வகீதா ரஹ்மான்: கவர்ச்சிக் கன்னியின் மலரும் நினைவுகள்


வகீதா ரஹ்மான்: கவர்ச்சிக் கன்னியின் மலரும் நினைவுகள்
x
தினத்தந்தி 30 Dec 2018 6:46 AM GMT (Updated: 30 Dec 2018 6:46 AM GMT)

இந்தி ரசிகர்களின் பழைய கனவுக் கன்னி, வகீதா ரஹ்மான். முந்தைய தலைமுறை ரசிகர்களை தனது உடல் அசைவில் கட்டிப்போட்டிருந்த இவர், இப்போதும் உற்சாகமாக வலம் வருகிறார்.

ந்தி ரசிகர்களின் பழைய கனவுக் கன்னி, வகீதா ரஹ்மான். முந்தைய தலைமுறை ரசிகர்களை தனது உடல் அசைவில் கட்டிப்போட்டிருந்த இவர், இப்போதும் உற்சாகமாக வலம் வருகிறார். சினிமா விழாக்களில் கலந்துகொள்கிறார். இன்றைய கவர்ச்சி நாயகிகளுக்கு, தான் அனுபவத்தில் உணர்ந்த வாழ்வியல் உண்மைகளையும் ஆலோசனைகளாக வழங்குகிறார். வகீதாவுடன் சுறுசுறுப்பான கலந்துரையாடல்:

நீங்கள் சமீபத்தில், திரைப்படத் தயாரிப்பாளரும், பழைய பட பிலிம் சுருள்களை சரிசெய்து மீட்பவருமான ஷிவேந்திர சிங் துங்கர்பூரின் அழைப்பின் பேரில் கொல்கத்தா சென்றிருந்தீர்கள். நீங்கள் நடித்த படம் எதுவும் திருத்தம் செய்து மீட்கப்பட வேண்டி யிருக்கிறதா?

நான் நடித்த ‘பியாசா’, ‘கைடு’ போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதிக்கப்பட்டால் நான் ரொம்பவும் வருத்தப்படுவேன். ‘பியாசா’, எனது உண்மையான இயல்பை வெளிப்படுத்தியது என்று சொல்லமுடியாது. அந்த படத்தில் நடித்த காலகட்டத்தில் நான் ஒரு புதுமுகம். ஏனோ அந்த படத்தில் தோன்றினேன். எனக்கு அதில் இரண்டொரு பாடல் காட்சிகள் இருந்தன. ஆனாலும் அதை நான் குரு தத்தின் படம் என்றுதான் சொல்வேன். ‘கைடு’ படத்தில் எனது நடனம் பேசப்பட்டது. அப்போதுதான் ரசிகர்களுக்கு, என்னால் நடனமும் ஆட முடியும் எனத் தெரிந்தது. ‘எல்லா தென்னிந்திய நடிகைகளும் நன்றாக நடனம் ஆடத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நீங்கள் அப்படி இல்லையே.. ஏன்?’ என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், என்னாலும் நடனம் ஆடத் தெரியும் என்பதை உணர்த்தவேண்டியிருந்தது. ‘கைடு’ படம்தான் என் நடனத் திறமையை வெளிப்படுத்தியது. ‘பியாசா’ படம், நான் ஒரு சீரியசான நடிகை என்ற தோற்றத்தைதான் கொடுத்தது.

இன்று நிறைய திரைப்பட விழாக்கள் நடக்கின்றன. அது அளவுக்கு அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

என்னைப் பொறுத்தவரை, சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துவது நல்லது என்றுதான் நினைக்கிறேன். அதன் மூலம்தான் நாம் பல்வேறு நாட்டு திரைப்படங்களை பார்த்து, அதை நோக்கி நெருங்கிச் செல்ல முடியும். காதல், மகிழ்ச்சி, துரோகம், துக்கம் என்று உலகெங்கும் உணர்ச்சிகள் ஒரே விதம்தான். அதை ஒவ்வொரு நாட்டினரும் கையாளும் விதம்தான் வித்தியாசமானது.

இந்தித் திரையுலகில் நன்கு புகழ்பெற்றிருந்த நிலையில் நீங்கள் சத்யஜித் ரேயின் வங்கமொழித் திரைப்படமான ‘அபிஜானில்’ நடிக்க ஒப்புக்கொண்டீர்கள். நீங்கள் ஏன் அப்படத்தைத் தேர்வு செய்தீர்கள்?

எனக்கு அபிஜான் பட வாய்ப்பு வந்தபோது, ஏற்கனவே சத்யஜித் ரே உலகப் புகழ் பெற்றிருந்தார். நான் அவரின் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தைப் பார்த்திருந்தேன். அதில் அவரது இயக்கம் பிடித்திருந்தது. எனவே எனக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நொடிகூட யோசிக்காமல் நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். கதை கூட கேட்கவில்லை. எனக்கு வங்கமொழி தெரியாது என்றபோதும் கொல்கத்தாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன். எனது கதாபாத்திரம் வங்கமொழி மட்டுமின்றி, இந்தி, பீகாரி, போஜ்புரி மொழிகளையும் பேச வேண்டும். எனக்காக இன்னொருவரை பேசவைத்து பதிவு செய்துகொள்ளலாம் என்று சத்யஜித் ரே கூறினார்.

‘லம்கே’ படத்துக்குப் பின் நீங்கள் 12 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்தது ஏன்?

நான் எனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தேன். எனது குழந்தைகள் கொடைக்கானலில் உறைவிடப் பள்ளியில் படித்துவந்தார்கள். நான் சின்னதாக ஒரு தொழிலை நடத்திவந்தேன். அதில் எனக்குத் திருப்தியும் நிறைவும் இருந்தன. நான் யஷ் சோப்ராவுடன் மட்டும் ஐந்து படங்களில் நடித்தேன். அவர் என் மீது மிகவும் அன்பாக இருப்பார். எனவே, ‘இந்த ஒரு படம் மட்டும்... இந்த ஒரு படம் மட்டும்’ என்று நினைத்தே, அவருடன் அடுத்தடுத்து நடித்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்கள் வராதபோது திடீரென்று இடைவேளை எடுத்துக்கொண்டேன். கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அவருடன் நான் மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். 2002-ல் ‘ஓம் ஜெய் ஜெக்தீஷ்’ படத்தில் நடிக்க அழைத்தார்கள். அப்போது நான் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் எனது கணவர் திடீரென இறந்துவிட்டார். அந்த சோகத்தில் இருந்து என் மனதை திசைதிருப்ப அந்தப் படத்தில் நடித்தேன்.

இன்று பெண்களை மையப்படுத்திய, நிஜ வாழ்க்கை சார்ந்த நிறையப் படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

அவை நன்றாய்த்தான் இருக்கின்றன. எளிமையான, சிறிய படங்களாக அவை இருப்பது கூடுதல் சிறப்பு. இன்று எல்லோருமே பிரமாண்டமாய் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒரு சாதாரணப் படத்திலும் ஒரு பெரிய நட்சத்திரம் தலை காட்டினால் அதற்கு முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் வெளிவருவதையும், வெற்றி அடைவதையும் பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். முன்பெல்லாம், திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்கள் காதலன்-காதலி, கணவன் - மனைவி, அண்ணன் - தங்கை இப்படித்தான் இருக்கும். தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் தாராள மனம் கொண்டவர்கள். அவர்கள் பலவித கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோன்ற நிலை இப்போது பாலிவுட்டுக்கும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

தற்போது பரபரப்பைக் கிளப்பிவரும் ‘மீ டூ’ இயக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்கள் காலங்களில் சினிமாவில் மூன்று பிரிவுகளில்தான் பெண்கள் இருந்தார்கள். நடிகை, சிகை அலங்கார கலைஞர், ஆடை வடிவமைப்பாளர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தான் பெண்கள் உண்டு. நான் ஓய்வெடுத்துவிட்டு 2002-ல் சினிமாவுக்குத் திரும்பி வந்தபோது இங்கே நிறையப் பெண்கள் இருப்பதைக் கவனித்தேன். உதவி இயக்குநர்கள், படத் தொகுப்பாளர்கள், ஒலிப் பதிவாளர்கள், கலை அமைப்பாளர்கள் என்று எல்லாமாகவும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளையும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லா குடும்பங்களில் இருந்தும் இன்று சினிமாவில் பணிபுரிய வருகிறார்கள். பெண்களுக்கு பாதிப்பு அனைத்து இடங்களிலும்தான் இருக்கிறது. ஆனால் சினிமா உலகின் மீது அதிக வெளிச்சம் விழுவதால் எல்லோருக்கும் தெரிகிறது.

Next Story