கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன.
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன. பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம், டூ லெட் ஆகிய 4 படங்கள் திரையிடப்பட்டன. கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் மற்றும் கனடாவில் இருந்து ரூபா ஆகிய மேலும் 2 படங்களும் கலந்து கொண்டன.
அனைத்து படங்களுக்குமே பாராட்டுகள் கிடைத்தன. டூ லெட் படம் 3 போட்டி பிரிவுகளில் கலந்து கொண்டது. இதில் சர்வதேச படங்கள் போட்டி பிரிவில் ‘டூ லெட்’ படத்துக்கு சிறப்பு விருது கிடைத்து உள்ளது. இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் டைரக்டு செய்து இருந்தார்.
சென்னையில் 2007 முதல் மென்பொருள் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு கஷ்டமாகி விட்டது என்பதையும் இதனால் நடுத்தர மக்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் டூ லெட் படம் திரையிடப்பட்டு 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.