ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்


ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:33 AM GMT (Updated: 1 Dec 2018 11:33 AM GMT)

என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமீர்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக பார்க்கப்பட்டது. அந்தப் படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு கதாபாரத்தை கச்சிதமாக செய்திருந்தார். அவரது பெரிய காதுகளும், கண்களும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது. நடிப்பிலும் அந்தப் படம் அமீர்கானை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. இந்திய தேசத்திற்காக தான் பெற்றுத் தர முடியாமல் போன தங்கப் பதக்கத்தை, தன்னுடைய மகளின் மூலமாக பெற்றுத்தருவதற்கு போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பு பேசப்பட்டது. ‘தங்கல்’ திரைப்படத்திற்கு முந்தைய படம் வரை சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் வலம் வந்த அமீர்கான், இந்தப் படத்தில் வயதான தந்தை தோற்றத்திற்கான தொப்பை வளர்த்து நடித்திருந்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தங்கல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த 3 மாத காலத்தில் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் மீண்டும் அமீர்கான் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட சில மொழிகளிலும் ‘தங்கல்’ படம் வெளியானது. இந்தப் படமும் சில நூறு கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது.

‘பி.கே.’, ‘தங்கல்’ படங்களை அடுத்த அமீர்கான் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கனவுகள் நிறைந்த ஒரு மாணவி, தன் பாட்டுத் திறமையை வெளிப்படுத்த போராடுவதைச் சொல்வதாக அமைந்தது. படம் முழுவதும் சிறுமியைச் சுற்றியே அமைந்திருக்கும். இந்தப் படத்தில் சிறுமியின் கனவை நனவாக்க உதவும் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். துணை கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.

இப்படி கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெற்றியை ருசித்து வந்த அமீர்கானை, கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி, தீபாவளியை ஒட்டி வெளியான ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படம் கொஞ்சம் தடுமாற வைத்திருக்கிறது.

இந்தப் படத்தை இயக்கியவர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இவர் இதற்கு முன்பு அமீர்கான் நடித்த ‘தூம்-3’ படத்தை இயக்கியவர். அதோடு ‘தூம்’, ‘தூம்-2’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதோடு, திரைக்கதை அமைத்தவரும் இவர்தான். படத்தின் தயாரிப்பாளர் ‘தூம்’ வரிசை திரைப்படங்கள் மட்டுமின்றி, பல வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆதித்ய சோப்ரா. பெரிய தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதையும் தாண்டி ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்தனர். இதுவெல்லாம் சேர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் டிரைலரை சுமார் 8 கோடி பேர் பார்த்திருந்தனர். எனவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதாகவே பாலிவுட் மட்டுமின்றி, இந்திய சினிமா உலகம் முழுவதும் எதிர்பார்த்தது. அதைக் கருத்தில் கொண்டு தான் இந்தப் படத்தை இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.

‘பாகுபலி’ திரைப்படத்தைப் போல, இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியிருப்பதாக திரைப்படக் குழு சொல்லி வந்தது. ஆனால் படத்தின் கருவை அழுத்தமாக வைக்கத் தவறியதால், படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதனால் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். படத்தின் கதைக் கரு பார்வையாளர்களைக் கவரவில்லை என்றாலும், படத்தில் அமிதாப்பச்சன், அமீர்கான், கதாநாயகியாக நடித்த பாத்திமா சனா சாய்க் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமீர்கான் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் தோல்வி பற்றி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். ஆனால் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் படத்தை பாராட்டினாலும், அவர்கள் வெகு சிலரே. பெரும்பாலான ரசிகர்களால் இந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விட்டது என்பதை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு வரும் மக்கள், அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வருகிறார்கள். அப்படி வந்தவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த முறை நான் என்னை நம்பி வந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்த தவறிவிட்டேன். அதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

தான் நடித்த படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டு, அதைக் காண வந்த ரசிகர்களின் மனநிலையை மதித்து பேசுவதும், தோல்வி படத்தை அளித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதும் எல்லா நடிகர்களிடமும் இல்லாத ஒரு தனி குணம். அது அமீர்கானிடம் இருக்கிறது. அதுவே அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

Next Story