சீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0


சீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 5:51 PM GMT)

ரஜினிகாந்தின் 2.0 படத்தை சீனாவிலும் திரையிட முடிவு செய்துள்ளனர்.

ரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த படமும் இவ்வளவு அதிக செலவில் தயாரானது இல்லை. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டனர். 

படம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக பட நிறுவனமான லைகா அறிவித்தது. தற்போது வசூல் ரூ.500 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்ததால் இந்தியிலும் 2.0 வெளியாகி வட மாநிலங்களில் வரவேற்பை பெற்றது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வசூல் குவித்தது. பாகிஸ்தானிலும் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு முதலில் 20 தியேட்டர்களில் திரையிட்டனர். பின்னர் அந்த எண்ணிக்கை 75 திரையரங்குகளாக உயர்ந்தது. அங்கு 4 நாட்களில் ரூ.3.16 கோடி வசூலித்துள்ளது. 

இந்த நிலையில் சீனாவிலும் 2.0 படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்குள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனமான எச்.ஒய். மீடியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். 2.0 படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிடுகின்றனர். அடுத்த ஆண்டு மே மாதம் 10 ஆயிரம் சீன திரையரங்குகளில் 56 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. 

Next Story