நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் வெளிநாடு செல்ல எதிர்ப்பு


நடிகை கடத்தல் வழக்கு  நடிகர் திலீப் வெளிநாடு செல்ல எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 5:06 PM GMT)

நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடிகர் திலீப் உள்பட மேலும் 12 பேர் கைதானார்கள். 

இந்த வழக்கில் 300 சாட்சிகளை விசாரித்து செல்போன் உரையாடல் உள்பட 400 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்  நடிகர் திலீப் டிசம்பர் 15–ந்தேதி முதல் ஜனவரி 30–ந்தேதி வரை ஜெர்மனியில் தனக்கு சினிமா படப்பிடிப்பு உள்ளதென்றும் எனவே ஜெர்மனி செல்ல தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

‘‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரணையை தாமதப்படுத்தும் செயலில் திலீப் தரப்பு இறங்கி உள்ளது. ஏற்கனவே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதம் செய்தனர். இதுபோல் தொடர்ச்சியாக தாமதம் செய்வது பாதிக்கப்பட்ட நடிகைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.  திலீப் வெளிநாடு செல்ல அனுமதி கேட்பது கூட விசாரணையை தாமதப்படுத்தும் செயல்தான். வெளிநாடு சென்றபிறகு சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது’’

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  ஆனால் பாஸ் போர்ட்டை திலீப்பிடம் வழங்க கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story