சினிமா செய்திகள்

பட தயாரிப்பு தொழிலில் இறங்கிய நடிகைகள் + "||" + Actresses came in film production industry

பட தயாரிப்பு தொழிலில் இறங்கிய நடிகைகள்

பட தயாரிப்பு தொழிலில் இறங்கிய நடிகைகள்
நடிகைகளும் பட தயாரிப்புக்கு வருகிறார்கள்.
நடிகர்கள் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்து தயாரிப்பாளர்களாக மாறுவது வழக்கமானது. ரஜினிகாந்த் வள்ளி படத்தை தயாரித்தார். கமல்ஹாசன், சூர்யா, விஷால், தனுஷ் என்று பல நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறியவர்கள் பட்டியலில் உள்ளனர். இப்போது நடிகைகளும் பட தயாரிப்புக்கு வருகிறார்கள்.

சம்பளம் வாங்குவது மட்டுமல்ல நாங்களும் கொடுக்கிறோம் என்ற ரீதியில் முதலாளிகளாக அவர்கள் மாற தொடங்கி உள்ளனர். தமிழ், தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் வெற்றி படங்கள் பட்டியல் நீளமானது. அவர் இப்போது தயாரிப்பிலும் இறங்குகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா டைரக்டு செய்யும் படத்தை காஜல் அகர்வால் தயாரிக்கிறார். பட வாய்ப்பு இல்லாமல் தயாரிப்புக்கு வருகிறாரா என்றால் இல்லை. இப்போதும் ஆறேழு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். அமலாபாலும் தயாரிப்பாளராக மாறிவிட்டார். அனூப் பணிக்கர் இயக்குனராக அறிமுகமாகும் ‘கடவேர்’ என்ற திகில் படத்தை தமிழ், மலையாள மொழிகளில் தயாரிக்கிறார்.

கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் அமலாபாலே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் அவர்.

குறைந்த நாட்களில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திய சுருதிஹாசனும் தந்தை வழியில் த மஸ்கிட்டோ பிளாசா படத்தை தயாரித்தார். கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி-2 படங்களை இயக்கிய ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா 2010-லேயே கோவா படத்தை தயாரித்துள்ளார். இப்போது பொன்னியின் செல்வன் வெப் தொடரை தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள சார்மி இப்போது 2 படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். இந்தியில் பிரியங்கா சோப்ரா ‘வென்டிலேட்டர்’ படத்தில் தயாரிப்பாளராகி தேசிய விருது பெற்றார். அனுஷ்கா சர்மாவும் படம் தயாரித்துள்ளார்.

இப்போது தீபிகா படுகோனேயும் தயாரிப்புக்கு வந்து இருக்கிறார். டெல்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுவரா பாஸ்கரும், தம்பி இஷான் பாஸ்கருடன் சேர்ந்து பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகி உள்ளார்.

கங்கனா ரணாவத்தும் படம் தயாரிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

சோனம் கபூர், அலியாபட்டும் எதிர்காலத்தில் தயாரிப்பாளராகும் எண்ணத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.