படமான உண்மை சம்பவம் “என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் நடந்துள்ளன” டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு


படமான உண்மை சம்பவம் “என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் நடந்துள்ளன” டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 8:34 PM GMT)

படவிழாவில் என் வாழ்க்கையிலும் சில அற்புதங்களை பார்த்த அனுபவம் இருக்கிறது என்று டைரக்டர் கே.பாக்யராஜ் பேசினார்.

“தயாரிப்பாளர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில், ‘கிரிஷ்ணம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

“கிரிஷ்ணம் படம் உண்மை சம்பவம் என்று தயாரிப்பாளர் கூறினார். குருவாயூரப்பன் அருளால் மகன் உயிர் பிழைத்த அதிசயத்தை சொன்னார். உண்மை கதைகள் எப்போதுமே மனசுக்கு நெருக்கமாக இருக்கும். குருவாயூரப்பன் அருள் பற்றி பேசும் படமாக ‘கிரிஷ்ணம்’ இருக்கும் என்று நம்புகிறேன்.

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்களை பார்த்த அனுபவம் இருக்கிறது. எங்க ஊரில் பைத்தியம் போல் பார்க்கப்பட்ட சாயம்மா என்ற பாட்டி, ஒருநாள் குறி சொல்லும் பெண்ணாக மாறி, குறி சொல்ல ஆரம்பித்தார். பலருக்கும் அது சரியாக இருந்தது. நாங்கள் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு வேறு ஊர் போனோம். மீண்டும் பலநாட்கள் கழித்து சாயம்மாவை பார்த்தபோது, என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது பற்றியெல்லாம் கூறினார். எங்களுக்கு ஆச்சரியம்.

என்னைப் பார்த்து, “நீ இன்னுமா இந்த ஊரை விட்டு போகவில்லை? இங்கே இருக்காதே. வெளியூர் போ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது சினிமா கனவில் இருந்தேன்.”

இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், டைரக்டர் தினேஷ் பாபு, கதாநாயகன் அக்‌ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள். முன்னதாக விழாவில், செண்டை மேளம் முழங்க கதகளி நடனம் நடைபெற்றது.

Next Story