சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, நயன்தாராவும், விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேருவார்களா? (பி.விக்ரமன், சென்னை–1)

இருவரும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதுடன், தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தது. அதனால் இருவரும் மீண்டும் ஜோடி சேருவதில் ‘சிக்கல்’ எதுவும் இருப்பதாக தெரியவில்லை!

***

ஓவியாவிடம் மட்டுமே உள்ளது...வேறு எந்த கதாநாயகியிடமும் இல்லாத நல்ல குணம் எது? (எஸ்.பிரபாகரன், திருச்சி)

ஓவியாவின் மார்க்கெட் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்து விட்டாலும், சம்பளத்தை கோடிகளில் உயர்த்தவில்லை. அவருடைய தற்போதைய சம்பளம், ரூ.80 லட்சம். படம் ஓடாவிட்டால், வாங்குகிற சம்பளத்தில் பாதியை தயாரிப்பாளருக்கு விட்டுக்கொடுத்து விடுகிறாராம். இதை விட, நல்ல குணம் யாருக்கு இருக்கிறது?

***

குருவியாரே, பொள்ளாச்சி சம்பவங்களை கருவாக வைத்து படம் தயாராகிறதா, இல்லையா? (கே.செல்வகுமார், வேலூர்)

பொள்ளாச்சி சம்பவங்களை மையப்படுத்தி படம் எடுக்க 2 தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். யார் முந்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

***

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆகிவிட்ட ஜீ.வி.பிரகாஷ் நிறைய படங்களை கையில் வைத்து இருக்கிறாராமே...அவர் கைவசம் எத்தனை படங்கள் உள்ளன? (கே.தன்வீர் அகமது, பொள்ளாச்சி)

ஜீ.வி.பிரகாஷ் கைவசம் 10 படங்களை வைத்து இருக்கிறார்! மேலும் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறதாம்!

***

குருவியாரே, ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகம் தயாரானது போல், ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? (பி.சி.அன்புக்கரசு, நாகர்கோவில்)

சுந்தர் சி. மனது வைத்தால், ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் வெளிவரும்! பேய்களின் ஆட்டம் அமர்க்களமாக இடம் பெறும்!

***

சாய்பல்லவியை டைரக்டர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறாராமே...அது உண்மையா? (சி.ஆர்.குமாரவேல், காஞ்சிபுரம்)

‘‘உண்மை அல்ல...அது வெறும் வதந்தி’’ என்கிறார், டைரக்டர் விஜய்!

***

குருவியாரே, ராஷிகன்னா என்று ஒரு புதுமுக நாயகி தமிழ் பட உலகில் பரபரப்பாக முன்னேறி வருகிறாராமே? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? (கே.ராம்சுந்தர், குமாரபாளையம்)

ராஷிகன்னா, மும்பையை சேர்ந்தவர். மும்பை நடிகைகளுக்கே உரிய தாராள மனப்பான்மை ராஷிகன்னாவிடம் இருப்பதால், நிறைய பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறதாம்!

***

‘மீ டு,’ விளம்பரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தமன்னா கூறுகிறாராமே? (ஜி.கோபால், பண்ருட்டி)

தமன்னா பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படவில்லையாம். அவர் தன் சொந்த அனுபவத்தை வைத்து கருத்து சொல்லியிருக்கலாம்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில், சமீபகாலத்தில் வெற்றி பெற்ற வாரிசு நடிகை யார்? (இர.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

கீர்த்தி சுரேஷ்! இவர், பழைய கதாநாயகி மேனகாவின் மகள் ஆவார்!

***

மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன்கள் படங்களில் நடிக்கவில்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? (என்.வேணி, திருவண்ணாமலை)

ஜெய்சங்கரின் மகன்கள் சினிமாவில் நடிக்கவில்லை. அவருடைய ஒரு மகன் டாக்டர்; இன்னொரு மகன் வழக்கறிஞர்!

***

குருவியாரே, நடிகை சீதா இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லையே...சினிமாவில் இருந்து அவர் விலகி விட்டாரா? (இரா.பாஸ்கர், கொண்டலாம்பட்டி)

சீதா, சினிமாவை விட்டு விலகவில்லை. அவருக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அப்படி பொருத்தமான கதைகளும், கதாபாத்திரங்களும் அமைந்தால், நிச்சயமாக நடிப்பாராம்!

***

அஜித்குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ எந்த நிலையில் உள்ளது? படம் எப்போது திரைக்கு வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தின் எடிட்டிங், டப்பிங், ரீரிக்கார்டிங் வேலைகள் நடைபெறுகின்றன. படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது!

***

குருவியாரே, மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் விக்ரம் கெட்டிக்காரரா? விஜய் சேதுபதி கெட்டிக்காரரா? (எஸ்.ஜேம்ஸ், ஊட்டி)

விக்ரம்தான் கெட்டிக்காரர் என்று விஜய் சேதுபதியே கூறுவார்!

***

‘சார்லி சாப்ளின்–2’ படத்தில் இடம்பெற்ற ‘‘சின்ன மச்சான்...செவத்த மச்சான்’’ பாடலை எழுதியவர் யார்? (எல்,விஜய் முரளி, திண்டுக்கல்)

அந்த பாடலை எழுதியவர், செல்ல தங்கையா. இவர், ‘கரிமுகன்’ படத்தை டைரக்டு செய்தவர்!

***

குருவியாரே, திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே...ஏன்? (செல்வமுத்து, திருப்பூர்)

விளம்பர படங்களில் நடித்தால், குறைந்த நாட்களில், நிறைந்த சம்பளம் கிடைக்கிறதாம். அதுவே நடிகர்–நடிகைகள் ஆர்வம் காட்ட காரணம்!

***

பெரும்பாலான நடிகைகள் பெரும் தொழில் அதிபரையே மணக்க விரும்புவது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

வசதியான வாழ்க்கையை பெரும் தொழில் அதிபர்களால்தான் தர முடியும் என்று பெரும்பாலான நடிகைகள் நம்புவதே இதற்கு காரணம்!

***

குருவியாரே, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா நடிப்பை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறதே...அதற்கு காரணம் என்ன? (கே.வி.சீனிவாசன், புதுச்சேரி)

அந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சியும், அது தொடர்பான வசனங்களும்தான் காரணம். கவர்ச்சி நடிகைகளே நடிக்க–பேச தயங்கும் அந்த காட்சியில், சமந்தா துணிச்சலாக நடித்து இருந்தார்!

***

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்பது உண்மையான தகவல்தானா? (எம்.ராஜா, தேனி)

உண்மையா, பொய்யா? என்று ஐஸ்வர்யாராய் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதை அவர் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை!

***

குருவியாரே, ஆண்ட்ரியா சைவமா, அசைவமா? (எச்.நேரு, லால்குடி)

‘சைவம்’ என்ற வார்த்தையே ஆண்ட்ரியாவுக்கு பிடிக்காதாம். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா வகையான அசைவ உணவையும் ருசித்து சாப்பிடுவாராம்!

***

அமலாபால் விரும்பி கவர்ச்சியாக நடிக்கிறாரா, விருப்பம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க வைக்கப்படுகிறாரா? (டி.ஜெயபால், பெரியகுளம்)

வற்புறுத்தி நடிக்க வைப்பதற்கு அமலாபால் சின்ன குழந்தை அல்ல!

***