கேரள ஓட்டலில் சர்ச்சை இந்தி டைரக்டருக்கு இனவெறி அனுபவம்?


கேரள ஓட்டலில் சர்ச்சை இந்தி டைரக்டருக்கு இனவெறி அனுபவம்?
x
தினத்தந்தி 29 Jan 2019 10:00 PM GMT (Updated: 29 Jan 2019 5:17 PM GMT)

கேரள ஓட்டலில் தனக்கு இனவெறி அனுபவம் ஏற்பட்டதாக பிரபல இந்தி இயக்குனர் குற்றம் சாட்டி உள்ளார்.

பிரபல இந்தி டைரக்டர் சஞ்சய் குப்தா. இவர் ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘காபில்’ படத்தை இயக்கி பிரபலமானார். ‘ஹூட் அவுட் அட் வாடாலா’, ‘ஜாஸ்பா’, ‘கான்டே’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் கேரள ஓட்டலில் தனக்கு இனவெறி அனுபவம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர், “கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று இருந்தேன். அதில் குறிப்பிட்ட டேபிள் காலியாக இருந்தது. ஆனால் அதை வெள்ளைக்காரர்களுக்கு ஒதுக்கி இருப்பதாக சொல்லி இந்தியர்கள் அதில் உட்கார அனுமதி மறுத்தனர். வாழ்க்கையில் முதல் தடவையாக இப்படி ஒரு இனவெறி அனுபவம் தனக்கு ஏற்பட்டது” என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பியது. இந்தியாவிலேயே இந்தியருக்கு எதிராக இனவெறியா? என்று சிலர் கண்டித்தனர். கேரளாவில் இனவெறி இல்லை. தவறாக இந்த கருத்தை பதிவிட்டுள்ளார் என்று சிலர் பேசினார்கள்.

இதற்கு ஓட்டல் நிர்வாகம் அளித்த விளக்கத்தில் “சஞ்சய் குப்தா குழுவினர் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததால் இருக்கை ஒதுக்க முடியவில்லை. அதே நாளில் 2 குழுவினர் இருக்கையை ரிசர்வ் செய்து இருந்தனர். ஓட்டல் சேவை சிறப்பாக இருப்பதால் நிறைய பேர் இங்கு வருகிறார்கள். சஞ்சய்குப்தா சில நிமிடங்கள்தான் அங்கு இருந்தார். கண்காணிப்பு கேமராவில் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்” என்று மறுத்துள்ளது.

Next Story