ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் பேச நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு


ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் பேச நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:43 PM GMT (Updated: 11 Feb 2019 10:43 PM GMT)

ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் பேச நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பட உலகை அதிர வைத்தார். 10 வருடங்களுக்கு முன்பு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ படத்தில் நடித்தபோது நானா படேகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியதாக அவர் புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த நானா படேகர் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்சினைக்கு பிறகு நானா படேகரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் நடித்து வந்த ஹவுஸ்புல்-4 படத்தில் இருந்து விலகினார். தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டுக்கு பிறகுதான் மீ டூ இயக்கம் இந்தியாவில் பிரபலமானது.

இந்தியாவில் ‘மீ டூ’ வில் முதன்முதலாக பாலியல் புகார் தெரிவித்த தனு ஸ்ரீதத்தாவுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் இந்திய மாநாடு நிகழ்ச்சியில் பேச அவரை அழைத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அங்கு படிக்கும் மாணவர்கள் செய்துள்ளனர். இதுபோல் டைரக்டர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் சிலரும் அழைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story