்னைப் பார்க்க அவ்வளவு முயற்சி செய்தாய்? என் மீது ஏன் உனக்கு அவ்வளவு பிரியம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றார்.

‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது, உங்களுடைய படங்களைப் பார்த்தவர்கள், உங்களை ஒருநாளாவது பார்த்துப் பேச வேண்டும் என்பதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் பார்க்க முடியாத உங்களை, நான் பார்த்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, உங்களை எளிதாகப் பார்த்துவிடலாம் என்று நம்பியிருந்தேன். நீங்கள் யாரையும் பார்ப்பதில்லை. எந்த விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. சமீபத்தில் ராமண்ணா சார் என்னை அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தபோது, உங்களைப் பார்க்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்தேன். அதனால் தான் உங்களைப் பார்க்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது’ என்றேன்.

சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு விட்டு விடைபெற்றேன்.

இந்த இனிப்பான செய்தியை, டி.ஆர்.ராஜகுமாரியின் உண்மையான ரசிகர்களிடம் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, யாரிடம் முதலில் சொல்லுவது என்று யோசனை செய்தேன். அவர்களில் யாருமே அன்று உயிருடன் இல்லை. அதனால் நான் அடைந்த வெற்றியையும் மகிழ்ச்சியையும், நானே உள்ளூர கொண்டாடிக் கொண்டேன்.

சில ஆண்டுகள் கழித்து ராமண்ணா சார் வீட்டுத் திருமணம், விஜயா ஷேஷ மகாலில் நடைபெற்றது. நான் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 73 வயது இருக்கும்.

சினிமா வாய்ப்பு அவரது வீடுதேடி வந்தது. ராஜாயீ என்பவர் டி.ஆர்.ராஜகுமாரி ஆனார். அவர் வாய்ப்பு தேடி எந்த படக் கம்பெனியும் ஏறி இறங்கவில்லை. நாடகங்களில் நடிக்கவில்லை. எந்தவித அவமானமும் எங்கும் அடையவில்லை. திருமணம் தான் அவரைத் தேடி வரவில்லை. ஆனால் செல்வமும், செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது.

ஏழு வயது மூத்தவரான எம்.ஜி.ஆர். கூட, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை மரியாதையின் காரணமாக அக்கா என்றுதான் கடைசி வரை அழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்கும்பொழுது, 24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் ராஜகுமாரி அம்மா அவரைத் தொடர்பு கொண்டாலும் எம்.ஜி.ஆர். பேசுவார். அந்த அளவுக்கு செல்வாக்குடன் கடைசி வரை வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த சமயம், ஒரு நாள் இரவு 10 மணிக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்தார், டி.ஆர்.ராஜகுமாரி. அப்போது எம்.ஜி.ஆர். மாம்பலத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அதனால் உதவியாளர் தான் போனை எடுத்தார். வழக்கம் போல் எம்.ஜி.ஆர். தான் போனை எடுப்பார் என்று எண்ணிய டி.ஆர்.ராஜகுமாரி, வேறு ஒருவரது குரல் ஒலித்ததும், ‘ராமச்சந்திரன் தம்பி இருக்கிறாரா?’ என்று கேட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி ஒருவர் அழைப்பதைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த அந்த உதவியாளர், ‘நீங்கள் யாரம்மா?’ என்று கேட்க, ‘தம்பி இல்லையா?’ என்றிருக்கிறார் டி.ஆர்.ராஜகுமாரி.

அதற்கு உதவியாளர், ‘முதல்-அமைச்சர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவர் வந்ததும் சொல்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

‘அப்படியாப்பா? ராமச்சந்திரன் தம்பி வந்ததும், ராஜகுமாரி அக்கா போன் செய்ததாக மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறி போனை வைத்து விட்டார்.

எம்.ஜி.ஆர். இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்ததும், உதவியாளர் மூலம் டி.ஆர்.ராஜகுமாரி போன் செய்ததை அறிந்து, உடனடியாக அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

‘என்ன அக்கா! இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள்? எதுவும் முக்கியமான விஷயமா? பிரச்சினையா?’ என்று கேட்டிருக்கிறார்.

‘தம்பி! நான் இப்பொழுது குடியிருக்கும் என்னுடைய வீட்டை, தம்பி ராமண்ணாவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு பெரிய தொகைக்கு அடமானம் வைத்திருந்தேன். அந்த தொகைக்கு சில மாதங்களாக சரியாக வட்டி கூட கட்ட முடியவில்லை. என்னுடைய வீடு என்னை விட்டு போய் விடும் போல் தெரிகிறது. பெரிதும் மனக்கவலையாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவிற்கு வரவில்லை. அதனால் தான் தம்பி உனக்குப் போன் செய்தேன்’ என்று டி.ஆர்.ராஜகுமாரி வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அதற்கு எம்.ஜி.ஆர். ‘அக்கா! அந்த வீடு எப்போதும் உங்களிடம் தான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பு. இப்போது நிம்மதியாகப் போய் தூங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் காலை 6 மணிக்கு பணம் கொடுத்தவருக்கு போன் செய்து, சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை 9 மணிக்கு ராமாபுரம் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வரமுடியுமா? வேறு எதுவும் உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறதா? அப்படி வருவதாக இருந்தால், டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானப் பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர். அதிக செல்வாக்கு உள்ளவர். சமூக அங்கீகாரமும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்டவரான அவர், எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு ராமாபுரத்தில் இருந்தார். இருவரும் பேசியபடியே காலை உணவை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர் புறப்படும் நேரத்தில் தொழிலதிபர், தன்னிடம் இருந்த பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., வாசல் வரை வந்து தொழிலதிபரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் பண விஷயம் பற்றி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்தத் தொழில் அதிபரின் பிரச்சினைகளும் தேவைகளும் எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும்.

அன்று காலை தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியில் ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்று பத்திரத்தை அவருடைய கையாலேயே கொடுத்திருக்கிறார்.

மூன்று மாதங்கள் சென்றபின், அதே தொழிலதிபரை காலை உணவிற்காக மீண்டும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அவரும் வந்தார். முன்பு போல் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். இந்த முறை தொழிலதிபர் திரும்பிப் போகும் பொழுது, அவருடைய பிரச்சினைகளையும், தேவைகளையும், முழுமையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எம்.ஜி.ஆர். தீர்த்து வைத்தார். அந்த உதவி, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானத் தொகையை விட பலமடங்கு லாபத்தை அந்த தொழிலதிபருக்கு கொடுத்தது.

இந்த விஷயத்தில் பயன் அடைந்தவர்கள், ராஜகுமாரி அம்மா மற்றும் தொழிலதிபர் மட்டுமல்ல.. எம்.ஜி.ஆர். அனுமதி அளித்து, தொழிலதிபருக்கு கொடுத்த திட்டத்தால் தமிழக மக்களும் தான்.

தன்னுடைய தம்பி ராமண்ணாவின் பிறப்பையும் இறப்பையும் பார்த்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. தம்பி பல திருமணங்கள் செய்யும்பொழுது, மறுப்பேதும் சொல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார். தான் திருமணம் முடிக்காமல் இருக்கும்பொழுது, தம்பி மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறானே என்று ஒருநாள்கூட ராஜகுமாரி அம்மா எண்ணியதில்லை. ராமண்ணாவின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும், அவருக்கு உதவியாக இருந்து கைதூக்கி விட்டவர் அவர்.

ராஜகுமாரி அம்மா 1922-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தஞ்சையில் பிறந்தார். 77 வயது வரை வாழ்ந்து, 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்குச் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.

இப்பொழுதெல்லாம் ராஜகுமாரி அம்மாவின் படங்கள் டி.வி.யில் வரும்பொழுது பார்த்து மன நிறைவு அடைவேன். அந்த நேரத்தில் அவருடைய கடந்தகால வாழ்க்கையும், அவருடைய குணமும், தியாகமும் என்னுடைய எண்ண அலைகளில் ஓடும்.

-தொடரும்.

கற்பனை பலித்தது

முதன்முதலாக நான், டி.ஆர்.ராஜகுமாரியை பார்த்த பொழுது அன்னை தெரசா கட்டியிருப்பதைப் போல, வெள்ளைப்புடவையில், நீலக்கலரில் பாடர் போட்ட சேலையை அவர் கட்டியிருந்தார். நாட்டிற்காகவும், ஊருக்காகவும், மதத்திற்காகவும், மொழிக்காகவும் தியாகம் செய்த தியாகிகளைப் போல், தன்னுடைய குடும்பத்திற்காக தன்னைத் தியாகம் செய்த தியாகி ராஜகுமாரி என்று பல பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நான் ராஜகுமாரியை கற்பனை செய்யும் போதெல்லாம், அன்னை தெரசாவின் உடையில் கற்பனை செய்து பார்ப்பேன்.

நான் கற்பனை செய்த மாதிரி அதே நிறமுள்ள புடவையை, அவர் கட்டிக்கொண்டு வந்தது எனக்கு வியப்பை அளித்தது. அளவிட முடியாத ஆர்வமும், அன்பும் ஒருவர் மீது நமக்கு இருக்குமானால், நாம் விரும்புகிறபடி, கற்பனை செய்கின்ற உருவத்தில் அவரை முதன் முதலில் நாம் சந்திப்போம். அவர்களை அப்படி சந்திக்க வைக்கின்ற சக்தி நம்முடைய ஆழ்மனதிற்கு உண்டு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதைத்தான் ‘பாஸிட்டிவ் எனர்ஜி’ என்று கூறுகிறார்கள்.

Next Story