அழகு ராணிக்கு ஆடையை குறைக்க விருப்பமில்லை..


அழகு ராணிக்கு ஆடையை குறைக்க விருப்பமில்லை..
x
தினத்தந்தி 2 Dec 2018 7:06 AM GMT (Updated: 2 Dec 2018 7:06 AM GMT)

சோனாக்‌ஷி சின்கா, இந்தி திரையுலக நட்சத்திர தம்பதியரான சத்ருகன் சின்கா - பூனம் சின்காவின் மகள். அந்த குடும்ப பாரம்பரியத்தில் குளிர்காயாமல், சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.

சோனாக்‌ஷி சின்கா, இந்தி திரையுலக நட்சத்திர தம்பதியரான சத்ருகன் சின்கா - பூனம் சின்காவின் மகள். அந்த குடும்ப பாரம்பரியத்தில் குளிர்காயாமல், சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது, ‘ஹேப்பி பிர் பாக் ஜாயேகி’ என்ற முழு நீள நகைச்சுவை திரைப்படம். அதில் ஹேப்பி என்ற நகைச்சுவை கதாநாயகியாக தன்னை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்தி திரை உலகில் அழகு ராணியாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்கா, தனது திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

‘ஹேப்பி..’யாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க சிரமப்பட்டீர்களா?

‘‘ஹேப்பி என்பது பஞ்சாபி பெண்ணின் பெயர். அங்கே நிறைய பெண்களுக்கு இந்த ஆங்கில பெயரை அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக சூட்டியிருக்கிறார்கள். நான் ஒரு மகிழ்ச்சியான பெண்தான். அந்த கதாபாத்திரமும் கிட்டத்தட்ட என்னைப்போலவே இருந்ததால் நடிப்பதற்கு எந்த சிரமமும் இல்லை. எனக்காகவே அமைக்கப்பட்ட கதாபாத்திரமாகவே தோன்றியது. அதனால் நடிப்பு இயல்பாகவும், எளிமையாகவும் இருந்தது..’’

நடிகையாக வேண்டும் என்று விரும்பித்தான் இந்த துறைக்கு வந்தீர்களா?

‘‘விருப்பம் இருந்தது. எனக்கு நடிகை ரேகாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அதனால் சிறுமியாக இருந்தபோதே வீட்டிற்குள்ளேயே அவரைப்போலவே நடித்து மகிழ்வேன். முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க வந்துவிட்டேன். ஏதாவதொரு வேலையை செய்துதானே ஆக வேண்டும். நடிப்பது நான் விரும்பிய வேலை.. அதனால் ரசித்து செய்கிறேன்..’’

அப்பா - அம்மா இருவரில் யாரிடம் நெருங்கி பழகுவீர்கள்?

‘‘அம்மாவிடம்தான்! நாங்கள் எல்லோருமே அம்மாவிடம்தான் அதிக நெருக்கமாக இருந்தோம். அப்பா வீட்டில் இருக்கும் நேரம் ரொம்ப குறைவு. அம்மாதான் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு எங்களை வளர்த்தார்’’

நீங்கள் நடிக்க விரும்பியதும் முதலில் அம்மா என்ன சொன்னார்?

‘‘நீ நடிகையாக வேண்டுமானால் முதலில் உடல் எடையை குறைக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகம் உன்னை திரும்பிப் பார்க்கும் என்றார். நான் உடல் எடை விஷயத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்துவிட்டேன். பிறகு சல்மான்கான் வாய்ப்பு கொடுத்தபோது அவசரமாக ‘தபாங்’ படத்திற்காக 30 கிலோ எடையை குறைக்க வேண்டியிருந்தது. நான் நடிகையாகி இருக்காவிட்டால் என் உடல் எடை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது”

நடிகை ரேகாவிடம் உங்கள் அம்மாவுக்கு பிடித்த விஷயம்?

‘‘ரேகாவின் நடிப்பு அம்மாவுக்கு பிடிக்கும். அவர் உடலை எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்கிறார் பார். நீயும் அப்படி இருந்தால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என்று என்னிடம் சொல்வார்..”

நீங்கள் நன்றாக பாடவும் செய்கிறீர்களே..?

“ஆமாம்! அதனால் பாட வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்தது. சினிமாவில் அதற்கு வாய்ப்பும் கிடைத்தது. பயன்படுத்திக்கொண்டேன். ஒருசில படங்களில் பாடி இருக்கிறேன். ரசிகர்களும் என் குரல் இனிமையை ஏற்றுக்கொண்டார்கள்’’

திரை உலகில் எத்தகைய மாற்றம் தேவை என்று கருதுகிறீர்கள்?

‘‘ஆண் - பெண் இருவரிடமும் சரிசமமாக வேலை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் சம்பளம் மட்டும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் தருகிறார்கள். இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் நடக்கும் விஷயம். இந்த நிலை மாற வேண்டும். அதேபோல் பெண்களுக்கு எல்லாதுறைகளிலும் சம உரிமை கொடுக்க வேண்டும். பாலியல் பாகுபாடு பார்க்காமல் சமமாக சம்பளம் தரவேண்டும்”

நீங்கள் உங்களுக்கென்று அமைத்துக்கொண்ட தனி பாணி எது?

‘‘அரைகுறை ஆடையுடன் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்லை’’

ஆடை விஷயத்தில் சோனாக்‌ஷி சின்கா அழுத்தமாகவே காணப்படுகிறார்!

Next Story