சினிமா செய்திகள்

தெரிந்த வில்லன் தெரியாத வரலாறு + "||" + The villain was the 'unique', the film's specialty

தெரிந்த வில்லன் தெரியாத வரலாறு

தெரிந்த வில்லன் தெரியாத வரலாறு
வில்லன் ‘தனி ஒருவனாக’ நின்று புரட்டி எடுத்ததுதான், அந்த படத்தின் சிறப்பு
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படி ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்ததோ, அதேபோன்ற ஒரு எதிர்பார்ப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்திய திரைப்படம்தான், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’. மார்வெல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ‘வேற லெவல்’ திரைப்படங்களாகவே இருக்கும் என்றாலும், கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படம் ‘அதுக்கும் மேல’ ரகமாகிவிட்டது. ஏனெனில் வில்லன்களை புரட்டி எடுக்கும் சூப்பர் ஹீரோ கூட்டத்தையே, ‘தானோஸ்’ என்ற ஒரு வில்லன் ‘தனி ஒருவனாக’ நின்று புரட்டி எடுத்ததுதான், அந்த படத்தின் சிறப்பு.

பூமிக்கு வந்து சூப்பர் ஹீரோக்களை புரட்டி எடுத்த கையோடு, பூமியில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையில் பாதியை ‘ஒரு சொடக்கில்’ அழித்துவிட்டு சென்றுவிடுவார். தானோஸின் கை அசைவில் அழிந்த மக்களில் சில அவெஞ்சர்கள் இருந்தது தனி கதை என்றாலும், மிஞ்சி இருக்கும் அவெஞ்சர்கள் எப்படி தானோஸை அழிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான், சமீபத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ திரைப்படம் எல்லா திரையரங்கிலும் ‘ஹவுஸ் புல்’லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் பரபரப்பு ‘தீ’யை பற்ற வைத்திருக்கும் ‘தானோஸ்’ வில்லன், நிஜ வாழ்க்கையில் சாந்த சொரூபி. படத்தில் அதிரடி காட்டினாலும், நிஜ மனிதராக அமைதி காக்கிறார். ‘தானோஸ்’ என்ற கிராபிக்ஸ் கதாபாத்திரத்தை மட்டுமே பார்த்து வரும் நாம், அந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்குள் ஒளிந்திருக்கும் ஜோஷ் பிேராலின் என்ற நடிகரை பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும். எம்.ஐ.பி. திரைப்படத்தில் வில் ஸ்மித் நடிகரின் குருவாக வரும் ‘ஏஜெண்ட் கே’ தான் இன்று தானோஸ் வில்லனாக கலங்கடித்து வருகிறார். இவரை வேறு சில திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள்.

தானோஸ் பற்றி பல விஷயங்கள் தெரிந்த நமக்கு, தானோஸ் ஆக நடித்த ஜோஷ் பிராலின் பற்றிய விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை தெரிந்து கொள்ளும் ஒரு பயணம்தான், இந்த கட்டுரை.

‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படத்தில், டைட்டன் கிரகத்தில் இருந்து வந்து அவெஞ்சர்களை பந்தாடிக்கொண்டிருக்கும் கொடூர வில்லனான தானோஸிற்கு, நிஜ வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிளாஷ் பேக் இல்லை. நம்முடைய சினிமா நண்பர்கள் சொல்லும் அதே சோக கதைதான் ஜோஷ் பிராலினின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. விடாமுயற்சி, பல அவமானங்கள்... என தாமதமாகவே இவர், ஹாலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

இவரது முழு பெயர் ஜோஷ் ஜேம்ஸ் பிேராலின். இவரது அப்பா ஜேம்ஸ் பிேராலினும் ஹாலிவுட் நடிகரே. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1968-ம் ஆண்டு பிறந்தவர். இவரது இன்றைய வயது, 51.

அப்பா திரைபிரபலம் என்றாலும், ஜோஷிற்கு ஹாலிவுட்டில் அந்தளவிற்கு வரவேற்பு இல்லை என்றே சொல்லவேண்டும். இருப்பினும் அவரது சொந்த முயற்சியில் ஹாலிவுட் கோட்டையின் படிக்கட்டுகளில் நிதானமாக ஏறிக்கொண்டிருந்தார்.

இவரது முதல் திரைப்படம் ‘தீ கூனீஸ்’. இது 1985-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு முன்பு, சினிமா வாய்ப்பு தேடி அலைந்தே 5 வருடங்களை கழித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகும், ஜோஷிற்கு சரிவர சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ‘பெட் ரோசஸ்’, ‘மிமிக்’, ‘தி மாட் ஸ்வாட்’, ‘ஹாலோ மேன்’, ‘இன் டூ த புளூ’... என இவரது நடிப்பு வாழ்க்கை சிறுசிறு இடைவெளிகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது.

முதல் படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் திரைப்படங்களில் ஜோஷ் நடிக்காததால், அவரது நடிப்பு வாழ்க்கை மங்கிவிட்டது என்றே சொல்லலாம். நீண்ட இடைெவளிக்கு பிறகு 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹாலோ மேன்’ திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும், வில்லனாக நடித்த கெவின் சிறப்பாக நடித்ததால், ஜோஷ் பிராலினின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அதனால்தான் ஜோஷின் நடிப்பு வாழ்க்கை, புயலில் சிக்கிய பட்டம் போல ஊசலாடிக்கொண்டிருந்தது.

இருப்பினும் 2007-ம் ஆண்டு ஜோஷிற்கு ‘கிரைண்ட் ஹவுஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசித்திருக்கும் குழந்தை போல, பல வருடங்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை ஜோஷ் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதனால் ஜோஷின் நடிப்பு பலராலும் சிலாகிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2007-ம் ஆண்டிலேயே ‘வேல்லி ஆப் இயா’, ‘நோ செஞ்சரி பார் ஓல்ட்மேன்’ மற்றும் ‘அமெரிக்கன் கேங்ஸ்டர்’ திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1986-ம் ஆண்டில் நடிப்பு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த, தானோஸ் நடிகர் ஜோஷிற்கு 2007-ம் ஆண்டிலிருந்துதான் நல்ல காலம் பிறந்தது.

2007-ம் ஆண்டில் ஜோஷின் முகம் 4 திரைப்படங்களில் மின்னியதால், 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘டபிள்யூ’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஜோஷிற்கு புதுவிதமான தோற்றத்தை, ஹாலிவுட்டில் உண்டாக்கியது. அதுவரை அதிர்ஷ்டம் இல்லாத நடிகராக பேசப்பட்ட ஜோஷ், ‘டபிள்யூ’ திரைப்படத்திற்கு பிறகு பல இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1985-ம் ஆண்டு இளைஞனாக நடிக்க தொடங்கிய ஜோஷ், 2008-ம் ஆண்டில்தான் நல்ல நடிகராக அங்கீகரிக்கப்பட்டார் என்றால், அவரது வயதை சிந்தித்து பாருங்கள். இம்முறை நல்ல நடிப்பு திறன் வெளிப்பட்டும், வயது காரணங்களினால் ஜோஷிற்கு கிடைக்க இருந்த பல திரைப்படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. மீண்டும் 3 வருடங்கள்... வெறுமையாகவே கழிந்தன.

2012-ம் ஆண்டு எம்.ஐ.பி. திரைப்படத்தில், வில் ஸ்மித் நடிகருக்கு குருவாக, ‘ஏஜெண்ட் கே’ கதாபாத்திரத்தில் தோன்றி, தன்னுடைய வருகையை ஹாலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பதிவு செய்து கொண்டார்.

எம்.ஐ.பி. வரிசை திரைப்படங்களின் வேலைகள் ஒருபுறம் நடக்க, ஜோஷை தேடி ஆக்‌ஷன் கதைகள் வர ஆரம்பித்தன.

அதுவரை அப்பாவி நடிகராகவும், சென்டிமெண்ட் நடிகராகவும் பேசப்பட்ட ஜோஷ், 2013-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர் ஸ்கூவாட்’ திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதேசமயம் எம்.ஐ.பி. வரிசை படங்களிலும் இவரது ஆக்‌ஷன் அவதாரம் மெருகேறியிருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் மார்வெல் நிறுவனத்தின் சார்பாக, சில பிரதிநிதிகள், ஜோஷை சந்தித்து தானோஸ் கதாபாத்திரம் பற்றி பேசியிருக்கிறார்கள். இது நடந்தது, 2014-ம் ஆண்டில். ஆனால் தானோஸாக நடிக்க இருந்தது, 2017-ம் ஆண்டில். இருப்பினும் ‘முதலீடு’ அடிப்படையில் நாம் நிலம் வாங்கி போடுவதை போன்று, ஜோஷ் 2014-ம் ஆண்டில் தானோஸாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஒப்பந்தத்தோடு சரி, ஜோஷிற்கும், மார்வெல் நிறுவனத்திற்குமான தொடர்பு இல்லாமல் இருந்தது. ஜோஷ் இதை பெரிதாக நினைக்கவில்லை. ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படத்தில் தானோஸ் எப்படி திடீரென பூமியில் குதித்து சூப்பர் ஹீரோக்களை மிரட்சியில் ஆழ்த்துவாரோ, அதேபோன்ற ஒரு சம்பவம் ஜோஷின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

2016-ம் ஆண்டு மார்வெல் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஜோஷை அவசர அவசரமாக தொடர்பு கொண்டு, 10 நாட்களில் படப்பிடிப்பு இருப்பதாக கூறி, அதிர்ச்சி வைத்தியம் ெகாடுத்திருக்கிறார்கள். காணாமல் போன சில பொருட்கள் கிடைத்தாலும் பிரச்சினை, கிடைக்காமல் போனாலும் பிரச்சினை என்பதை போன்று, ஜோஷிற்கு தானோஸ் வாய்ப்பினால் பல சிக்கல்கள் உண்டாகின.

அவர் நடித்துக்கொண்டிருந்த ஒரு ஆஸ்திரேலிய குறும்படத்தை, தானோஸ் கதாபாத்திரத்திற்காக பாதியில் நிறுத்திவிட்டு, அதற்கான நஷ்டஈட்டையும் வழங்கியிருக்கிறார். அதற்கு பிறகுதான் தானோஸாக உருமாறினாராம். அந்த எரிச்சலில் கூட, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் மனிதர்களை அழித்திருக்கலாம் போலும்.

இதற்கு பிறகுதான் டெட்பூல் திரைப்படத்தில் கேபிள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். டெட்பூல் திரைப்படத்தில் பலர் விசித்திர நாயகர்களாக நடித்திருந்தாலும், ஜோஷின் நடிப்பில் தனித்துவம் மிளிர்ந்தது.

1985-ம் ஆண்டிலிருந்து ஜோஷ் எத்தகைய கதாபாத்திரத்தை தேடினாரோ, அதுவாகவே தானோஸ் கதாபாத்திரம் அமைந்தது. வில்லனாக, தன்னுடைய கருத்தில் ஒரு ஹீரோவாக, சூப்பர் ஹீரோக்களையே புரட்டி எடுக்கும் கொடூரனாக, பாசத்திற்கு கட்டுப்படாத மிருகமாக... தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரே படத்தில்... ஊர் மெச்சும் வில்லனாக மாறிவிட்டார்.

நடிகர் ஜோஷ், தன்னுடைய முதல் இன்னிங்சில் சரிவர விளையாடாமல் இருந்தாலும், 51 வயதில் கிடைத்த 2-வது இன்னிங்ஸை கனகச்சிதமாக விளையாடி இருக்கிறார். அதனால்தான், திரையில் தானோஸாக பயமுறுத்துகிறார், பதறவைக்கிறார், அவெஞ்சர்களை பதம் பார்க்கிறார். இந்த திரைப்படத்தோடு தானோஸின் கதை முடிந்தாலும், நடிகர் ஜோஷிற்கு நடிப்பு வாழ்க்கையில் ஒரு பெரிய பிள்ளையார் சுழி விழுந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதனால் நம்ம கோபக்கார தானோஸ் நடிகரை இனி, ஹாலிவுட்டின் பிரபல ஆக்‌ஷன் திரைப்படங்களிலும் பார்க்கலாம்.

காதல் மன்னன்

அவெஞ்சர்களை அச்சுறுத்தும் தானோஸ் கதாபாத்திரமாக
தானோஸ் கதாபாத்திரம் குடும்பம், சென்டிமெண்ட் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடமாட்டார். ஆனால் ஜோஷ் பெரிய காதல் மன்னனாம். 1988-ம் ஆண்டு அலைஸ் அடைர் என்ற நடிகையை திருமணம் முடித்தார். ஆனால் 1994-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு, நடிகை மினி டிரைவர் என்பவரை காதலித்திருக்கிறார். பின்னர் 2004-ம் ஆண்டு டையான லேன் என்ற நடிகையை திருமணம் முடித்து, 2013-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். 2015-ம் ஆண்டில் இருந்து கேத்ரீன் போய்ட் என்ற மாடல் அழகியை காதலித்து வருவதாக கூறுகிறார்கள்.