இளையராஜா கலைவிழாவில் நடிகர்-நடிகைகள் பங்கேற்பு நடிகர் விஷால் பேட்டி


இளையராஜா கலைவிழாவில் நடிகர்-நடிகைகள் பங்கேற்பு நடிகர் விஷால் பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 5:34 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜா கலை விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இளையராஜா கலை விழா நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடந்தது. அப்போது இளையராஜாவும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் பலூனில் பறந்தனர். இசை நிகழ்ச்சியும் நடந்தது.

பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி அடுத்த மாதம் (பிப்ரவரி) 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. பெரிய அளவில் பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெறும்.

முதல் நாள் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாட இருக்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் வரும் நிதியை தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவோம்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். மற்ற இசையமைப்பாளர்களும் வர இருக்கிறார்கள். அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவரையும் அழைத்து இருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Next Story