இரட்டை அர்த்த வசனத்துடன் “அரைகுறை உடை அணிந்து ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?” நடிகை ஓவியா பேட்டி


இரட்டை அர்த்த வசனத்துடன் “அரைகுறை உடை அணிந்து ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?” நடிகை ஓவியா பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2019 12:00 AM GMT (Updated: 26 Feb 2019 10:23 PM GMT)

“90 எம்.எல். படத்தில் அரைகுறை உடையணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?” என்பதற்கு நடிகை ஓவியா விளக்கம் அளித்தார்.

சென்னை, 

ஓவியா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘90 எம்.எல்.’ படத்தை ‘அழகிய அசுரா’ என்ற பெண் டைரக்டர் இயக்கியிருக்கிறார். இவருடைய உண்மையான பெயர், அனிதா உதீப். ‘90 எம்.எல்.’ படத்துக்காக தனது பெயரை, ‘அழகிய அசுரா’ என்று மாற்றியிருக்கிறார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாச காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி ஓவியா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஓவியா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘90 எம்.எல்.’ படத்தில் அரைகுறை உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்திருப்பது ஏன்?

பதில்:- ஆபாசம் என்று எதை கூறுகிறீர்கள்? பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன கேட்டதோ, அதைத்தான் செய்து இருக்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. சினிமா தியேட்டர்களில் புகை பிடித்தால் என்ன வரும்? என்பதை பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை.

கேள்வி:- கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் உள்ள இடைவெளி எது என்று கூற முடியுமா?

பதில்:- நீங்கள் பார்க்கிற கோணத்தில்தான் அந்த இடைவெளி இருக்கிறது. சினிமா, பொழுதுபோக்கு சாதனம். அதில், பொழுதுபோக்கு அம்சங்களை காட்டுவதில் தப்பு இல்லை. எனக்கென்று ரசிகர்கள் ஒரு இடம் வைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். இது, ஜாலியான படம். பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது என்ற கருத்து இந்த படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். காதலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கல்யாணத்தில், ‘அது’ இல்லை.

கேள்வி:- சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அரசியலுக்கு வந்துவிடுகிறார்களே... அதுபோல் உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?

பதில்:- என்னையும் 4 பேர் அரசியலுக்கு கூப்பிட்டார்கள். எனக்கு அந்த ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்.”

இவ்வாறு ஓவியா கூறினார்.

பேட்டியின்போது டைரக்டர் அழகிய அசுரா உடன் இருந்தார்.

Next Story