நகைச்சுவை கதையில் நடிக்க விருப்பம் தில்லுமுல்லு 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த்?


நகைச்சுவை கதையில் நடிக்க விருப்பம் தில்லுமுல்லு 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த்?
x
தினத்தந்தி 15 April 2019 4:56 AM IST (Updated: 15 April 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை சட்டமன்ற தேர்தலுக்கு தள்ளிவைத்து விட்டு புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா படங்களிலும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்திலும் நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘பேட்ட’ படம் வந்தது.

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்தி விட்டு சென்னை திரும்பி இங்கேயும் சில காட்சிகளை எடுக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வருகிறார். படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத் ஆகியோரை மும்பை புறப்படுவதற்கு முன்பு ரஜினி சந்தித்து பேசினார். எனவே அடுத்து இவர்கள் இயக்கும் படங்களில் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாராவின் காதலரும் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் இயக்குனருமான விக்னேஷ் சிவன் மும்பையில் ரஜினிகாந்தை சந்தித்து பேசி உள்ளார்.

இருவரும் புதிய நகைச்சுவை படமொன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலசந்தர் இயக்கத்தில் 1981-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தில்லுமுல்லு படத்தின் சாயலில் நகைச்சுவை படமொன்றில் நடிப்பது ரஜினிகாந்த் விருப்பமாக உள்ளது. தில்லுமுல்லு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினிகாந்துடன் விக்னேஷ் சிவன் ஆலோசித்ததாக பட உலகில் தகவல் பரவி உள்ளது.

Next Story