சம்பள விவகாரம்: சின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்


சம்பள விவகாரம்: சின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:54 PM GMT (Updated: 10 Feb 2019 10:54 PM GMT)

சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் அருகில் சின்னத்திரை இயக்குனர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

சின்னத்திரை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யும்படி வலியுறுத்தி சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் அருகில் சின்னத்திரை இயக்குனர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. சின்னத்திரை கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் தளபதி தலைமை தாங்கினார்.

உண்ணாவிரதத்தை டைரக்டர் பாக்யராஜ் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கும் இணை இயக்குனர்களுக்கும் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் நான் பேசுவேன். சினிமாவிலும் சின்னத்திரையிலும் சிலருக்கு மட்டும்தான் மார்க்கெட் இருக்கிறது. அவர்கள் உதவி இயக்குனர்கள் பற்றி சிந்தித்தால் பிரச்சினை இல்லை. குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும். உதவி இயக்குனர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்க முயற்சி செய்வேன்” என்றார்.

உண்ணாவிரதம் பற்றி சின்னத்திரை கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் தளபதி கூறியதாவது:-

“சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு இதுவரை சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. இதுகுறித்து சின்னத்திரை தயாரிப்பாளர்களிடம் 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். கடிதங்களும் எழுதினோம். தீபாவளிக்கு முன்பு பிரச்ச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்போது சம்பளம் பற்றி பேச தயார் இல்லை என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. இதனால்தான் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story