குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 2 Dec 2018 6:10 AM GMT (Updated: 2 Dec 2018 6:10 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, சிம்புவுக்கும், திரிஷாவுக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருகிறது என்கிறார்களே...அது என்ன ஒற்றுமை? (ஏ.தாமரை செல்வன், சென்னை–7)

சிம்பு, திரிஷா ஆகிய இருவரின் திருமணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ‘‘போதும்...போதும்...எனக்கு திருமணமே வேண்டாம்...இப்படியே இருந்து விட்டு போகிறேன்’’ என்று இருவரும் சொல்கிறார்களாம். திருமண வி‌ஷயத்தில் அந்த அளவுக்கு இரண்டு பேரும் வெறுத்துப் போய்விட்டார்களாம்!

***

ரம்யா கிருஷ்ணன் விளம்பர படத்தில் நடிக்க எவ்வளவு வாங்குகிறார்? (கே.பாலாஜி, ஸ்ரீரங்கம்)

திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர் எவ்வளவு வாங்குகிறாரோ, அந்த தொகையையே விளம்பர படங்களுக்கும் கேட்கிறார்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகில் அதிக படங்களை இயக்கிய டைரக்டர் யார்? அவரை பற்றி மேலும் சில விவரங்களை கொடுப்பீர்களா? (பி.காமாட்சி, தூத்துக்குடி)

டைரக்டர் ராம.நாராயணன்! நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் அவ்வப்போது புதிய திருப்பங்களை ஏற்படுத்திய டைரக்டரும் அவர்தான்!

***

விளையாட்டு வீராங்கனை குறிப்பாக கூடைப்பந்தாட்ட வீராங்கனை வேடம் எந்த நடிகைக்கு பொருந்தும்? (சு.சத்யசீலன், நாமகிரிப்பேட்டை–2)

சாய்பல்லவிக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வீராங்கனை வேடம் பொருத்தமாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து!

***

குருவியாரே, திரிஷாவும், ஸ்ரீதிவ்யாவும் ஒரே மாதிரியான முக தோற்றத்தில் இருக்கிறார்களே...இருவரும் உறவினர்களா? (ஆர்.ஜெயந்த், விருத்தாசலம்)

திரிஷாவின் பூர்வீகம், கேரளா. ஸ்ரீதிவ்யா, ஆந்திராவை சேர்ந்தவர். இரண்டு பேருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. திரிஷா ஒல்லியானவர். உயரமானவர். ஸ்ரீதிவ்யா ஒல்லியாக இருந்தாலும், குள்ளமானவர்!

***

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அர்ச்சனாவும், ‘மண்வாசனை’ ரேவதியும் இணைந்து நடித்து இருக்கிறார்களா? (கே.தமிழரசன், பேராவூரணி)

இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த ‘அழியாத கோலங்கள்–2’ படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் வெற்றிக்கு காரணம் அவருடைய நடிப்பா, உடல் அமைப்பா? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

நடிப்பு பாதி; உடல் அமைப்பு பாதி! இரண்டுடன் அவருடைய வசன உச்சரிப்பும் சேர்ந்து சிரிக்க வைக்கின்றன!

***

மறைந்த நடிகை மனோரமாவின் இடத்தை வேறு ஒரு நடிகையால் நிரப்ப முடியுமா? (சை.ஞானமுத்து, சிதம்பரம்)

கோவை சரளா கொஞ்சம் முயற்சிக்கிறார். என்றாலும், அவர் ஆறுதல் பரிசு போன்றவர்தான்! தாயாக, தாரமாக, தமக்கையாக, தங்கையாக பல வேடங்களில் மனோரமா மனசெல்லாம் நிறைந்தது போல், இன்னொரு நடிகையை நினைத்து பார்க்க முடியவில்லை!

***

குருவியாரே, விஷால், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா ஆகிய 6 பேர்களும் இணைந்து நடிப்பார்களா? (எஸ்.டில்லி பாபு, அரக்கோணம்)

6 பேருக்கும் பொருந்துகிற மாதிரி கதை இருக்கிறதா? அப்படி ஒரு கதை கிடைத்தால், நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்திக் கொள்வார்களாம்!

***

‘நாட்டாமை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? (வே.கவுதம், முகப்பேர்)

அதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஈடுபடவில்லை!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ், எந்த கதாநாயகிக்கு போட்டியாக இருக்கிறார்? (ராம், போரூர்)

கீர்த்தி சுரேசை ஒரே ஒரு நடிகை போட்டியாக நினைக்கிறாராம். இரண்டு பேரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி, பொறாமையாக மாறியிருக்கிறதாம்!

***

சில கதாநாயகர்களை விட குணச்சித்ர நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மையா? (பி.சரவணன், ராசிபுரம்)

வெளியே தெரியாத ரகசியம், அது! ‘பிஸி’யாக இருக்கும் குணச்சித்ர நடிகர்கள் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து விடுகிறார்கள். கதாநாயகன், 70 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து ஒரு படத்தை முடிக்கிறார் என்றால் குணச்சித்ர நடிகர்கள் அந்த 70 நாட்களில், குறைந்தபட்சம் 7 படங்களில் நடித்து விடுகிறார்கள்!

***

குருவியாரே, நடிகர் சிவகுமார் நடித்த 100–வது படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (கே.ஸ்ரீதர்ராஜன், மேட்டூர்)

சிவகுமார் நடித்த 100–வது படம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி.’ அந்த படத்தின் டைரக்டர்கள், தேவராஜ்–மோகன்!

***

திரையுலகம் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக ஒரு பட விழாவில் நடிகர் ஆரி பேசியிருக்கிறாரே...? (ஏ.எம்.சுரேஷ்காந்த், கம்பம்)

அவர் உண்மையைத்தான் பேசியிருக்கிறார். படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைகிற மாதிரி தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகி உள்ளன. அவை பிரபலமானால், யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள்!

***

குருவியாரே, அனுஷ்காவுக்கு மணமகன் வேட்டை தீவிரமாக நடக்கிறதாமே...மாப்பிள்ளைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? (டி.தங்கராஜ், கொண்டலாம்பட்டி)

தோற்றம் ஒல்லியாக உயரமாக இருக்க வேண்டுமாம். குறைந்தபட்ச கல்லூரி படிப்பும், வசதியான வீடு–வாசல், சொத்து–சுகங்களும் இருந்தால் போதுமாம்! (பின் குறிப்பு: பொறுமையான சுபாவம், அவசியம்)

***

குஷ்பு நடித்த படங்களில், மிக அதிக தொகை வசூல் செய்த படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார், தயாரிப்பாளர் யார்? (எம்.ஜெகநாதன், குளித்தலை)

படம்: சின்ன தம்பி, டைரக்டர்: பி.வாசு, தயாரிப்பாளர்: கே.பாலு!

***

குருவியாரே, சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே.’ படத்தில் அவருக்கு ஜோடி யார்? (ஏ.தமீம் அன்சாரி, உளுந்தூர் பேட்டை)

அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!

***

சாயிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவியவில்லையே...என்ன காரணம்? (எம்.லீலாவதி, செட்டி குறிச்சி)

சாயிஷாவின் மும்பை வாசனையுடன் கூடிய முக தோற்றம் சில கதாநாயகர்களுக்கே பிடிக்கிறதாம். நிறைய கதாநாயகர்களுக்கு பிடிக்கவில்லை போலும்!

***

குருவியாரே, வேறு எந்த கதாநாயகியிடமும் இல்லாத நற்குணங்கள் நயன்தாராவிடம் மட்டுமே உள்ளதாமே...அது என்னென்ன? (ஜே.ஸ்டீபன்ராஜ், நாகர்கோவில்)

வயதான முதியவர்களை மதிப்பதுடன் அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது; தன்னிடம் வேலை செய்பவர்களை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிற இரக்க சுபாவம் ஆகிய 2 பண்புகளும் வேறு எந்த கதாநாயகியிடமும் இல்லாத அளவுக்கு நயன்தாராவிடம் அதிகமாக இருக்கிறதாம்!

***

ரகுல் ப்ரீத்சின்கின் பலம்–பலவீனம் என்ன? (வி.ஆனந்த், கடலூர்)

பலம், அவருடைய உயரம். பலவீனம், வசீகரிக்காத முகம்!

***

Next Story