தியேட்டரில் ரூ.35 லட்சம் மோசடி? நடிகர் மகேஷ்பாபுக்கு நோட்டீஸ்


தியேட்டரில் ரூ.35 லட்சம் மோசடி? நடிகர் மகேஷ்பாபுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 5:48 PM GMT)

நடிகர் மகேஷ்பாபு, தியேட்டரில் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு ஐதராபாத்தில் உள்ள கச்சி பவுலி என்ற இடத்தில் சமீபத்தில் 7 தியேட்டர்களை கட்டி திறந்தார். 1600 பேர் அமரும் இருக்கைகள் 3டி, டால்பி, அட்மாஸ்பியர் ஒலி அமைப்பு என்று சர்வதேச தரத்தில் தியேட்டரை உருவாக்கி இருந்தார்.

கோல்டு டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாகவும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இங்கு ஹாலிவுட் படங்களும் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களும் திரையிடப்படுகின்றன. ஐதராபாத்தின் புதிய அடையாளமாக தியேட்டர் இருப்பதாக தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இந்த தியேட்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தன. ஆனால் மகேஷ்பாபுவுக்கு சொந்தமான இந்த 7 தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படவில்லை.

இதன்மூலம் ஒரு மாதத்தில் ரூ.35 லட்சம் அதிகம் சம்பாதித்தாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தியேட்டரில் சோதனை நடத்தினர். பின்னர் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகளை மீறியதாக விளக்கம் கேட்டு மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வழக்குப்பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story