சினிமா செய்திகள்

பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு + "||" + The new successor of the Jesudas family playback singing

பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு

பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் பேத்தி அமேதா மலையாள சினிமாவில் பாடி, தனது இசைக் குரலை பதிவு செய்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
அமேதா, கானகந்தர்வன் ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பின்னணி பாடகியாவார். அவரது தந்தை அகஸ்டின் ஜோசப் 1950-ம் ஆண்டு நல்லதங்காள் சினிமாவில் பாடினார். அந்த படத்திற்கு இசை அமைத்தவர், பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி. 1962-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளரின் விதி தந்த விளக்கு என்ற சினிமாவில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். 25 வருடங்கள் கழித்து 1987-ல் ‘இடநாழியில் ஒரு காலோச்ச’ என்ற படத்தில் அவரது மகன் விஜய் ஜேசுதாஸ் பாடினார்.

2013-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி, மரண மடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விஜய் ஜேசுதாசின் மகள் அமேதாவையும் தனது இசையில் பாடவைத்திருக்கிறார். சியாமராகம் என்ற அந்த சினிமா விரைவில் வெளிவர இருக்கிறது. சென்னையில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டபோது அமேதாவுக்கு நான்கு வயது. பேத்தியுடன் சேர்ந்து தாத்தாவான கே.ஜே.ஜேசுதாசும் பாடியிருக்கிறார். அமேதா இப்போது சென்னையில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். இசையும், பியானோவும் அமேதா கற்றுக்கொண்டிருக்கிறாள். அவரது குரு பின்னி கிருஷ்ணகுமார்.

சியாமராகம் சினிமாவில், கே.ஜே.ஜேசுதாசின் மூன்று தலைமுறையும் குரலில் இணைவது குறிப்பிடத்தக்க அம்சம். அதன் கதாநாயகி சிறுமியாக இருக்கும்போது இசை கற்கிறாள். அந்த பயிற்சிக்கான பாடலைத்தான் அமேதா பாடுகிறாள். அவளுக்கு குருவாக சினிமாவில் பாடலை பதிவு செய்திருப்பது கே.ஜே.ஜேசுதாஸ். அதே படத்தில் இ்ன்னொரு பாடலை விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

மலையமாருத ராகத்தில் ‘ராமா ரவிகுல ஸோமா..’ என்று தொடங்கும் கீர்த்தனையை அமேதா பாடியிருக்கிறாள். இன்னொரு ராகத்தில் அமைந்த பாடலை குருவாகவும், சீடராகவும் இருந்து இரு குரலில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். இந்த சினிமா இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்கியிருப்பவர் சேது இய்யாலி.

கே.ஜே.ஜேசுதாஸ் சொல்கிறார்:

“எங்கள் நான்காம் தலைமுறை பின்னணி பாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. தட்சிணாமூர்த்தி சாமியின் அனுக்கிரகம் எங்கள் நான்கு பேருக்கும் கிடைத்தது, அதைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. எனது தந்தை மரணமடைந்த பின்பு, அந்த ஸ்தானத்தில்வைத்து நான் தட்சிணாமூர்த்தி சாமியை போற்றினேன். அப்போதே இந்த பாடலை பதிவு செய்ததால் அமேதாவுக்கும் அவருடனான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அமேதா பாட வரும்போது சாமி என்னிடம், ‘அவள் குழந்தை.. அதனால் அதிக சங்கதி ஒன்றும் கொடுக்கப்போவதில்லை’ என்றார். எத்தனையோ பேரை பாடவைத்த சாமியின் அனுபவ சிறப்பை அது எடுத்துக்காட்டுகிறது” 

ஆசிரியரின் தேர்வுகள்...