சினிமா செய்திகள்

ஷகீலாவின் கவர்ச்சி வாழ்க்கைக்குள் இளம் நடிகை + "||" + Young actress in Shakeela glamorous life

ஷகீலாவின் கவர்ச்சி வாழ்க்கைக்குள் இளம் நடிகை

ஷகீலாவின் கவர்ச்சி வாழ்க்கைக்குள் இளம் நடிகை
துணிச்சலான வேடங்களில் நடிப்பதற்குப் பெயர் பெற்றவர், பாலிவுட் நடிகை ரிச்சா சதா. அவர் தற்போது நடித்துவரும் பாத்திரமும் அதிரடியானதுதான். பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னையை சேர்ந்த நடிகை ஷகீலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ‘ஏ’கப்பட்ட படங்களில் நடித்தவர். ஷகீலாவின் நிஜ வாழ்க்கை வித்தியாசமானது. இவர் குண்டான உடல்வாகு கொண்டவர். பள்ளியில் படிக்கும்போதே இவரை ஒரு ஆசிரியர் அடிக்கடி தண்டனை என்ற பெயரில் குனிந்து, நிமிரும்படி செய்திருக்கிறார். அதனால் கிடைத்த கசப்பான அனுபவத்தால் பின்பு இவர், பள்ளியில் ஒரு பெண் ரவுடி போல் வலம் வந்தவர். இவரது வாழ்க்கையில் காதலும், கண்ணீரும் உண்டு. பின்பு சினிமாவிற்கு வந்த ஷகீலா செக்ஸ் கலந்த படங்களில் கொடிகட்டி பறந்தார். ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகர் மம்முட்டி நடித்த படங்களையே இவரது படம் வசூலில் தோற்கடித்த சம்பவங்களும் உண்டு. இப்படிப்பட்ட ஷகீலாவின் வாழ்க்கை சினிமாவாகிக்கொண்டிருக்கிறது. அதில் ஷகீலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடித்துக்கொண்டிருக்கிறார்.


ரிச்சா சதாவின் பேட்டி:

ஷகீலாவாக நடிக்க நீங்கள் உங்களை எப்படித் தயார்ப்படுத்திக் கொண்டீர்கள்?

ஷகீலாவின் சொந்த வாழ்க்கை பற்றி அறிவதற்காக நான் பலமுறை அவரைச் சந்தித்தேன். அவர் எப்படிப்பட்டவர், எந்த மாதிரி வாழ்பவர் எனத் தெரிந்துகொண்டேன். சினிமாத் துறையில் பணிபுரிந்தபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் புரிந்துகொண்டேன். திரையில் ஷகீலாவாக நான் தோன்றுவதற்குத் தேவையான அனைத்தையும், இப்படத்தின் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் மற்றும் இதன் திரைக்கதை எழுத்தாளர், இணை இயக்குனர் ஆகியோர் அளித்தனர்.

ஷகீலா பிரபலமான நடிகை. அவராக நடிப்பதில் எது உங்களுக்குச் சவாலாக இருந்தது?

பள்ளி, கல்லூரிகளிலும், அறிவுஜீவி அமைப்புகளிலும் பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றிப் பேசும்போதெல்லாம் நம் மனதில் வரும் பெயர், ஷகீலா. ஒரு நட்சத்திரமாக அவர் கண்ட வளர்ச்சி, அதிலும் குறிப்பாக நான்கு தென்னிந்திய மாநிலங்களில் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் எனக்கு சுவாரசியமாகத் தோன்றியது. நான் யோசித்த ஒரே விஷயம், ஒரு வடஇந்தியப் பெண்ணான என்னால், தென்னிந்தியா தவிர்த்த பிற பகுதிக்கு ஷகீலா யார் என்று சரியாக வெளிப்படுத்த முடியுமா என்பதுதான்.

நீங்கள் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிப்பதற்குப் பெயர் பெற்றவர். எப்போதாவது, நாம் ஒரே மாதிரி நடிக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றியது உண்டா?

இல்லை. நான் ஒரே மாதிரி நடிப்பதாக நினைக்கவில்லை. என்னை வருத்தப்படுத்துவது, இது போன்ற கேள்விகள்தான். காரணம், நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன் என்பதை கேள்வி கேட்பவர்கள் புரிந்துகொள்வதில்லை. நான் நடித்த ‘மாசான்’ போன்ற படங்களையும், எனது நடிப்புத் திறனையும் அவர்கள் கவனிப்பதில்லை.

ஷகீலா படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்தீர்கள். அங்கு உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்றீர்களா?

பெங்களூரு சென்றிருந் தபோது எனக்கு நேரமே கிடைக்கவில்லை. அங்கு நான் பரபரப்பாக இயங்கிக்கொண்டி ருந்தேன். வெளியே சென்று ஒரு காபி சாப்பிடவோ, ஒரு பூங்காவுக்குச் செல்லவோ கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. தவிர, படப்பிடிப்பின்போது வழங்கப்பட்ட உணவால் எனக்கும் இயக்குனருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் உற்சாகமூட்டும் விஷயம் என்னவென்றால், நாங்கள் பெங்களூரு நகரம் முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். பெங்களூரு நகரின் சிறப்பை என்னால் உணர முடிந்தது. அதற்கு என்னுடைய சினிமா குழுவினருக்கு நன்றி சொல்லவேண்டும்.

நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?

நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது, ‘அபி தோ பார்ட்டி ஷுரு ஹுய் ஹாய்’ என்ற படத்தில் நடித்த ‘சாப்டி’ என்ற பாத்திரம். அது ஒரு வித்தியாசமான, வேடிக்கையான கதாபாத்திரம். அதில் முற்றிலும் மாறுபட்ட ரிச்சா சதாவை ரசிகர்கள் சந்திப்பார்கள். நகைச்சுவையும் கிண்டலும் கலந்த அப்படம் விரைவில் வெளியாகப் போகிறது.

நீங்கள் ஒரே நேரத்தில் திரைப்படங்களிலும் வெப் சீரிசிலும் நடிக்கிறீர்கள். எதில் நடிப்பது உங்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறது?

உண்மையைச் சொல்வதென்றால், எனக்கு நடிப்பதே பிடித்திருக்கிறது. அது ஒரு மேடையா, சினிமாவா, வெப் சீரிஸா என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அந்தந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிற வரை எனக்கு மகிழ்ச்சிதான். அதேநேரம், நான் நடிக்கும் ‘இன்சைடு எட்ஜ்’ என்ற வெப் தொடர் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. அதுதான் இந்தியாவின் முதல் அசல் வெப் சீரிஸ், அமேசான் பிரைமில் உலகெங்கும் அதிகம் பார்க்கப்பட்டது. அதுவும் எனக்கு பெருமை தருகிறது.

ஷகீலாவின் கவர்ச்சி வாழ்க்கைக்குள் இளம் நடிகை ரிச்சா சதா எந்த அளவுக்கு பொருந்துவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!