படங்களை திரைக்கு கொண்டு வருவதில் 2 படக்குழுவினர் இடையே மோதல் நடிகர் நகுல் குமுறல்


படங்களை திரைக்கு கொண்டு வருவதில் 2 படக்குழுவினர் இடையே மோதல் நடிகர் நகுல் குமுறல்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:24 PM GMT (Updated: 12 Nov 2018 10:24 PM GMT)

படங்களை திரைக்கு கொண்டு வருவதில் 2 படக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. “தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளை மீறி, ‘திமிரு புடிச்சவன்’ படத்தை வெளியிடுவதற்கு நடிகர் நகுல் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை,

நகுல்-அன்ஷால் முஞ்சால் ஜோடியாக நடித்த படம், ‘செய்’. ராஜ்பாபு டைரக்டு செய்துள்ள இந்த படத்தை மன்னு தயாரித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, படக் குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது, படத்தின் கதாநாயகன் நகுல், குமுறலுடன் நிருபர்கள் மத்தியில் பேசியதாவது:-

“செய் படத்தை கடந்த மார்ச் மாதமே திரைக்கு கொண்டுவர முதலில் திட்டமிடப்பட்டது. அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போடப்பட்டது. நவம்பர் 16-ந் தேதி படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு, 150 தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எங்கள் படத்துடன் ‘காற்றின் மொழி’, ‘உத்தரவு மகாராஜா’, ‘சித்திரம் பேசுதடி-2’ ஆகிய படங்களும் வெளிவருவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி பெறாமலே வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘செய்’ படத்துக்காக ஒப்பந்தம் செய்திருந்த 150 தியேட்டர்களுக்கு பதில் 70 அல்லது 80 தியேட்டர்களே ஒதுக்கப்படும் என்றும், ‘திமிரு புடிச்சவன்’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். சிறு முதலீட்டு படங்கள் வெளிவருவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘ஒழுங்கு முறை குழு’வை அமைத்து, அதன்படி படங்கள் திரைக்கு கொண்டுவரப்படுகின்றன. அந்த குழுவின் விதிமுறைகளை மீறி, ‘திமிரு புடிச்சவன்’ படம் வெளிவருகிறது. விதிமுறைகளை மீறி படத்தை வெளியிடுவது என்ன நியாயம்? அப்படியானால் தயாரிப்பாளர்கள் சங்கம் என்று ஒரு அமைப்பு எதற்காக? அது அமைத்துள்ள ஒழுங்குமுறை குழு எதற்காக?

என்னைப் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும், முதன்முதலாக படம் தயாரிக்கும் பட அதிபர்களுக்கும் இந்த விதிமுறை மீறல் பாதகத்தை ஏற்படுத்தும். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு முடிவு கட்ட வேண்டும்”. இவ்வாறு நகுல் பேசினார்.

Next Story