கஜா புயல் பாதிப்பு நிவாரணம் - அஜித் ரூ.15 லட்சம்; விஷால், கிராமத்தை தத்தெடுத்தார்


கஜா புயல் பாதிப்பு நிவாரணம் - அஜித் ரூ.15 லட்சம்; விஷால், கிராமத்தை தத்தெடுத்தார்
x
தினத்தந்தி 25 Nov 2018 11:30 PM GMT (Updated: 25 Nov 2018 9:54 PM GMT)

நடிகர் அஜித், கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்கினார். மேலும் நடிகர் விஷால் கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் இயக்க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். நடிகை கஸ்தூரி நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்தார். நடிகர்கள் அருண் விஜய், விமல், ஆரி ஆகியோர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்கினார்கள். நடிகர் அஜித்குமார் முதல்-அமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் புயலால் வீடு இழந்தவர்கள் 50 பேருக்கு தலா ரூ.1 லட்சம் செலவில் சொந்த வீடுகள் கட்டி கொடுப்பதாக தெரிவித்தார்.

நடிகர் விஷால், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக’ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து இந்த நிவாரண உதவிகளை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story